
‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ – மத நல்லிணக்கத்தைப் பேசும் ஆவணப்படம் இது. சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டது. யூடியுப்பிலும் பதிவேற்றப்பட்டு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். நான்கு நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் மே – 31ஆம் தேதி ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப் படம் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் நடைபெறும் என ‘வீதி’ கலை இலக்கியக் களம் அமைப்பு அறிவித்திருந்தது. திடீரென நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கின் உரிமையாளர் காவல்துறையால் மிரட்டப்பட்டார். இதனால் அங்கு ஆவணப் படத்தை திரையிட முடியாத நிலை உருவானது. உடனே திரையிடல் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கும் சென்ற காவல்துறையினர், ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப் படத்தை திரையிடக் கூடாது. சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் என மிரட்டினர். இதனையறிந்த ஆவணப்பட இயக்குநர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“உண்மை வரலாற்றை ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. இந்து – இஸ்லாமிய நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடியது அல்ல.” என்று ஆவணப் படத்தின் இயக்குநர்கள் தவம், தமிழ்தாசன் எடுத்துக் கூறினர்.
“ஆவணப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்”
“இது மேலிட உத்தரவு” என்று காவல்துறை பிடிவாதமாகக் கூறியது.
இதனால் ஆவணப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. காவல்துறையின் தடைக்கு எதிரான கண்டனக் கூட்டமாக அந்த நிகழ்வு மாறியது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆவணப்பட இயக்குநர்கள் தமிழ்தாசன் மற்றும் தவம் ஆகியோர், “3 விழுக்காடு சிறுபான்மையினர், பெரும்பான்மை மக்களுடன் இணைந்து செல்வதை விட, 97 விழுக்காடு பெரும்பான்மை இந்து மக்கள் அந்த 3 விழுக்காடு சிறுபான்மையினரைத் தங்களின் அண்ணன், தம்பியாக ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிஜமான மத நல்லிணக்கம்.
இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் பகுதியில் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும் அம்பலப்படுத்தி, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆவணப் படத்தை உருவாக்கினோம்” உறுதி பட எடுத்துக் கூறினர் ஆவணப்பட இயக்குநர்கள்.
கருத்துரிமையைப் பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மாற்றம், மாற்றம் என்று கூவி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், அறைக் கூட்டங்களைக் கூட அனுமதிக்க மறுப்பது ஆபத்தான போக்காகும். அதுவும் மேலிட உத்தரவு என்று கூறி நிகழ்ச்சியை முடக்கி இருக்கின்றனர். யார் அந்த மேலிடம்? திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப் படத்தை அந்த மேலிடம் முடக்க முயற்சிப்பது ஏன்? என்பதுகுறித்து ஆளும் தாவெக வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்.