இந்தியா

மெய்யான தேசியம், உழைப்பின் வியர்வையில் உயிர் வாழ்கிறது!

கட்சிப் பேராயத்தில் வரவேற்புக் குழுத் தலைவர் டாக்டர் ஸ்வராஜ்பீர் சிங் வரவேற்புரை

நாடு முழுவதிலுமிருந்து வரும் அன்பான தோழர்களே, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சகோதரத்துவக் கட்சியினரே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநாட்டின் பிரதிநிதிகளே, சகோதரிகளே, சகோதரர்களே, ஐந்து நதிகள் பாயும் இந்த பஞ்சதீரத்துக்கு வருக,

பண்டைய காலத்திலிருந்தே நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த நிலத்திற்கு வருக,

குருநானக் தேவ் ஜி, பாபா ஷேக் ஃபரித், புல்லே ஷா, தாமோதர் மற்றும் துல்லா பட்டி ஆகியோரின் நிலத்திற்கு வருக,

1907 இல் பக்ரி சம்பல் ஜட்டாவிலிருந்து, மூன்று பிற்போக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் விவசாயிகள் எழுச்சி நிகழ்ந்த 2020—&21 வரை, மக்கள் எதிர்ப்பு இயக்கங்களின் நிலத்திற்கு வருக,

20 ஆம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் அதிக எண்ணிக்கையிலான தியாகிகளைத் தந்த, கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அடித்தளமிட்ட கட்சியான, ‘கதர் கட்சி’யின் நிலத்திற்கு வருக.

கர்தார் சிங் சரபா, பீபி குலாப் கவுர், ரெஹ்மத் அலி வஜிட்கே, பகத் சிங், சுக்தேவ், உத்தம் சிங் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் நிலமான ஜாலியன் வாலாபாக் பூமிக்கு வருக.

அன்புள்ள தோழர்களே, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் 25வது பேராயத்தின் வரவேற்புக் குழு சார்பாக, பஞ்சாப் மாநிலக் குழு, பஞ்சாப் மற்றும் சண்டிகர் மக்களின் சார்பாக, உங்கள் அனைவரையும் சண்டிகரில் உள்ள தோழர் சுதாகர் ரெட்டி நகரில் நடைபெறும் பேராயத்தின் தொடக்க அமர்வுக்கு வரவேற்கிறேன்.

100 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முறையாக உருவானது. 1924 ஆம் ஆண்டு கான்பூர் சதி வழக்கின் நாட்களில் இருந்து, நமது தோழர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி மரண தண்டனைகள், ஆயுள் தண்டனைகள், நிலம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுதல் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு எண்ணற்ற தியாகங்களைச் செய்தனர்.

பிரிவினையின் போது, நமது தோழர்கள் வகுப்புவாத வெறி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக, ஒரு அரணாக நின்று ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர். அதனால்தான் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, கெஹல் சிங் சஜல்வாதி போன்ற போர்வீரர்கள் பலரது நினைவுகள் மக்களின் மனதில் உயிரோடு உள்ளன.

1947 முதல், கட்சி அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மூலதனத்தின் தாக்குதலுக்கும் எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், கடின உழைப்பாளி மக்களை அணிதிரட்டியுள்ளது.

தோழர் தேஜா சிங் சுதந்தர், ஜாகிர் சிங் ஜோகா தலைமையிலான பஞ்சாபின் குத்தகை விவசாயிகள் இயக்கம், தரம் சிங் ஃபக்கர், சாஜு மால் வைத் மற்றும் பலர், தெலுங்கானா இயக்கம் போன்ற வீரம்மிக்கப் போராட்டங்களில் தோளோடு தோள் நிற்கிறார்கள். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

அன்புள்ள தோழர்களே, இந்திய அரசியலில் சர்வாதிகார, பாசிசத்தின் கொள்ளை நோய் தலைதூக்கியிருக்கும் ஒரு கடினமான காலகட்டத்தில் நாம் சந்திக்கிறோம். குறிப்பாக வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் பரந்த மக்களின் மனதை வகுப்புவாதமயமாக்குவதில் இது வெற்றி பெற்றுள்ளது. நமது அன்புக்குரிய நாட்டின் சமூகக் கட்டமைப்பைத் துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆபத்தான அணுகுமுறை மற்றும் போக்குகளை எதிர்த்துப் போராடுவதே நமது பணி.

