இஸ்ரேலே, இனப்படுகொலைப் போரை நிறுத்து! டெல்லியில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்தும் டெல்லி நாடாளுமன்ற சாலையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஜூன் 17 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள், அறிவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் & லெனினிஸ்ட்) லிபரேசன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். தாக்கர், பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த ஹரிசங்கர், கெதர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிர்ஷூ நாயக் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் டெல்லி தலைவர்கள் தினேஷ் வர்ஷ்னே, அனுராக் சக்சேனா ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்கள் பல்லப் சென்குப்தா, சையத் அஜீஸ்பாஷா, ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் நிலோத்பல் பாசு, அருண் குமார், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் சையதா ஹமீது, பேராசிரியர் அஜய் பட்நாயக், நந்திதா நரேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, “பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தடுத்து நிறுத்துப்பட வேண்டும்.
இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிரமிப்புப் போர் குறித்து மோடி அரசாங்கம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஐ.நா. கொண்டுவந்த போர்நிறுத்தத் தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இதனை கடுமையாகக் கண்டிக்கிறோம். இஸ்ரேலுடனான அனைத்து ராணுவ உறவுகளையும் இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நீதி மற்றும் அமைதிக்கான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்துத்துவா சக்திகள் சித்தரிக்க விரும்புவது போல், பாலஸ்தீன மக்களின் போராட்டம் மதப் போரோ இஸ்லாமியப் போரோ அல்ல, ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டம்” என்று டி.ராஜா கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, “இஸ்ரேல் ஒரு மூர்க்கத்தனமான அரசு (rogue state), அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பயங்கரவாதி” என பிரகடனம் செய்தார். “காஷ்மீர் மாநிலம் பகல்காமில் அப்பாவி மக்கள் மீது அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கும், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் இடையே வேறுபாடு ஏதேனும் உண்டா? இரண்டும் மனிதத் தன்மையற்றவை, வன்முறையையும் அழிவையும் ஏற்படுத்தும் பயங்கரவாதச் செயல்களே!” என்றும் எம்.ஏ.பேபி காட்டமுடன் கூறினார்.
