இந்தியா

கேரள மாநில ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசு தலைவருக்கு பினாய் விஸ்வம் எம்.பி கடிதம்

கேரள மாநில ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான், அம்மாநில அரசாங்கத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான பினாய் விஸ்வம் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பது பின்வருமாறு:

கேரள மாநில ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான் அம்மாநில அரசாங்கத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்பது தாங்கள் அறிந்ததே! அசாதாரண நடவடிக்கையாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (19.09.2022) செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தச் சந்திப்பின் போது, மாநில அளவிலான ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் போல, முதலமைச்சர் பினராயி விஜயன் மீதும், மாநில அரசாங்கத்தின் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார்.

மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மாநில அரசாங்கத்துடன் அவர் வெளிப்படையாக மேற்கொண்டு வரும் மோதல் போக்கு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும். அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஆளுநர், இவ்வாறு எதிர்மறையாகச் செயல்படுவது முறையல்ல.

அமைச்சரவையை மையமாகக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை தான் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு ஆகும். 1975 ஆம் ஆண்டில், ஷாம்ஷெர் சிங் (எதிர்) பஞ்சாப் மாநிலம் எனும் வழக்கில், நமது அரசியல் அமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், மாநில ஆளுநர்களின் அந்தஸ்து பிரிட்டிஷ் மன்னருக்கு இருக்கும் தகுதியைப் போன்றது மட்டுமே! என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கூட்டாட்சி முறையில், மாநில ஆளுநர் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையில் உள்ள ஒரு இணைப்பு புள்ளி போன்றவர் ஆவார்.

எனவே, நிலைமையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மாநில அரசாங்கத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியான செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதைத் தவிர்க்குமாறும், மாநில ஆளுநர் பொறுப்பின் கண்ணியத்தையும், மாண்பையும் பேணிப் பாதுகாத்திடுமாறும் ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பினாய் விஸ்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button