பெரும் ஆபத்தில் வாக்களிக்கும் உரிமை – அரசியலமைப்புச் சட்டமும் சாதாரண குடிமகனும்
சி. ஆதி கேசவன்

இந்திய அரசியலமைப்புச் சாதாரண குடிமகனுக்காக எழுதப்பட்டது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் இந்தச் சாதாரண மனிதனைக் குறிக்கிறது. “இந்திய மக்களாகிய நாம்” என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் அரசியலமைப்பின் முகவுரை, ‘அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்ய உறுதியளிக்கிறது’ எனப் பிரகடனப்படுத்தியது. அந்த ஆவணம் நடைமுறைக்கு வந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உறுதிமொழிகளின் அடிப்படை ஜீவனான வாக்களிக்கும் உரிமை வெளிப்படையாக நெருக்கடியில் உள்ளது.
குடியுரிமை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டது. ஒருவரின் வாழ்விடம், பிறப்பு, வம்சாவளி, பதிவு அல்லது இயல்புரிமை மூலம் அவர் குடிமகனாகிறார். அந்தத் தகுதி அடைந்தவுடன், மதம், சாதி அல்லது பாலின வேறுபாடு இன்றி வயதுவந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 326 வழங்குகிறது. அந்த உரிமையைப் பாதுகாக்கவும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் முறை ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. 2023ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், அவர்களுக்கான தேர்வு நடைமுறையைப் பெருமளவு அரசு அதிகாரப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. சிபிஐ இயக்குனர் தேர்வுக்கான சமச்சீரான தேர்வுக் குழுவை மாதிரியாகக் கொண்டு (தேர்தல் ஆணையர்களையும் தேர்ந்தெடுக்க) ஒரு தற்காலிக ஏற்பாட்டை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது: ஆனால் அதற்குப் பதிலாக அரசுக்குத் தெளிவான பெரும்பான்மையுள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது. சுதந்திரமான தேர்வு முறை என்பது வெறும் காகிதத்தில் உள்ளதே தவிர உண்மையில் அது சுதந்திரமானதே அல்ல.
சமீபத்திய மேற்கு வங்க நிகழ்வுகள் ஆபத்தை உறுதியாக்கி உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையின்போது சுமார் 93 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்த 22 லட்சம் குடிமக்களில், ஒரு லட்சம் பேர்களின் வழக்குகள் மட்டுமே முடிவு செய்யப்பட்டு, அதில் 93 சதவீதம் பேர்களின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான மக்களில் பலரும் ஏழைகள், சட்ட உதவியை எளிதில் பெறும் வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களின் வாக்குரிமையை இழந்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களும் 14 தருணங்களில் தங்கள் ஆட்சேபங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஆட்சேபனைகள் எடுபடவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வாக்குரிமையைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட தேர்தல் ஆணைய அமைப்பு, அதிகாரச் சமநிலையை உறுதிப்படுத்தும் வகையில் அதைச் செய்வதற்கு இயலாத ஒன்றாக அல்லது செயல்பட விரும்பாத நிலையில் இருப்பதாகத் தோன்றும் நிலையில், சாதாரணக் குடிமகனின் அடிப்படை அரசியல் உரிமை ஆபத்துக்கு உள்ளாகிறது.
1950ல் அரசியல் நீதி ஒரே வீச்சில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சி காலத்தில் சொத்துரிமை சார்ந்த வரையறுக்கப்பட்ட வாக்குரிமையை சுதந்திர தேசத்தின் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை மாற்றியது. சமூக நீதி சமமான கவனம் பெற்றது. சட்டப்பிரிவு 17 மூலம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது, அனைத்து இந்துக்களுக்கும் ஆலயங்கள் திறந்து விடப்பட்டன. வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்த மக்கள் குழுக்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வர சட்டமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்- பட்டது. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்பது, அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டு நெறியிலிருந்து பின்னர் அடிப்படை உரிமையாக உயர்த்தப்பட்டது. விடுதலை அடைந்தபோது 12 சதவீதமாக இருந்த எழுத்தறிவு இன்று சுமார் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவை உண்மையான சாதனைகள். இருப்பினும், கல்வியின் தரம் சீரற்றதாக உள்ளது; சமூகத்தில் மிக ஏழ்மையான பிரிவு மக்களுக்குக் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளும் பின்தங்கிய நிலையிலே நீடிக்கின்றன.