இன்று, வகுப்புவாதம், சலுகை சார்ந்த முதலாளித்துவம் மற்றும் நவ-தாராளமயம் ஆகியவை கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளை ஒடுக்கவும், மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் நமது மக்களைப் பிரித்து, துண்டுகளாக்கி ஓரங்கட்ட முனைந்து செயல்படுகின்றன. தீவிர தேசியவாதம் என்ற பெயரில் ஒரு ஆபத்தான அரசியல் விளையாட்டு இங்கு அரங்கேறுகிறது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பின் பிற நிறுவனர்களால் நமக்கு வழங்கப்பட்ட நமது அரசியலமைப்பின் அடித்தளமான மதச்சார்பற்ற தேசியத்தை இது சிறுமைப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான தற்போதைய அரசு, மக்களைத் தனக்குச் சாதகமாகப் பிரிப்பதற்கும், எதிர்க் குரல்களை அடக்குவதற்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது. கருத்து வேறுபாடும், எதிர்ப்பும் இல்லாத மனித இருப்பு, வெறும் குப்பையாகும். அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், இடது சக்திகள், கருத்து வேறுபாடு மற்றும் ஆட்சேபணைக் குரலை எழுப்பும் உரிமையை அங்கீகரிப்பவை, செயல்படுத்துபவை.

இந்தப் பாசிச எழுச்சிக்கு எதிராக நாட்டின் அனைத்து இடது, ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பதே நமது நோக்கம். இதற்கு, இடதுசாரி ஒற்றுமை மிகவும் அவசியமானது, அடிப்படையானது.

பிஜேபி அரசு, நாடு முழுவதும், குறிப்பாக மணிப்பூர் மற்றும் காஷ்மீரில் அதன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைப் பரப்பியுள்ளது, இது நீண்டகால துயரத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அமைப்பு பல வண்ணங்களிலும் தன்னை வெளிப்படுத்துகிறது; ஒருபுறம் அது இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அதன் விருப்பமான முதலாளித்துவவாதிகளின் காலடியில் உள்ளது. மறுபுறம் அது நாட்டின் அரசியலை இந்துத்துவத்தால் விழுங்க விரும்புகிறது. அது மக்களுக்கு வெகுஜன வெறியை விற்கிறது, மேலும் தேசியவாதம் என்ற பெயரில் அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக்க முனைகிறது. அதன் தேசியவாதம் உண்மையான தேசியவாதம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். உண்மையான தேசியவாதம் இந்தியாவின் உழைக்கும் மக்களின் இதயங்களில் உள்ளது, அவர்களின் கடின உழைப்பு நமது பொருளாதாரத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது. உண்மையான தேசியவாதம் அவர்களின் கடின உழைப்பில், வியர்வையில்தான் உயிர் வாழ்கிறது.

தேர்தல் செயல்முறை மற்றும் அதன் வெற்றிகளை தேசியவாதச் சாயல்களில் முன்வைக்கிறது. அதேநேரத்தில் அத்தகைய வெற்றிகள் உண்மையில் நமது மக்களைப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. ஆளும் கட்சியால் மக்கள் மீது திணிக்கப்படும் தேசியவாதத்தின் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல், நமது சுதந்திரப் போராட்டத்தின் போக்கில் உருவான இந்தியா எனும் கருத்தாக்கத்திற்கே எதிரானது. வகுப்புவாதத்தைக் கொதிக்க வைப்பதும், சிறுபான்மைச் சமூகத்தை அரக்கத்தனமாகச் சித்தரிப்பதும் அரசின் முக்கிய உத்தியாகும். நாம் அதை எதிர்த்துப் போராடி முறியடிப்பது நமது கடமையாகிறது.

பாஜக தலைமையிலான, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இன்றைய ஆட்சி, நாட்டை ஆள்வதில் திருப்தியடையவில்லை. அது அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் நுழைந்து அவற்றைக் கைப்பற்றியுள்ளது. நமது அரசியலமைப்பின் அடிப்படைகளை அழித்துத் சிதைத்து, அவற்றை அதன் சொந்தப் பிம்பத்தில் மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதை அவர்கள் இந்து ராஷ்ட்ரம் என்கிறார்கள். இது மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமித்து வருகிறது, கூட்டாட்சி முறைமை விரைவாக அரிக்கப்பட்டு வருகிறது. இது மாநிலங்களுக்கு உரிய வளங்களைப் பறித்து, மக்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான இந்த வெறியின் காரணமாக, தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் கூட நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன.

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை அரசு கைகழுவுகிறது. பொதுமக்களுக்கு எந்தச் சமூகப் பாதுகாப்பு வலையும் இல்லை. கல்வித்துறை மிகவும் காவிமயமாக்கப்பட்டுள்ளது, மாணவர்களுக்குத் தவறான வரலாற்றுக் கதைகள் கற்பிக்கப்படுகின்றன. வேலையின்மை உச்சத்தை எட்டியுள்ளது. இது இளைஞர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சமூக ஊடக தளங்களின் வழியாக வகுப்புவாத நஞ்சு ஊட்டப்படுகிறது.

இந்த முக்கியமான துறைகளில் பொதுச் செலவினங்களை அரசு திட்டமிட்டுக் குறைக்கிறது. சமத்துவமின்மையை அதிகரிக்கிறது. இந்த அரசின் விஷம் தோய்ந்த ஆணாதிக்க அணுகுமுறை, பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது. அவர்களின் உரிமைகள் சிதைக்கப்படுகின்றன.

