உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22வது சர்வதேச கூட்டம்: உக்ரைன் நிலவரம் குறித்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது சர்வதேச கூட்டம் கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் கடந்த அக்டோபர் மாதம் 27 முதல் 29 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் (CPRF) பிரதிநிதி பங்கேற்றுப் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:

அன்பார்ந்த தோழர்களே,

முதலில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவினுடைய சகோதர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் கியூப கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தோழர்களே,

உக்ரைனில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து முழுமையான தகவலைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிடவும், அது குறித்து அவர்கள் சீரான மதிப்பீட்டை மேற்கொள்ளவும் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையை (Special Military Action) ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதற்கான காரணங்களை நான் இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.

முன்னெப்போதும் இல்லாத ஓர் உலக நெருக்கடி 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் குறித்துக் கொண்டது. சில காலம் கழித்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குகளின் வர்க்கத் தன்மை, முன்பிருந்ததைக் காட்டிலும் அதனைத் தானே ஆற்றல்வாய்ந்ததாக, கவனத்திற்குரியதாக மாற்றிக்கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில், சமூகப் பிளவுகள் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன.

உலக நிதி மூலதனத்தின் கோரப் பசி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்நாட்டு மோதல்களைத் தூண்டுகிறது. தனது குறிக்கோளை அடைந்திட மூலதனமானது, இராணுவத்தையும், தொழில்நுட்பத்தையும், பயங்கரவாதிகளையும், நவீன பாசிஸ்டுகளையும் பயன்படுத்துகிறது. இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இப்போது நாம், புவிசார் அரசியல் பேரழிவுகளைக் கண்ணுற்று வரும் சமகால சாட்சிகளாவோம்.

உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை யூகோஸ்லாவியா, ஈராக், லிபியா, சிரியா நாடுகளின் அனுபவங்களும்  இதர நாடுகளைச் சூழ்ந்துள்ள கண்ணுக்குப் புலப்படாத அச்சுறுத்தல்கள் ஆகியவை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

சுதந்திரமான அயல்நாட்டு கொள்கையைப் பின்பற்றும் நாடுகளின் மீதும், அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணியாத நாடுகளின் மீதும் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடுகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. கியூபா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் மீது இவ்வாறு முத்திரை குத்தப்பட்டது.

உக்ரைனில் உள்ள முதலாளித்துவ சக்திகள், பிளவுபட்டு மோதிக்கொண்டிருக்கும் செல்வாக்குமிக்க பல்வேறு தேசிய இன குழுக்கள், அவர்களால் உருவாக்கப்பட்ட சூழல் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய முகமைகள் பயன்படுத்திக் கொண்டு டான்பாஸ் பிராந்தியத்தில் ஒரு போரை நடத்தி வருகிறார்கள். டான்பாஸ் பிராந்திய மக்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கே போரைத் தூண்டிவிட பாசிசம் பயன்படுத்தப்படுகிறது.

புதியதொரு பனிப்போரின் தொடக்கம், ரஷ்யாவுடனான வெளிப்படையான மோதல் போக்கு, உக்ரைனுக்கு ஆதரவாக நின்று ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுவது ஆகியவை குறித்து மேற்குலக தலைவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ரஷ்யாவை இராணுவ மோதலுக்குள் சிக்க வைத்து, பலவீனப்படுத்தி, முடிவில் அடிமைப்படுத்துவது மற்றொரு பணி ஆகும்.

பொருளாதார தடைகள், இராணுவ அச்சுறுத்தல்கள் என்று பலமுனைகளில் இருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இதில், தகவல் தொழில்நுட்ப மற்றும் தத்துவார்த்த தாக்குதல் முக்கிய பங்காற்றுகின்றன.

தோழர்களே,

உக்ரைன் பிரச்சனை குறித்து சொல்வதென்றால், ரஷ்யா மேற்கொண்டிருக்கும் சிறப்பு இராணுவ நடவடிக்கையை ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் நிலைப்பாடு குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடையே துரதிர்ஷ்டவசமாகப் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. ரஷ்ய அரசாங்கத்திற்கு ஆதரவாக, அதாவது, ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதாக ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

உக்ரைன் போர் – ரஷ்ய முதலாளிகளின் நலன்களுக்காக நடைபெறும் ஏகாதிபத்திய போர் என்றும், சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலம் ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி அதிபர் புடின் மற்றும் ரஷ்ய ஆளும் கட்சியை ஆதரிக்கிறது என்ற கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நிலைப்பாட்டிற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த அணுகுமுறையை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்.

உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான டான்பாஸ் பிராந்திய மக்களின் போராட்டத்தில், நாங்கள் ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் தன்மையைக் காண்கிறோம். அடிப்படையில், அந்தப் போராட்டம், பாசிச ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு போர் ஆகும். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், தேசப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அந்நிய அச்சுறுத்தலுக்கு எதிரான, பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ஆகும்.

வேறு எவ்வழியிலும் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியப்பாடுகள் இல்லை என்பதால், ரஷ்ய கூட்டமைப்பின் அரசியலமைப்புக்கு இணங்க, சட்டப்படியான நடவடிக்கையை ரஷ்ய அதிபர் மேற்கொள்கிறார். தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட, வேறு வழியின்றி, ரஷ்யா இராணுவத் தாக்குதலில் ஈடுபடுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கும் உக்ரைன், மின்ஸ்க் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டு அழித்து வருகிறது.

தோழர்களே,

மக்கள் நலன் புறக்கணிக்கப்படுவதையும், ரஷ்ய ஆளும் கட்சியின் கொள்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகளை ரஷ்யா அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி 2014 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் டான்பாஸ் பிராந்திய மக்களை இந்த அளவிற்கு ஆதரித்தது இல்லை.

ரஷ்ய அதிபர் மற்றும் ஆளும் கட்சியை ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்பதில்லை. மாறாக, வரலாற்று ரீதியிலான கட்டாயத்தின் காரணமாக ரஷ்ய ஆளும் தரப்பு தான், கடந்த 30 ஆண்டுகளாக ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாதையைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

தோழர்களே,

ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வரும் கியூபா, வெனிசூலா மற்றும் இதர நாடுகளுக்கும், மக்களுக்கும் ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டதன் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் நீடூழி வாழ்க!

கியூபா நீடூழி வாழ்க!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button