
இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் 6-வது கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ(எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும், எஸ்.ஐ.ஆர். எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடதுசாரித் தலைவர்கள், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை, எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் போராட்டம் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படும்” என உறுதிபடத் தெரிவித்தனர்.
திருச்சியில் மாபெரும் பேரணி
“இடதுசாரிக் கட்சிகளின் மாற்றுக் கொள்கைகளும் உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளும் அடங்கிய கூட்டறிக்கையை இறுதி செய்திருக்கிறோம். அந்த கூட்டறிக்கை நவம்பர் 10ஆம் தேதி சென்னையில் வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறோம்” என்று இடதுசாரித் தலைவர்கள் அறிவித்தனர்.
அடுத்து, “கூட்டறிக்கையில் இருக்கக்கூடிய கோரிக்கைகள், மாற்றுக் கொள்கைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில், திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், கோவை, சேலம், கடலூர் என தமிழ்நாட்டை ஆறு மண்டலங்களாகப் பிரித்து கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானித்திருக்கிறோம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்தப்படும் இந்த மண்டல கருத்தரங்குகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 அன்று திருச்சி மாநகரில், லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்துவது என தீர்மானித்திருக்கிறோம்” என்று இடதுசாரித் தலைவர்கள் தெரிவித்தனர்.
பறிக்கப்படும் ஜனநாயக உரிமைகள்
“அக்டோபர் 15 அன்று ஏற்கனவே பேரணி நடத்த முடிவெடுத்திருந்தோம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அந்தத் தேதியில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் முன்னணி பாத்திரம் வகிப்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படுகிற இந்த நாட்டில்தான், மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாகச் சென்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மீதும் காவல்துறை, ராணுவம், துணை ராணுவத்தை ஏவி, கொடூரமான அடக்குமுறையையும் தாக்குதலையும் ஒன்றிய பாஜக அரசாங்கம் டெல்லியிலே நடத்திக் கொண்டிருக்கிறது. டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் காவல்துறை அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டுள்ளன.
எல்லாவிதமான அடக்குமுறைகளையும் தாக்குதலையும் மீறி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரிகள் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்” என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.
கோரிக்கைகளை கிடப்பில் போடுவதா?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு:
“வரலாறு காணாத வகையில் அரிசி, பருப்பு உட்பட எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், எளிய மக்கள், ஏழைகள் பயன்படுத்தும் நூறு அத்தியாவசியப் பொருட்களின் விலையை எந்தச் சூழலிலும் உயர்த்தக் கூடாது. இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினோம். அந்தச் சட்டத்தை இயற்றாமலேயே அன்றைய அரசு கடந்துவிட்டது. இது குறித்து மீண்டும் வலியுறுத்துவோம்.
அரசு ஊழியர்கள் தொடங்கி சாலைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வரை உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம். நாடு வலது பக்கம் சென்று வறுமையிலும் ஏழ்மையிலும் சிக்கித் தவிக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் நாட்டின் திசைவழி இடது பக்கம்தான். நாங்கள் முன்னேறுவோம்.” – இவ்வாறு மு.வீரபாண்டியன் உறுதிபடத் தெரிவித்தார்.
அடக்குமுறை பிரச்சனையைத் தீர்க்காது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி பேசியது வருமாறு: “தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என போராடும் உழைக்கும் மக்கள் மீது தமிழ்நாடு அரசும் அடக்குமுறையை ஏவுகிறது. போராடுகிறவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காண்பதற்குப் பதிலாக அடக்குமுறைகளை ஏவுவது, கைது செய்வது, சிறை வைப்பது போன்றவை பிரச்சனையைத் தீர்க்க உதவாது. எனவே தமிழ்நாடு அரசு போராடும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, அவர்களின் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும்” என்று பழ.ஆசைத்தம்பி கூறினார்.