தமிழகம்

அக் 31 – ஏஐடியுசி 103 வது அமைப்பு தினம் – ஆயத்தமாவோம்!

-டி எம் மூர்த்தி

இந்தக் கிழக்கு தேச தொழிலாளர்களின் விடியல் வடக்கில் இருந்து வந்தது!

அடியும் உதையும் வாங்கி கருணைக்காக கையேந்தி நின்ற தொழிலாளர்கள்,
வர்க்கமாகி ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியை ரஷ்யாவில் புரட்டிப் போட்டுவிட்டு, செங்கோலைத் தாமே ஏந்தினர்!

புதிய ஒளி வீசியது இமயம் தாண்டி! அதன் ஸ்பரிசத்தில் சூத்திரராய், பஞ்சமராய், ஆண்டவன் பேராலேயே அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த இந்தியாவின் உழைக்கும் மக்கள்,
அந்தச் சுடரொளி பார்க்கத் தலைநிமிர்த்தினர்!

சங்கறுத்த வெள்ளையனின் கைகளை இறுகப் பிடித்து சங்கம் வைத்தனர். 1920 அக்டோபர் 31ல் ஏஐடியுசி பிறந்தது!

சூரிய ஒளியே உடலில் படாமல், நாளோ கிழமையோ கணக்கில் இல்லாமல், ஆண்டுக் கணக்கில் அடிமையாய் உழைத்தும் அவல நிலையிலேயே உழன்ற தொழிலாளியின் முடக்கிய கரங்கள் கொடி ஏந்த நீண்டன! முறுக்கேறி, முட்டி மடக்கி முழக்கங்கள் வெடித்தன!

வேலைக்கோ, சம்பளத்துக்கோ, உத்தரவாதம் இல்லை! விபத்தில் இறந்தாலும் தூக்கி வெளியே உடலை எறிந்து எந்திரத்துக்கு என்ன நேர்ந்தது என்றே பார்ப்பார்கள்!முதலாளி விருப்பத்தில், ஏதோ ஒரு நாளில் கங்காணி தரும் கூலியை
மடியேந்தி, துண்டேந்தி வாங்கிய காலம்!

போனஸ், கிராஜுட்டி, வீட்டு வாடகை, பஞ்சப்படி, ஓய்வூதியம், இஎஸ்ஐ மருத்துவம், வருங்கால வைப்பு நிதி என்பதெல்லாம் தொழிலாளி
கேட்டே அறியாத சொற்கள்…!

சங்கம் வைப்பது ராஜத் துரோகம், சேர்ந்து பேசினால் சதி வழக்கு, உள்ளாடைகள் உட்பட சிவப்புச் சாயம் தோய்த்த உடையை அணிந்திருந்தால் சிறைச்சாலைகள் உள்ளிழுக்கும்!

எமது விடுதலை வேண்டும்! எமது நாட்டிற்கு விடுதலை அதனினும்
விரைவில் வேண்டும்! என ஏஐடியுசி பிறந்த பின்தான், கனதனவான்கள் கையிலிருந்த விடுதலைப் போர் உழைப்போர் கையில் வந்ததது, அதன் பின்னரே உக்கிரமானது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்தனர், நூலோர்கள் செக்கடியில் நோவுதல் கண்டனர். விடுதலைப் போரிலும், தம் விடுதலைக்கான போராட்டங்களிலும், ஏஐடியுசி பதாகையை ஏந்திப் பிடித்து சமரங்கள் செய்தாரின் சரித்திரங்களைத் தொகுத்தால், எத்தனை தொகுதிகள் எழுதினும் போதாது.

கப்பற்படை எழுச்சியில் இந்திய தொழிலாளியின் ஏற்றமிகு பங்கு ஒன்று போதாதா?! நூறாண்டு தவமாய் வேண்டிய விடுதலை வந்தது 1947 ஆகஸ்ட் 15ல்!

வெள்ளைக்காரனை விரட்டிய பின்பு பழுப்பு எஜமானர்கள் ஆட்சி கட்டிலில் அகலமாய் அமர்ந்தனர். எல்லோருக்கும் சுதந்திரம்! ஆனால், வீறுகொண்டு போராடிய உழைக்கின்ற வர்க்கத்திற்கு விடுதலை கிடைக்கவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியைப் போலவே, எல்லாக் கொடுமைகளும்… கொஞ்சம் கூடுதலாகவே…

சங்க அலுவலகங்களைக் காவல் நாய்கள் கடித்துக் குதறின. உரிமை கேட்டு முழங்கிய வீரனின் மொத்த குடும்பமும் சந்திக்கு இழுக்கப்பட்டது.

சிறைக்குள்ளே அடைத்து, துப்பாக்கிச் சனியன்களால் சரமாரியாகச் சுட்டு, கொத்துக் கொத்தாய் சாகடித்த சேலத்து நிகழ்வு… ஹிட்லரின் கொடுமைக்கு குறைந்ததா என்ன?