மேலும் அவர்கள் மீதான வன்முறை அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. இந்தக் காலத்தில், இடதுசாரி, ஜனநாயக சக்திகள் உண்மையின் பக்கம் நிற்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளன.

குருநானக் தேவ்ஜி கூறியது போல், “உண்மை ஒருபோதும் பழையதாகாது, ஒரு முறை தைக்கப்பட்டால், அது ஒருபோதும் கிழிந்து போகாது.” தேசத்தின் உண்மை, உழைக்கும் மக்களால் பாதுக்கப்படுகிறது.

சர்வதேச அளவில், நிதி மூலதனமும் முதலாளித்துவ நாடுகளின் நவீன தாராளமயக் கொள்கைகளும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன.

இஸ்ரேலின் சியோனிச அரசாங்கத்தால் விவரிக்க முடியாத துன்பங்களையும் இனப்படுகொலையையும் அனுபவித்து வரும் நமது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுடன் நாம் நிற்கிறோம்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போரை நாங்கள் எதிர்க்கிறோம். அந்த மண்டலத்தைச் சீர்குலைக்க நேட்டோ அணி முனைவதையும் ஏற்க முடியாது. ஆப்பிரிக்க நாடுகள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு போர்களை நாங்கள் எதிர்க்கிறோம். டொனால்ட் டிரம்ப் அரசு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது சுமத்திய கட்டணப் போரை எதிர்க்கிறோம். சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவின் கொடுங்கோன்மைக்கு எதிராக நாம் பரந்த எதிர்ப்பை உருவாக்க வேண்டும். இடதுசாரி, ஜனநாயக சக்திகள் உலக விவகாரங்களில் நீதி மற்றும் சமத்துவத்திற்காக நிற்கின்றன.

நமது நாடு சமீபத்தில் பாகிஸ்தானுடன் போருக்குச் சென்றது. அதற்கு முன், காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஒரு பெரிய சோகத்தைக் கண்டோம். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாம் நிற்கிறோம். எல்லா வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.

நமது நாட்டைப் பாதுகாப்பதில் நமது அரசு எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறோம். நமது ஆயுதப் படைகளையும் அவர்களின் வீரத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில், அரசு தனது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் எப்படி, ஏன் நடந்தது என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கோருகிறோம். நமது அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை ஆதரிக்கிறோம். பிரிவினையின் போதும் அதற்குப் பிறகு நடந்த போர்களிலும் பஞ்சாப் மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்று பஞ்சாப் அமைதியைக் கோருகிறது, மத்திய அரசு எங்கள் குரலைக் கேட்க வேண்டும்.

சமீபத்தில், பஞ்சாப் மற்றும் பிற வட இந்திய மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை அலட்சியத்துடன் புறக்கணித்ததால், விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தோம். சொத்து மற்றும் கால்நடைகள் அழிக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளுக்கு, துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். ஆனால் இந்தப் பேரழிவிற்கு யார் பொறுப்பு? தெளிவாக, நீர்ப்பாசன வளங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளைப் பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறியது ஒன்றிய, மாநில அரசுகள்தான்.

172 ஆண்டுகளுக்கு முன்பு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” என்ற தனது முதல் கட்டுரையில், கார்ல் மார்க்ஸ், இந்தியாவில் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் அமைப்புகளைப் பராமரிப்பதில் அரசுகளுக்கு வரலாற்று ரீதியாக வழங்கப்பட்ட பொறுப்பைக் கோடிட்டுக் காட்டினார்.

நமது மத்திய மற்றும் மாநில அரசுகள் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் அமைப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் மக்களைக் கைவிட்டுவிட்டன. தனியார் நிறுவனங்கள் மற்றும் நில மாஃபியாக்களின் கொள்ளையடிக்கும் திட்டங்களால் மக்களின் துயரம் மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்கவும், இங்கு கூடியுள்ளோம். தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் நமது நாட்டின் அனைத்துக் கடின உழைப்பாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் நம்மை அர்ப்பணித்துக் கொள்கிறோம்.

இதனுடன், பாபா ஷேக் ஃபரித் மற்றும் குருநானக் தேவ் ஜி ஆகியோரின் பூமியான ஐந்து நதிகளின் நிலத்துக்கு உங்கள் அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன். மேலும் இந்தப் பேராயம் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். நாம் போராடுவோம், மக்கள் வெற்றி பெறுவார்கள். நீதி மற்றும் உண்மையின் சக்திகள் வெற்றி பெறும்.

இடது ஒற்றுமை வாழ்க!

இடது, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை ஓங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!

லால் சலாம்.

தமிழில்: டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button