மாநில செயலாளர்

கட்சிக்கடிதம் – இரா.முத்தரசன்

கட்சிக்கடிதம்

இம்சை அரசனை அகற்ற சாட்டையை சுழற்றுவீர்!

போர்க்குணம் மிக்க தோழர்களே!

அரசியல் போர் தீவிரம் அடைந்து வரும் தருணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம், ஏராளம்!

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில 13 வது மாநாடு மிக வெற்றிகரமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் நடைபெற்றது.

ராஜபாளையம் நகர் மட்டுமல்ல, திருவில்லிபுத்தூர் உட்பட விழாக்கோலம் பூண்டது. திரும்பும் திசையெங்கும்  செங்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

ஜூலை 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதி தோழர்கள் பங்கு பெற்ற மாநாடு. அறிக்கை – விவாதம். தொகுப்புரை, வரவு – செலவு கணக்குகள், தகுதி ஆய்வறிக்கை என அனைத்தும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தன – புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் நாள் அன்று பெருமளவில் மக்கள் பங்கு பெற்ற பொது மாநாடும் மிக வெற்றிகரமாக அமைந்தது. விருதுநகர் மாவட்டத்து தோழர்கள் இம்மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்தி தந்துள்ளனர். அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.

வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான நாள் என்பதனை அனைவரும் நன்கு அறிவோம்.

அன்றைய நாளில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சார்பாக நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற  இருக்கின்றது. நமது மாநிலத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையில் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் திரண்டெழ இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏ. ஐ. டி. யு. சி. தோழர்கள் பெரும் திரளாய் பங்கேற்பீர்.
ஆகஸ்ட் 20 ஆம் நாள் மாணவர்களும் இளைஞர்களும் சென்னையில் திரண்டு பெரும் பேரணி பொதுக்கூட்டம் நடத்திட உள்ளனர்.

இம்சை அரசன் மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு
மணிப்பூர் மக்களை காக்க தவறிய இம்சை அரசனே வெளியேறு

என்ற முழக்கத்தை முன்வைத்து போர்க் கொடி தூக்க உள்ளனர்.

அக்டோபர் 3, 4 ஆகிய இரு தினங்கள் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாடு, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் நடைபெற உள்ளது. 4 ஆம் தேதி திருச்சி மாநகரமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் மாபெரும் பெண்களின்  பேரெழுச்சி மிக்க பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளன.

இவைகளுக்கிடையே நாம் ஒரு பெரும் போராட்டத்தை மேற்கொள்ள, ஒரு ஆயத்த பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

மணிப்பூர் மாநிலம் மாத கணக்கில் பற்றி எரிகின்றது.  நாடே பதற்றத்தில் உள்ளது. அத்திசை நோக்கி எட்டிப் பார்க்க மறுக்கிறார் மோடி.

நாடாளுமன்றம் நடைபெறுகின்றது – நாடாளுமன்ற படிக்கட்டுகளை தொட்டு வணங்கிய பிரதமர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க மறுக்கின்றார்.

மணிப்பூர் குறித்து பிரதமர் அறிக்கை வேண்டும். அதன் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டுமென அரசை எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் துளைத்தெடுகின்றனர்.

அவையை மதித்து செயல்பட வேண்டிய பொறுப்பான நாட்டின் தலைவரான பிரதமர் அவைக்கு வர மறுக்கின்றார். ஓடி ஒளிகின்றார் ஏன்? அமெரிக்க நாடாளுமன்றத்தில் சென்று, சிங்கமென கர்ஜிக்கும் பிரதமர், சொந்த நாட்டின் நாடாளுமன்றம் சென்றிட அஞ்சுகிறாறே ஏன்? மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தது இந்திய நாட்டு மக்களா? அல்லது அமெரிக்க நாட்டு மக்களா?

மக்களின் சொத்தான வங்கிகளில் உள்ள பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு 15.32  லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளார்கள்.

யாருக்கு கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கா? அல்லது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கா? சிறு, குறு தொழில் புரிவோர்களுக்கா? வணிகர்களுக்கா? இவர்கள் எவருக்கும் இல்லை.  மாறாக அதானி, அம்பானி, மல்லையா, நீரவ் மோடி என கார்ப்பரேட் முதலாளிக்கு தள்ளுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.

