வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்ச் 25 – 2026 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை, (Foriegn Contribution Regulation Act – FCRA) திருத்த சட்ட மசோதாவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை சிறுபான்மையினர் அமைப்புகள், சமூக சேவை மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை முடக்குவதற்கான கருவியாக செயல்படுத்த முயல்கிறது.
இது ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் நேரிடையாக தகர்க்கும் நடவடிக்கையாகும். சிறுபான்மையினர் சொத்துக்களை பறிமுதல் செய்து நிர்வகித்து இறுதியில் விற்று விடும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு தலையீடு என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் சட்டப்படி உருவாக்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்றும் உள்நோக்கமுடையதாகும்.
எஃப்ஆர்சிஏ அனுமதி வழங்கும் அதே மத்திய அரசு, எந்த நேரத்திலும் அந்த அனுமதியை, ரத்து செய்ய முடியும். அதன் பின்னர் அதே அரசு அமைப்பே நியமிக்கப்பட்ட அதிகாரத்தின்(Designated authority) மூலம் அந்த அமைப்பின் சொத்துக்களை கைப்பற்றும் நிலையை உருவாகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்ற – சமூக நலனுக்காக சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட சொத்துகள் இவ்வாறு அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது நியாயமானதல்ல. நடைமுறையில் முற்றிலுமாக இதை ஏற்க முடியாது. இது இயற்கை நியதிக்கு புறம்பானது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 19, 21, 25 வழங்கும் உரிமைகள், இச்சட்டம் மூலம் மறுக்கப்படுகின்றன. பாஜக ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தின் மூலமாக நிர்வாக அதிகாரத்திற்கு அளவு கடந்த தன்னாட்சியை, உரிமையை வழங்குகிறது. சிறுபான்மை அமைப்புகள் மீதான அடக்குமுறையை மேலும் அதிகரிக்க, முயல்கிறது. எனவே திசிஸிகி திருத்தச் சட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும். சிறுபான்மை அமைப்புகளின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு நிதி ஒழுங்கு பெறுதலை ஒழுங்கு படுத்துதல் என்ற போர்வையில், அரசியல் பழிவாங்குதலை மேற்கொள்வதை, உடனடியாக கைவிட வேண்டும் என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