விடுதலை கிடைப்பதற்கு மூன்று மாதங்கள் முன்னாலேயே ஏஐடியுசி-யைப் பிளந்து, ஐஎன்டியுசி-யை, அடுத்து ஆள வருபவர்களே உருவாக்கி வைத்தனர்.

அப்புறம் உரமேறி நின்ற இந்தியத் தொழிலாளி வண்ண வண்ணப் பதாகைகளின் கூட்டத்தில் தொலைந்து போனான்!

உலகமெல்லாம் உழைப்பவர் உரிமைக்குத் தோன்றாத் துணையாய்,
தேசங்களின் விடுதலைக்குப் பேராதரவாய், வலிமையாய் நின்ற
சோவியத் உள்ளிட்ட சோஷலிஸ முகாம் அறத்தினால் வீழ்ந்தது!

70 ஆண்டுகாலம் தொழிலாளர் அடைந்த உரிமைகளை எல்லாம்
பறித்துப் பிடுங்க, ரீகன்- தாச்சர் ரகசிய திட்டம் விஷப் புகையாய்
புவியைச் சூழ்ந்தது!

1991ல் நரசிம்மராவ் காரு, டங்கல் எழுதிய புதிய பொருளாதாரப் பாட்டை மன்மோகன் சிங் மெட்டில் விஸ்தாரமாய் பாடினார்! விருப்ப ஓய்வு விரிவுபட்டது! காண்ட்ராக்ட் முறைமை, நிரந்தர தொழிலாளியை முக்கால்வாசிக்கு மேல் முழுங்கி விட்டது!

1982ல் தொடங்கி, பல வண்ணச் சங்கங்களைக் கோரிக்கைச் சங்கிலியில் இணைத்து ஆட்சிக் கொள்கைகளுக்கு எதிராய் ஒருங்கிணைந்த போராட்டம் தொடங்கியது. இணைப்பு பாலமாய் ஏஐடியுசி விளங்கியது!

காங்கிரஸ் குதிரை தாம் நினைத்த வேகத்தில் ஓடவில்லை என நினைத்த கார்ப்பரேட் சக்திகள் ஒரு குஜராத் குதிரையைக் கண்டறிந்தன. இந்திய மக்களை வெறுப்பரசியலால், வர்ணாசிரம விஷத்துக்கு இந்து என இனிப்பு பூசி, சொந்தச் சகோதரர்களைத் தமக்குள்ளே மோத வைத்து, அந்த ரத்த நதியில், மண்டை ஓடுகளில் கால் வைத்து அரியணையில் ஏற முயன்ற வகுப்புவாத ஆர் எஸ் எஸ் கார்ப்பரேட்டுகளோடு கைகோர்த்து இருக்கிறது ஆட்சியில்!

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மென்று விழுங்கிச் சொன்ன மக்கள் விரோத, தொழிலாளர் விரோத திட்டங்கள் அனைத்தையும், இது தான் வளர்ச்சி என இவர்கள் இறுமாப்பாய் செயலாக்கி வருகிறார்கள்.

எதிர்த்தால் தேச விரோதி, இந்து விரோதி, அர்பன் நக்சல் இன்னும் என்னென்ன பெயர்கள்!

எல்லாம் தப்பு என்று நன்றாக தெரிந்தாலும், அதிகாரத்துக்குப் பயந்தும், பணத்தாசையால் பிறழ்ந்தும் வாலாட்டும் ஊடகங்கள்!

வருமான வரி, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மத்திய புலனாய்வுத்துறை என எத்தனை ஒடுக்கு கருவிகள்! இதில் நீதிமன்றத்தைச் சேர்த்தால் காராக்கிரகம் கிடைக்கலாம்!

வெள்ளப்பெருக்கு உடைக்கும் இடத்தில், ஒன்றாய் சேர்ந்து அணை கட்டாமல், வீட்டைச் சுற்றி அணை கட்டினால், வெள்ளம் உடைத்து நுழையாதா?

கருத்தால் கரத்தால் உழைத்தாலும், தொழில் எத்தன்மைத்தானது என்றாலும், என்ன கருத்தியல் கொண்டாலும், எல்லாம் ஒருபுறம் ஏறக்கட்டி, உழைக்கின்ற மக்களுக்கிடையே விரிந்து பரந்ததாய் ஒற்றுமை தேவை!

பிறந்தநாள் தொட்டு, ஒற்றுமை ஒன்றையே உயிர் முழக்கமாய்
ஒவ்வொரு நொடியும் உச்சரித்து வருகிற ஏஐடியுசிக்கு இந்த அக்டோபர் 31ல் 103வது பிறந்தநாள்!

உழைப்பவர் வாழ, உலகெலாம் வாழ, ஏஐடியுசி நீடூழி வாழ்க!

தொடர்புக்கு – 9444360869

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button