நமது நாட்டிற்கு தேவையான எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றது. ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 112 டாலருக்கு பெற்று வந்தது.
ரஷ்யா – உக்ரைன் போர் 2022 பிப்ரவரி 23 முதல் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தன. ரஷ்ய நாட்டிற்கு நெருக்கடி கொடுத்து பணிய வைத்திட வேண்டும் என்ற உள்நோக்குடன், அந்நாட்டிலிருந்து யாரும் கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்றும் தடை விதித்தன.
ரஷ்யா விலையை குறைத்தது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 75 டாலருக்கு வழங்க முன்வந்தது.

இந்திய அரசு அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எணணெய் பெற்றது. ஒரு பேரலுக்கு 37 டாலர் விலையை குறைத்தது. அமெரிக்காவை பொருட்படுத்தாமல், குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கிய இந்தியா, இங்கே விலையை குறைத்து இருக்க வேண்டாமா? மாறாக விலை ஏற்றப்பட்டது – பெட்ரோல் விலை ரூ.101 லிருந்து 103 ஆக உயர்த்தப்பட்டது. டீசல் விலை ரூபாய்  91- இன்று ரூபாய் 94 ஆக உயர்த்தப்பட்டது.

அமெரிக்காவை எதிர்த்ததும் குறைந்த விலைக்கு வாங்கியதும். யாருடைய நலனுக்கு?
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற லாபம் 44 ஆயிரம் கோடி.

எண்ணெய் விலையை குறைத்து மக்களுக்கு அல்லவா வழங்கி இருக்க வேண்டும்?
மோடிக்குத் தெரிந்த மக்கள் யார் தெரியுமா? அம்பானி, அதானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற யோக்கியவான்கள்தான்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் அத்தியாவசிய பண்டங்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து விட்டது. நம் வாழ்க்கையில் தக்காளி ஒரு கிலோ ரூபாய் 200 என்பது அறியப்படாத ஒன்றாகும்.

எண்ணெய், பருப்பு, மிளகாய், புளி, வெங்காயம், பூண்டு என அனைத்து வகை மளிகை பொருட்களும் மற்றும் காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்து விட்டது.
வேலை இல்லை – வருமானம் இல்லை –  எப்படி குடும்பம் நடத்துவது? – எதனைக் கொண்டு குடும்பம் நடத்துவது?, இவைகளைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மோடி அரசு, திசை திருப்ப மதக் கலவரங்களையும், சாதி கலவரங்களையும், திட்டமிட்டு உருவாக்கி, தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடியாய் துடிக்கின்றனர்.
அதனால்தான் டெல்லியில் நடைபெற்ற தேசியக்குழு கூட்டம், பாஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளது.

தமிழ்நாட்டில், இம்மகத்தான போராட்டத்தை நடத்திட 29/7/2023 ல் ராசபாளையத்தில் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இம்சை அரசன் மோடியே ஆட்சியை விட்டு விலகு என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் செப்டம்பர் திங்கள் 12, 13 மற்றும் 14 ஆகிய நாட்களில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டத்தினை நடத்திட முடிவு செய்துள்ளது.

தோழர்களே! செப்டம்பர் திங்களில் நடைபெறும் தொடர் மறியல் போராட்டம் என்பது நாடே திரும்பி பார்க்கின்ற போராட்டமாக அமைந்திட ஆயத்தப் பணிகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட இடைக்கமிட்டிக் கிளைகளில், கூட்டங்கள் நடத்தி மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் மாவீரர்களின் பட்டியலை தயாரித்திடல் வேண்டும்.
நமது கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், களம் காண வேண்டும்.
நமது வர்க்க, வெகுஜன அமைப்புகளின் தோழர்களும் பங்கேற்க செய்திடல் வேண்டும்.
பொதுமக்களிடத்தில் நன்கு விளம்பரம் செய்து ஆதரவை பெற்றிடல் வேண்டும்.
சுவர் விளம்பரம், தட்டி விளம்பரம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் என விளம்பரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சிறப்பு பேரவைக் கூட்டங்கள் என பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

தோழர்களே! அரசியல் – மாற்றத்திற்கான போர்! ஜனநாயகத்திற்கான போர்! மதசார்பின்மையை காக்கும் போர். இத்தகைய மகத்தான போரில் ஒவ்வொரு தோழரும் பங்கேற்போம். செங்கொடி உயர்த்தி, செம்பதாகையை தூக்கி, தமிழகமெங்கும் எங்கெங்கு காணினும் போர் முரசு கொட்டி, போர் முழக்கம் என்பதே செம்படையின் உறுதிமிக்க போர்ப்பிரகடனத்தை மேற்கொள்வீர்!

இம்சை அரசன் மோடி ஆட்சியை அகற்ற சாட்டையை சுழற்றுவீர்!

மீண்டும் சந்திப்போம்
வணக்கம்
தோழமைமிக்க,

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button