வழிகாட்டு நெறிகளில் பொருளாதார நீதி குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்குப் போதுமான வழிவகைகளை உறுதி செய்யவும், செல்வம் ஒரு சிலர் கைகளில் குவிவதைத் தடுக்கவும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கவும் வழிகாட்டு நெறிகளில் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் பெரும் இடைவெளிகள் நீடிக்கின்றன. வேலையின்மை விகிதம் அதிகமாகவே உள்ளது. வருமானம் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமின்மைகள் அப்பட்டமாக இன்னும் நீடிக்கிறது. சமீபத்தில் வரையறுக்கப்பட்ட பிரிவு இட ஒதுக்கீட்டிற்கு (EWS) அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார அளவுகோல்கள் பயனாளிகளின் வட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது; எனினும், அது இட ஒதுக்கீடு முறை நடவடிக்கை கொண்டு வந்ததன் உண்மையான சமூக நோக்கம் குறித்த கேள்விகளையும் கூட எழுப்பி உள்ளது.
அரசியலமைப்புச் செயல்முறையில் ‘சுதந்திரம்’ மையமான இடத்தை வகிக்கிறது. சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி மட்டுமே உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்க முடியும் என்ற குறுகிய உத்திரவாதத்தைக் கொண்டதாக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21, தொடக்கத்தில் இருந்தது; பின்னர், நீதித்துறை விளக்கங்கள் மூலம் கண்ணியம், தனிப்பட்ட தனி உரிமை (பிரைவசி) மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த பாதுகாப்பு அம்சமாக அது உருமாறி உள்ளது.
சட்டப்பிரிவு 19ன் கீழ் பேச்சுரிமை முன்னுரிமை பெற்ற சுதந்திரமாகக் கருதப்படுகிறது. பொது ஒழுங்கு, வன்முறையைத் தூண்டுதல் அல்லது அவதூறு போன்ற குறிப்பிட்ட காரணங்களால் அது நியாயமான வரையறைக்குக் கட்டுப்படுத்தப்படலாம். வெறும் கலந்துரையாடல் அல்லது ஆதரித்து வாதாடுதல் மௌனமாக்கப்பட முடியாது. மனசாட்சி சுதந்திரம் மற்றும் (குறிப்பிட்ட) மதத்தை நம்பவும், பின்பற்றவும், பரப்புவதற்கான உரிமை ஆகியவை சமமாகப் பாதுகாக்கப்பட்டது; அந்தச் சுதந்திரமும்கூட பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி மற்றும் சுகாதாரத்திற்கு உட்பட்டதாகும்.
மதச்சார்பின்மை என்பது, மதங்களுக்கு இடையில் அரசு நடுநிலைமையைக் கடைப்பிடித்து, அவற்றைச் சம மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கோருகிறது. சிறுபான்மையினரின் கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள் இந்தியச் சமூகத்தின் நீண்ட காலச் சிறப்பம்சமாக விளங்கும் பன்முகத்தன்மையை மேலும் பாதுகாக்கின்றன.
மத மற்றும் சமூகத் தடைகளைத் தாண்டிய பொதுவான சகோதர உணர்வான ‘சகோதரத்துவம்’, அண்ணல் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் வற்புறுத்தலின் காரணமாக அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் சேர்க்கப்பட்டது. 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை கடமைகளில் அது நடைமுறை வடிவ வெளிப்பாட்டைப் பெற்றது. அரசியலமைப்புக்குக் கீழ்ப்படியவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், தேசத்தின் பன்முகக் கலாச்சார விழுமியத்தை மதிக்கவும் மற்றும் இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அது குடிமக்களை அறைகூவி கேட்டுக் கொண்டது. பார்சிகள் மற்றும் கேரளாவின் யூதர்கள் போன்ற சமூகங்களுக்கு அடைக்கலமும் சுதந்திரமும் அளித்த இந்தியாவின் வரலாற்றுச் சாதனை, ஒரு காலத்தில் செழித்தோங்கி இருந்த இந்த மனப்பான்மை உணர்வுக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. அதன் இன்றைய ஆரோக்கியநிலை நிச்சயமற்றதாக உள்ளது. சமூகப் பதற்றம் அதிகரிப்பு மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பெரும்பான்மை வாத வாய்ச்சவடால் கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் சகோதர உணர்வுக்கான பற்றுறுதிக்குச் சோதனையாகிறது. இந்த உரிமைகள் எதுவும் தானாகச் செயல்படுத்தப்படுவது அல்ல. அவற்றைச் செயல்படுத்த ஒரு சுதந்திரமான நீதித்துறை அவசியமாகும்.
