
இந்தியாவின் 16-ஆவது நிதிக் குழு தனது அறிக்கையில், நஷ்டத்தில் இயங்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (State PSUs) குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “பயனற்றதாக மாறிய நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பொருளாதார வளங்களை வீணடிக்கின்றன” என கூறுகிறது.
இதற்கு, இந்த தோல்விக்குப் பொறுப்பு யார்? மாநில அரசு மட்டும்தானா? ஒன்றிய அரசுக்கு பொறுப்பு இல்லையா? அல்லது இரண்டுக்கும் இடையிலான அரசியல்–நிர்வாகச் சீர்கேடா? என்பதே அடிப்படை கேள்வியாக உள்ளது.
மாநிலங்களைக் கடனாளியாக்கிய மோடி அரசு!
ஒன்றிய அரசு ஒருபுறம், “மாநில பொதுத்துறைகள் நஷ்டம்” என்று மாநில அரசுகளை விரல் நீட்டுகிறது. மற்றொரு புறம், ஜிஎஸ்டி நடைமுறை மூலம் மாநிலங்களின் சுய வருவாய் அதிகாரம் கடுமையாக குறைக்கப்பட்டது. இழப்பீட்டு தொகைகள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. இது மாநில அரசுகளை கடன் சார்ந்த நிர்வாகத்திற்கு தள்ளியது. பல மாநில பொதுத்துறைகள் இயங்க வேண்டிய மூலதனம், மானியம், வட்டி தள்ளுபடி ஆகியவற்றை ஒன்றிய அரசு திட்டமிட்டு குறைத்தது. வருவாயை வெட்டிவிட்டு, பிறகு “நஷ்டம்” என்று குற்றம் சாட்டுவது நீதியற்ற அரசியல் அல்லவா? இவை ஒன்றிய அரசின் தவறுகளாக உள்ளன.
மாநிலங்களில் அரசியல் தலையீடு உள்ளது என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவுக்கு ஒன்றிய அரசின் அதிகார குவிப்பும் காரணமாக இருக்கிறது. இரண்டும் சேர்ந்து, பொதுத்துறைகளை மக்களுக்கான சேவை அமைப்பாக அல்ல, எண்ணிக்கைக் கணக்குப் பொருளாக மாற்றிவிட்டன. இந்நிலையில் 16-ஆவது நிதிக் குழு “பொதுத்துறைகளை மூடுங்கள்” என்று சொல்வது நோய்க்கு மருந்து அல்ல, நோயாளியையே கொல்வதற்கு சமமானது.
16-ஆவது நிதிக் குழு மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி முன்வைக்கும் கருத்துகள், மேலோட்டமாகப் பார்க்கும்போது நிதி ஒழுங்கு என்ற பெயரில் மாநிலங்களின் தோல்வியை மட்டும் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாடு போன்ற சமூகநல அடிப்படையிலான மாநிலத்தின் நிலையை புள்ளிவிவரங்களோடு கூர்ந்து பார்த்தால், இந்த “நஷ்டம்” என்பது நிர்வாகத் தோல்வியின் விளைவு மட்டுமல்ல;
மாநில நிதிக்கட்டமைப்பில் ஒன்றிய அரசு ஏற்படுத்திய பாதிப்பின் நேரடி விளைவு என்பதே தெளிவாகிறது.
தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அறுபதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மின்சாரம், அரசு போக்குவரத்து, குடிநீர், வீட்டு வசதி, தொழில் மேம்பாடு, கூட்டுறவு நிதி போன்ற அத்தியாவசிய துறைகளில் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இவை சந்தை லாபத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அல்ல; தனியார் சந்தை இயங்கத் தவறும் இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அமைப்புகள்.
மின்சாரம்
தமிழ்நாடு மின்சார வாரியம் மாநில பொதுத்துறை நஷ்டத்தின் மையமாக இன்று சுட்டிக் காட்டப்படுகிறது. அதன் மொத்த நஷ்டமும், கடன் சுமையும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆண்டுதோறும் பதினெட்டாயிரம் முதல் இருபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் கணக்கில் காட்டப்படுகிறது. இந்த நஷ்டத்தின் முக்கிய காரணம் சந்தையின் தோல்வி அல்ல. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மட்டும் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. வீட்டு உபயோக மின்சார சலுகைகள், குறைந்த கட்டண விலை நிர்ணயம் ஆகியவை சேர்ந்து மின்சார வாரியத்தின் கணக்கில் பெரும் நஷ்டமாகப் பதிவாகின்றன. ஆனால், இதுவே கிராமப் பொருளாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பையும், சமூக நிலைத்தன்மையையும் தாங்கி நிற்கும் அடித்தளமாக உள்ளது.
போக்குவரத்து
அதேபோல் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலையும் பார்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சேர்ந்து நாற்பதாயிரம் முதல் நாற்பத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் சுமையில் உள்ளன. ஆண்டுதோறும் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் கோடி ரூபாய் வரை செயல்பாட்டு நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் இந்தப் பேருந்துகள் நாள்தோறும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்களை மலிவான கட்டணத்தில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இணைக்கின்றன. பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு தள்ளுபடி, கிராமப்புறங்களில், மலை கிராமங்களில் லாபமில்லாத பாதைகளிலும் சேவை வழங்கல் ஆகியவை இந்த நஷ்டத்தின் பிரதான காரணங்கள். இந்தச் சேவைகள் இல்லையெனில், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவை பெரும்பாலான மக்களுக்குச் சாத்தியமற்றதாக மாறும். இந்த நிலையில், பொதுத்துறைகளின் நஷ்டத்தை மட்டும் கணக்கில் கொண்டு அவற்றை சீர்கேடு என்று வர்ணிப்பது, சமூகச் சேவையின் செலவைப் புரிந்துகொள்ளாத பார்வையின் வெளிப்பாடாகவே உள்ளது.
