இந்தியாகட்டுரைகள்

சமத்துவத்துக்கான ‘இந்தியா’ – பிரிவினை விதைக்கும் பாஜக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா

“அரசியலில் சமத்துவமும் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மையும் இருக்கும்“ என்று இந்தியா குடியரசாக மாறிய நேரத்தில் பி ஆர் அம்பேத்கர் எச்சரித்தார்.
நம் காலத்தில் இந்த முரண்பாடுகளை நாம் எதிர்கொள்கிறோம்.  சமத்துவம் என்ற கருத்து – அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் சமத்துவம் என்ற கோட்பாடு இப்போது பெரும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.  நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கில் சமத்துவமில்லை என்பதை மென்மேலும் உறுதிப்படுத்தி வருகிறது.  சமத்துவமின்மை எல்லாத் துறைகளிலும் வெளிப்படுகிறது.
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக நலன் மீதான தாக்குதலை எதிர்த்து தோற்கடிக்க, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்பதை வரலாறு வலியுறுத்துகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்பது ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் பிளவுபடுத்தும் மற்றும் சலுகை சார்ந்த முதலாளித்துவ ஆட்சிக்கு, ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கான மாற்றாகும்.  மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதால் கொந்தளித்து, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள சங்கப் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளும், இந்த புதிய கூட்டணி பழித்தும் இழிவுபடுத்தியும் அவதூறுகளைப் பொழிந்து வருகின்றன.

அதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி, கிழக்கிந்திய கம்பெனியுடன் கூட்டணியை ஒப்பிட்டு  பேசினார். கிழக்கிந்திய கம்பெனியையும் அதன் வழித்தோன்றலான பிரிட்டிஷ் அரசையும், தேசபக்த, இடதுசாரி சக்திகள் நாட்டை விட்டு விரட்டியடித்த வரலாற்றை அவர் வேண்டுமென்றே மறந்துவிட்டார்.  காலனித்துவ ஆட்சிக்கு எதிராக நாடு போராடியபோது ஆங்கிலேயர்களுக்கு யார் சேவை செய்தார்கள் என்பது அவருக்கும் மற்ற அனைவருக்கும் தெரியும் என்பதால் அவருக்கு மறதி அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சி முழுக்க முழுக்க தவறான பாதையில் அரசாங்கத்தை நடத்தியது. பணமதிப்பிழப்பு போன்ற தீச்செயல்களால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.  கூட்டாட்சி முறைமைக்கு எதிரான ஜிஎஸ்டி வரியால் சிறு குறு தொழில் மற்றும் அமைப்புசாராத துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.  பொருளாதாரத்தின் தவறான மேலாண்மை வேலையின்மை நெருக்கடிக்கு வழிவகுத்தது.
கோவிட்-19 நெருக்கடியை தவறாகக் கையாண்டது அதை ஒரு பேரழிவாக மாற்றியது.  சமூகத் துறையைப் புறக்கணித்த மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மைகளைப் பொழிந்ததால் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.  மக்களுக்கு விரோதமாக அரசுக் கொள்கைகள் கட்டமைக்கப்பட்டதால் தான், கடந்த ஒன்பது ஆண்டுகளில் பணக்காரர்களின் செல்வம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.‌  கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவை சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்விட்டதால், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

அதிகார ஆசையில் இந்திய சமூகத்தை மதம், ஜாதி, மொழி, பிரதேசம் என்று பிரித்து வைத்துள்ளது பாஜக. இந்த அரசியலின் விளைவுகள் நாடு முழுவதும் வெளிப்பட்டுள்ளன. மிக அண்மையில் மணிப்பூர் மாநிலம் முழுவதும் எரிந்தது.  அரசாங்கத்தை விமர்சிக்கும் குரல்கள் கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்தி அடக்கப்படுகின்றன.  ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளில் பொதுவான சரிவு உள்ளது.  நம் நாட்டில் ஜனநாயகம் உயிர்வாழ முடியுமா என்பது நம் முன் உள்ள மிக முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.  ‘இந்தியா’ கூட்டணியின் உருவாக்கம் இந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

நமது அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் காலில் போடப்படுவதை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்பது நீண்டகாலமாக உணரப்பட்டு வந்தது.  மத்தியில் பாஜக வெற்றி பெற்றிருப்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை சீர்குலைக்கும் ஒரு குண மாற்றம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்தது.

மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் தேசபக்தி சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் பலமாக வலியுறுத்தி இருக்கிறோம்.  இருப்பினும், இந்துத்துவா அரசியலுக்கான மாற்று ஆர்எஸ்எஸ்-பாஜக அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணி வாக்குகள் பிரிந்து போவதைத் தடுப்பது மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் குரலாக மாறுவதன் மூலம் பாஜகவின் ‘பெரும்பான்மை’ அரசியலை எதிர்கொள்ளவும் முடியும்.  அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே சிறந்த புரிந்துணர்வையும், பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு ஒருவருக்கொருவர் நலன்களுக்கு இடமளிக்க வேண்டும்.  பாஜகவை தோற்கடிக்க தேசிய அளவிலான ஒற்றுமை உருவாகியுள்ளது.  மாநில அளவில் சிவன் தன்மையை கொடுத்து அங்கங்க தீர்வுகள் எட்டப்பட வேண்டும்..  இந்திய தேசிய காங்கிரஸ், தேசம் தழுவிய அமைப்பாக இருப்பதால், இந்த விஷயத்தில் அதற்கு தனிப் பொறுப்பு உள்ளது.

இவற்றுக்காக ஜூன் மாதம் பாட்னாவில் 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.  பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன.  இந்த கூட்டணிக்கு, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி, (அதாவது ஐஎன்டிஐஏ- இந்தியா) என பெயரிட முடிவு செய்யப்பட்டது.  பெங்களுருவில் இந்தியா சந்தித்த அதே நாளில், செயலிழந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தபோது, ஒற்றுமைப் பயிற்சி பாஜகவை எச்சரிக்கையாக ஆக்கியது. அதுவரை “அனைத்துமே தனிநபரிடம்“ என்று முழங்கிய பிஜேபி, 37 அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து போராடி நாட்டை விடுவித்த செழுமையான பாரம்பரியம் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு.  இந்த சக்திகள் பொதுத் துறையை உருவாக்கி முன்னிறுத்தி, நம் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தன.  சமூகப் பாகுபாடு, பேரினவாதம், கூட்டாட்சி முறைமையை சீர்குலைப்பது என்ற தீமைபயக்கும் அரசியலுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகள்  முன்னணி பாத்திரங்களை வகித்தன.  இந்த சக்திகள் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.

நமது சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான நாட்டை வளர்த்தெடுக்கக் கருதினர்.  சமூக, பொருளாதார, அரசியல்  நீதி  அதன் அடித்தளமாக இருக்க வேண்டும்.  இந்தக் கருத்தை ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறது.  இது வகுப்புவாத பிளவுகள், சாதிய படிநிலைகள் மற்றும் பாலின அடக்குமுறையை ஊக்குவிக்கிறது.  வெறுப்பிலிருந்து நாட்டை விடுவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே இந்தியா கூட்டணி உதயமானது.  நாம் வெற்றி பெறுவோம்.

– இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில் : டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button