உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம் .. தன்னார்வலர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.

சென்னை : மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்க ‘இல்லம் தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கை : கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இல்லம் தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடியிருந்ததால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் :-

● கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.

● பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்களின் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.

● மாணவர்கள் பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

● இத்திட்டத்தினைச் செம்மையாகச் செயல்படுத்துவதன் மூலமே மாணவர்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்குச் செல்லும் பொழுது அவர்கள் அதற்கு முழுத் தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் செயலாக்கமானது இக்கல்வியாண்டில் 6 மாதகாலத்திற்கு, தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1½ மணிநேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாடக் கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் செயல்படும் மாவட்டங்கள்:

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டமானது தெரிவு செய்யப்பட்ட கீழ்க்காணும் 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைக்கப் பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மற்றும் விழுப்புரம்.

செயல்பாட்டுக் குழுக்கள்:

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைத் தமிழகம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 நிலைகளில் செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், இத்திட்டமானது ஒரு அரசுத் திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பலதுறையைச் சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக்குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. இதில் கிராம அளவில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
❖ சைக்கிள்பேரணி
❖ வீதிநாடகம்
❖ பொம்மலாட்டம்
❖ கதைசொல்லுதல்
❖ திறன்மேம்பாட்டுச்செயல்பாடுகள்

தன்னார்வலர்களுக்கான தகுதிகள்:

தன்னார்வலர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதைப்போலவே, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என வரையறுக்கப்படுள்ளது.

வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்

தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)

யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்

குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்

எப்படி பதிவு செய்வது?

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின்கீழ் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்துள்ளார்.

இத்திட்டத்திற்கென சேவையாற்ற விருப்பமுடைய 38 மாவட்டங்களிலுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே கணினி மற்றும் Smart Phone மூலமாகவும் மற்றும் அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labs மூலமாகவும் 18.10.2021 முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

ரூ. 25 ஆயிரம் பரிசு

பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகச் செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்/ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான இலட்சினை (Logo with Tag Line) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான இலட்சினை (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர்/ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.

போட்டியாளர்கள் தங்களின் இறுதிப் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் இலட்சினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொது மக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button