உலக செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கம்யூனிச விரோத போக்கு – கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கம்யூனிச விரோத போக்கிற்கு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரம் பின்வருமாறு:

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தின் முடிவற்ற ஊற்றாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தொடர்ந்து சேவகம் செய்து வருகிறது. சோவியத் ஒன்றியம் மற்றும் சோஷலிசத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை மீண்டும் பரப்பும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதியதொரு கம்யூனிச விரோத தீர்மானத்தை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழு கண்டனம் செய்துள்ளது.

“உக்ரைன் மக்களை ரஷ்யாவிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது மற்றும் உக்ரைன் குழந்தைகளை ரஷ்யாவில் ஸ்வீகரிப்பது தொடர்பான மனித உரிமைகள் மீறல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இன்றைய முதலாளித்துவ ரஷ்யாவுடன் சோவியத் ஒன்றியத்தை ஒப்பிட்டு, எதார்தத்தைத் திரித்துச் சொல்லும் நோக்கத்துடன், அறிக்கையின் தலைப்பிற்கும், உள்ளடக்கத்திற்கும் முற்றிலும் தொடர்பற்ற ஒரு பத்தியைச் சேர்த்துள்ளார்கள்!

கம்யூனிஸ்டுகள் மீதும், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சித்தாந்தத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் அது போன்ற புதிய ரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. “சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்து மிக மோசமான அவதூறுகள் அந்தப் பத்தியில் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கம்யூனிச எதிர்ப்பு தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ சித்தாந்தம் ஆகும். அதன் இதர அமைப்புகளிலும், உறுப்பு நாடுகளிலும் “அரசியல் ரீதியாக முறைப்படுத்தும்” பணியை மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம், பாசிச சக்திகள் மற்றும் இதர வலதுசாரி குழுக்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான பொய் மற்றும் புரட்டுகள் மூலம் முதலாளித்துவ சுரண்டல் முறை மீதான மக்களின் கோபாவேசம் போராட்டமாக மாறுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளும், உறுப்பு நாடுகளும், முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் அரசாங்கங்களும் கருதுவது மடமை ஆகும்.

இவ்வாறு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு கருத்து தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button