மின்சாரம், பேருந்து, குடிநீர் போன்ற சேவைகள் முழுமையாக சந்தை விலையில் வழங்கப்பட்டால், பொதுத்துறை நிறுவனங்கள் காகிதத்தில் லாபம் காட்டலாம். ஆனால் அந்த லாபத்தின் விலை மக்களின் வாழ்க்கைச் செலவாகவும், சமூக சமத்துவத்தின் சிதைவாகவும் மாறும். இந்த உண்மையை 16-ஆவது நிதிக் குழு தனது பரிந்துரைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
மறுக்கப்பட்ட நிதி
இந்த நஷ்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குப் பிறகு, மாநில வருவாய் பெருமளவு ஒன்றிய அரசின் கைகளுக்கு இடம் மாறியது. 2017-க்கு முன்பு தமிழ்நாடு விற்பனை வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி போன்றவற்றின் மூலம் கணிசமான சுய வருவாயை வசூலித்தது. ஜிஎஸ்டி வந்த பிறகு இந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டாலும், அந்தத் தொகைகள் பல ஆண்டுகளில் தாமதமாகவே வந்தன. சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காலம் கடந்த பின்னரே கிடைத்தது. இதனால் மாநிலத்தின் நிதித் திட்டமிடல் தொடர்ந்து அழுத்தத்தில் சிக்கியது.
வருவாய் சுருங்கிய சூழலில், பொதுத்துறை நிறுவனங்களை நவீனமயமாக்கவும், தொழில்நுட்ப மேம்பாட்டில் முதலீடு செய்யவும் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசு மாநிலங்களின் கடன் வாங்கும் உரிமைக்கும் கடுமையான வரம்புகளை விதித்தது. மாநிலங்களின் கடன் உச்சவரம்பு ஜிஎஸ்டிபியின் மூன்று சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டதால், பெரிய அளவிலான முதலீடுகள் சாத்தியமற்றதாகின. இதன் விளைவாக, மின்சாரத் துறையில் கட்டமைப்பு மேம்பாடுகள், போக்குவரத்தில் புதிய பேருந்துகள், மின்சார வாகன மாற்றம் போன்றவை தேவையான அளவில் நடைபெறவில்லை. பழைய கட்டமைப்போடு இயங்க வேண்டிய நிலை நஷ்டத்தை மேலும் பெருக்கி விட்டது. வரி பகிர்விலும் தமிழ்நாடு தொடர்ந்து பின்தள்ளப்பட்டுள்ளது.
ஆறிலிருந்து நான்கு வரை
ஒரு காலத்தில் ஒன்றிய வரி பகிர்வில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை பெற்ற மாநிலம், 15- மற்றும் 16-ஆவது நிதிக் குழுக்களின் அளவுகோல் மாற்றங்களுக்குப் பிறகு நான்கு சதவீதத்துக்கும் கீழ் தள்ளப்பட்டுள்ளது. மக்கள்தொகை, வருமான வித்தியாசம் போன்ற அளவுகோல்கள் வளர்ந்த மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. அதிகமாக உற்பத்தி செய்து, அதிகமாக வரி வசூலிக்கும் மாநிலம், குறைவாகப் பெறும் இந்த முரண்பாடு தமிழ்நாட்டின் சமூகச் செலவுகளை மேலும் கடினமாக்கியுள்ளது.
நிச்சயமாக நிர்வாகப் பிழைகள் இல்லை என்று சொல்ல முடியாது. அரசியல் தலையீடு, மேலாண்மைத் திட்டமிடலில் குறைபாடு, செயல்திறன் மதிப்பீட்டு முறைகளின் பலவீனம், தனியார் மயமாக்கல் திணித்தல் ஆகியவை தமிழ்நாட்டின் பொதுத்துறைகளிலும் உள்ளன. ஆனால் இந்தப் பிழைகளைச் சீர்செய்ய தேவையான நிதி, அதிகாரம், சுயாதீனம் மாநிலத்திற்கு முழுமையாக வழங்கப்படவில்லை. அந்த அடிப்படை உண்மையை புறக்கணித்து, “நஷ்டம்” என்ற ஒரே காரணத்தை முன்வைத்து பொதுத்துறைகளை மூட வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்று கூறுவது, சமூகநல அரசின் அடித்தளத்தையே குலைக்கும் அணுகுமுறையாகும்.
தமிழ்நாட்டின் மாநில பொதுத்துறை நஷ்டங்கள் நிர்வாகத் தோல்வியின் அடையாளம் மட்டும் அல்ல.
மாநில வருவாயை ஒன்றிய அரசு கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட பிரதிபலிப்பு. பொதுத்துறைகளை பலியாக்கி கணக்கைச் சரி செய்வது பொருளாதார சீர்திருத்தம் அல்ல; அது சமூகச் சமத்துவத்தையும் பொதுச் சேவைகளையும் ஒழிக்கும் ஒரு அரசியல் முடிவாகவே இருக்கும்.