உலக செய்திகள்

சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்கா – ஐ. நா. சபை தகவல்

ஐ. நா. சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நீடித்த வளர்ச்சியடைந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா சரிவைச் சந்தித்து வருகிறது.

அண்மையில், நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) ஐ. நா. சபையின் பிரத்யேக அமைப்பு (UNOSD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்கா, அதன் சக வளர்ச்சியடைந்த நாடுகளைக் காட்டிலும் தரவரிசையில் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 32 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, ஒரே ஆண்டில், 11 இடங்கள் பின்தங்கியது. தற்போது, கியூபா மற்றும் உக்ரைன் நாடுகளைக் காட்டிலும் தரவரிசையில் பின்தங்கியுள்ளது.

ஐ. நா. சபையின் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை நிறைவேற்றுவதில் நாடுகள் அடையும் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் பசிக் கொடுமையின்மை ஆகியவற்றுடன் தரமான கல்வி உள்ளிட்ட நோக்கங்களும் அந்த இலக்குகளில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஐ. நா. சபையின் வலைதளத்தில் மிக விரிவாகவே விளக்கப்பட்டுள்ளன. நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் 2030 – ஐ (Agenda for Sustainable Development – 2030) நடைமுறைப்படுத்திட ஐ. நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

2022 – ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் ஸ்கேண்டிநேவியன் (Scandinavian) நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. பின்லாந்து முதல் இடத்தையும், டென்மார்க், சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் அடுத்த மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. தரவரிசையின் முதல் 20 இடங்களுக்குள் உள்ள, ஐரோப்பாவைச் சாராத நாடாக ஜப்பான் (19 வது இடம் ) உள்ளது.

அமெரிக்காவின் இந்தப் பின்னடைவுக்கு அதன் இனவாதப் போக்குதான் காரணம் என்று வரலாற்றாளர் கேத்லீன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன அடிப்படையில் பாகுபாடுகளை முன்னிறுத்தி, அமெரிக்க மக்கள் திரளில் கணிசமானோருக்கு கிடைத்திருக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மறுத்ததன் விளைவு தான் அமெரிக்காவின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது.

அமெரிக்கா சரிவைச் சந்தித்து வருகிறது என்று ஐ. நா. சபை கூறுவதோடு மட்டுமின்றி, அமெரிக்கா ஒரு சீரழிந்து வரும் ஜனநாயக அமைப்பு என்று ‘The Economist’ இதழும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வகைப்படுத்தி இருந்தது. அவ்வாறு வகைப்படுத்துவதற்கான அளவீடுகளாக நாடுகளின் தேர்தல் செயல்பாட்டு முறை, பன்மைத்துவம், அரசாங்கத்தின் செயல்பாடு, பொதுமக்களின் அரசியல் பங்கேற்பு, ஜனநாயகப்பூர்வ அரசியல் விழுமியங்கள் மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

நியூயார்க் நகரில் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நியூயார்க் நகரத்தின் வீடற்றோர் எண்ணிக்கை 80,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க பெருநகரமான நியூயார்க் நகரில் வீடற்ற மக்கள் தொகை சமீபத்திய ஆண்டுகளில் 80,000 பேராக உயர்ந்துள்ளது, தி போவரி மிஷன், பசி மற்றும் வீடற்றவர்களுக்கு சேவை செய்கிற (150 ஆண்டுகள் பழமையான) அமைப்பு இவ்வாறு தெரிவிக்கிறது.

நியூயார்க் நகரத்தில் வீடற்ற நிலை, 1930களின் பெரும் மந்தநிலைக்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. 18,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 55,338 பேர் செப்டம்பர் 11, 2022 அன்று நகரக் காப்பகங்களில் தூங்கியதாக நகரின் சமூக சேவைகள் மற்றும் வீடற்ற சேவைகள் துறை இணையதளம் கூறுகிறது.

மாநில செனட்டர் பிராட் ஹோய்ல்மேன் “இந்த துயரமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அவர்கள் நகரத்திற்குத் தேவையான சேவைகளை வழங்கவில்லை” என்று கூறினார். முன்னாள் நகரசபை வேட்பாளரும் வாழ்நாள் முழுவதும் மன்ஹாட்டனில் வசிக்கும் ஜாக்கி டோபோராஃப் “இப்போது நாங்கள் பிடன் பொருளாதார கொள்கைக்கு விலை கொடுக்கிறோம். சிறைகளை காலி செய்தார்கள், பிராட்வே மற்றும் வணிகத்தை இரண்டு ஆண்டுகளாக மூடிவிட்டனர், குழந்தைகளின் கல்வியை அழித்தார்கள், அவர்களின் கட்டளைகள் மக்களை வேலை இழக்கச் செய்தன. அவர்கள் நகரத்தை சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நிரப்பினர் ” என்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button