உலக செய்திகள்

உக்ரைன் போர்: ஐரோப்பாவைத் துண்டாட அமெரிக்காவின் கூட்டு சதி! -உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி

சில நாட்களுக்கு முன் உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெட்ரோ சிமோனென்கோ தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

ஐரோப்பாவைத் துண்டாட மேற்கத்திய உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், ரஷ்யாவுடன் ஒரு போருக்கு அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாகவும் உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெட்ரோ சிமோனென்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் போலந்து ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட ராணுவ கூட்டணி ஒன்று உருவாகி வருவதாகவும், அந்தக் கூட்டணி உக்ரைனின் ஆளும் வர்க்க நாஜி கூட்டத்துடன் இணக்கமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சர்வதேச மூலதனத்தின் உத்தரவுக்கிணங்க அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகிய அமைப்புகள் ஐரோப்பாவை மறுவரையறை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். போர் வெடிக்க வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வரும் சி.ஐ.ஏ. உள்ளிட்ட உளவு அமைப்புகளுடன் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தற்போது மிக நெருக்கமாக ஒத்துழைக்கிறார்  என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

2020ஆம் ஆண்டு லண்டன் நகரில் எம்.ஐ.6 என்ற உளவு அமைப்பின் தலைவருடன் நடைபெற்ற அதிபர் செலன்ஸ்கியின் சந்திப்புகள், 2022ஆம் ஆண்டு கீவ் நகரில் ஜனவரி மாதம் சி.ஐ.ஏ-. அமைப்பின் தலைவருடனான அவரது சந்திப்பு தற்போதைய சூழலில் முக்கியத்துவம் கருதி விவாதிக்கப்படுகின்றன.

இந்த மூன்று நாடுகள் கொண்ட ராணுவ கூட்டணி திடீரென்று உருவானது அல்ல. வரலாற்று ரீதியாகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் மக்களுக்கு எதிரான அச்ச உணர்வை பிரிட்டனும் போலந்தும் அவற்றின் நலன்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. முன்பு ஹிட்லருடன் இணைந்து அப்பாவி மக்களைக் கொன்றழித்த கூட்டத்தார்(போலீஸ் மற்றும் எஸ்.எஸ்.படைபிரிவைச் சார்ந்த போர் வீரர்கள்) அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சிறப்பு உளவுப் படை உள்ளிட்ட பிரிவுகளில் இயங்கி வந்தனர். அவர்களின் சித்தாந்த வழித் தோன்றல்கள்தான் இப்போது ரஷ்யாவுக்கு எதிரான அச்ச  உணர்வு மற்றும் போர் சூழலைத் தீவிரமாக்குவதற்காகக் களமிறக்கப்பட்டு வருகிறார்கள்.

சி.என்.என். மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் போருக்கான பரப்புரையில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவர். ஊடக நிறுவனங்கள் நாஜிக்களின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்த ஜோசப் கோயபல்ஸ்  பாதையில் பயணிக்கிறார்கள்.

இவ்வாறு உக்ரைன் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button