உயர்மட்ட நீதித்துறையை அரசு அதிகார ஆதிக்கத்திலிருந்து விடுவித்துச் சுதந்திரமாக வைத்திருக்கவே, நீதித்துறை நியமனங்களில், கொலிஜியம் முறை உருவாக்கப்பட்டது. அதன் போதாமைகள் குறைபாடுகள் என்னவாக இருந்தாலும், முந்தைய காலத்தில் நிகழ்ந்த பணி மூப்பு சீனியாரிட்டி மீறல் மற்றும் அழுத்தங்களுக்கு ஒரு பதிலாகவே கொலிஜியம் முறை அமைந்திருந்தது. வசதி வாய்ப்பற்ற பின்தங்கியவர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வேறு வகையில் குரலற்ற மற்றவர்களுக்குப் பொதுநல வழக்கு என்பது நீதிமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
இருப்பினும், அனைத்துத் தரப்பு அமைப்புகளிலும் நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போது தேர்தல் ஆணைய அமைப்பு மட்டுமே மிக வெளிப்படையாகக் காணத்தக்க ஓர் உதாரணமாக உள்ளது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள், அன்றைய அரசு அதிகார அமைப்புடன் கூட்டாகச் செயல்படத் தொடங்கும்போது, ஒட்டுமொத்த அரசியலமைப்பு முறைமையின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.
‘அரசியலமைப்பைச் செயல்படுத்த வேண்டியவர்களிடம் முறையாக அப்படிச் செய்வதில் மனஉறுதியோ அல்லது நேர்மையோ குறைந்து இருந்தால், ஆகச் சிறந்த அரசியலமைப்பும் தோல்வியடையும்; அதே நேரத்தில் அதைச் செயல்படுத்துபவர்கள் நேர்மையுடனும் அக்கறையுடனும் இருந்தால், குறைபாடுள்ள ஆவணமாக அரசியலமைப்பு இருந்தாலும்கூட வெற்றியடையும்’ என அண்ணல் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பு விரிவானது; தொலைநோக்கு இலட்சிய வேட்கை கொண்டது; மேலும் அது பல வகைகளில் அதன் காலத்திற்கு முந்தியதாக முன்னே நிற்கிறது. சுருக்கமாக இந்திய அரசியலமைப்பு அற்புதச் சாதனையாகத் திகழ்கிறது. அதன் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சிந்தனை மற்றும் நம்பிக்கை சுதந்திரம், மற்றும் குடிமக்களிடையே சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றுக்கான அதன் உறுதி மொழிகள், நல்லாட்சியை அளவிடுவதற்கான சரியான அளவுகோலாக இன்றும் திகழ்கின்றன.
நமது உடனடி கடமை தெளிவானது. அன்றைய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படையாகவே சுதந்திரமாகச் செயல்படும் ஒரு தேர்தல் ஆணைய அமைப்பால் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மீட்டமைக்க வேண்டும்.
(தேர்தல் ஆணையர்களின்) தற்போதைய நியமன நடைமுறையின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மீதான பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு வாய்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. அது நிகழும் வரையிலும், மற்றும் அனைத்துத் துறைகளிலும் அமைப்பின் சுதந்திரம் அதன் செயல்பாடுகளில் தெளிவாகத் தெரியுமாறு வலிமைப்படுத்தும் வரையிலும், அரசியலமைப்புச் சட்டம் தனக்கு எதிராகச் செயல்படாமல், தனக்காகவே தொடர்ந்து செயல்படுகிறது என்று சாமானிய குடிமகனால் உறுதியாக நம்ப முடியாது. அரசியல் அமைப்பு ஆவணம் தன்னளவில் சிறந்ததாகவே உள்ளது; அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் அதன் உண்மையான சோதனை அடங்கியுள்ளது.
–நன்றி : நியூ ஏஜ் (அக். 11 –17)
–தமிழில் : நீலகண்டன்,
என் எப் டி இ, கடலூர்