மாநில செயலாளர்

விஸ்வகர்மா திட்டம்: தந்தையின் தொழிலே மகனுக்கு..

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதும் கட்சிக் கடிதம்

போர்க்குணம் மிக்க தோழர்களே!

நமது நாட்டின் மாமன்னராக விளங்கிவரும் நரேந்திர மோடி அவர்களுக்கு, செப்டம்பர் திங்கள் 17 பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளும் அன்றுதான்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக, சாதியத் திமிருக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, பொதுவுடமை சமுதாயம் காண வேண்டும் என்ற லட்சியத்திற்காக சலிப்பின்றி தன்  வாழ்நாள் முழுவதும் போராடிய மாமனிதர் பெரியார். ஆதலால் அன்றைய தினம் நாம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றோம்.

அதே நாளில் மோடி பிறந்தார் என்பதற்காக பிறந்தநாள் கொண்டாட முடியுமா?

தந்தை பெரியாரின் பிறந்தநாளில், தானும் பிறந்த அதே நாளில், தன் பிறந்தநாள் பரிசாக ஒன்றை அறிவித்து மகிழ்ந்துள்ளார்.

நுனி நாக்கில் தேன் தடவி ஏமாற்றுவதில் வித்தகரமான மோடி, தற்போது மீண்டும் தேன் தடவியுள்ளார்.

நீட் என்கிற விஷத்தை தடவி பல மாணவ மாணவியர் மரணத்திற்கு காரணமான மோடி.

தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரால் படிப்பைத் தொடர முடியாமல், பாதியில்  நின்றவர்கள் குலத்தொழிலுக்கு செல்ல வித்திட்ட மோடி. தற்போது விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்கிற கொடிய விஷத்தை கொட்டியுள்ளார்.

விஸ்வகர்மா பகவானுக்கு மலர் தூவி வணங்கி, பகவானின் பெயரில் பெரும் பாவத்தை செய்துள்ளார். 18 வகையான தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்கள் மேன்மையடைய தொழில் புரிவோர் வாழ்வில் வசந்தம் வந்திடுவது போன்ற மாயத்தோற்றம் அளித்திடும் இத்திட்டம். வஞ்சம் நிறைந்த திட்டமாகும்.

கொடிய கொரோனாவின் பெருங்கொடுமையால் நாடு முழுவதும், சிறு, குறு, நடுத்தர தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இத்தொழிலை மேற்கொண்டவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல, சாதாரண சாமானிய மக்கள்.

தங்களின் உழைப்பையும் செலுத்தி, மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்திட்ட தொழில்கள். கொரோனா தொற்று காரணமாக ஆண்டு கணக்கில் மூடப்பட்டு பெரும் நட்டத்திற்கு ஆளானது. அத்தகைய பாதிப்பிலிருந்து இன்றுவரை மீள முடியாத துயரங்கள் தொடர்கின்றன. பூட்டப்பட்ட தொழிற்கூடங்கள் இன்று வரை திறக்கப்படவில்லை. பூட்டியது பூட்டப்பட்டதாகவே உள்ளது. பலர் தங்களது நிறுவனங்களை விற்று விட்டனர். பலர் இடத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். தொழில் இழந்தோர், வேலை இழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில்.

இவர்களது துயர் துடைத்திட, தொழில் காப்பாற்றப்பட எத்தகைய சிறு உதவிகளையும் செய்ய மறுத்திட்ட ஒன்றிய அரசு, தற்போது 18 வகை தொழில்கள் மேம்பட, 2027- 28 ஆம் ஆண்டு வரையிலான  ஐந்தாண்டு காலத்திற்கு ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவழிக்க அரசு இலக்கு நிர்ணயத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்டொன்றுக்கு ரூபாய் 2600 கோடி செலவிடப்படும்.

ஆமாம், 2024 ஆம் ஆண்டு விடை பெற இருக்கிற மோடி அரசு, தெரிந்தே இத்திட்டத்தை அறிவிப்பதன் நோக்கம் என்ன?

ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும், ஒவ்வொரு திட்டத்தை அறிவித்து தற்காத்துக் கொள்வதில் வல்லவர் மோடி.

கடந்த 2019 க்கு முன்னர் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை சரிகட்ட, முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை மறந்திட இயலாது.

தற்போது ‘இந்தியா’ கூட்டணி பாஜக கண்டு அலறுகிறது. அலறல் சத்தம் விண்ணைப் பிளக்கிறது.

சனாதானம் என்கிற சத்தத்தை ஓங்கி ஒலிப்பதன் மூலம், தன்னை தற்காத்துக் கொள்ளத் தண்டால் எடுக்கின்றது.

தனது சனாதன கொள்கையை ஓசைபடாமல் நிறைவேற்றிட மேற்கொள்ளப்படும் வஞ்சக அறிவிப்புதான் 18 தொழில்களுக்கான “விஸ்வகர்மா யோஜனா” என்கிற மோடியின் மோசடி திட்டம்.

அவை என்னென்ன தொழில் என்று வரிசையாக பார்ப்போம்..

1.குயவர்கள்
2.கொல்லர்கள்
3.தச்சர்கள்
4.சவரத்தொழில்
5.சலவைத் தொழில்
6.செருப்பு தைப்போர் காலனி தயாரிப்பவர்கள்
7.மாலை கட்டுபவர்
8.பொம்மை தயாரிப்பவர்கள்
9.மீன்பிடி வலை தயாரிப்பு
10.சுத்தியல், பூட்டு தயாரிப்பவர்கள்
11.துடைப்பம் தயாரிப்பவர்கள்
12.பொற்கொல்லர்கள்
13.பாய், கூடை தயாரிப்போர்
14.கொத்தனார்
15.படகோட்டிகள்
16.தையல் தொழிலாளர்கள்
17.கல் செதுக்குவோர்
18.சிற்பிகள் ‌

என பட்டியலிட்டுள்ளார் மோடி

எவ்வளவு நல்லெண்ணம், இத்தொழில் மேம்பட நான் கடன் தருகிறேன் என்று மோடியார் அறிவித்து இருப்பாரேயானால் பிரச்சனை இல்லை‌. மாறாக, இத்தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களுக்கு கடன் உதவி என்பதுதான் ஆபத்திலும், பேராபத்து.

அப்படி என்ன பேராபத்து, மேற்கண்ட தொழில்கள் செய்வோர் காலங்காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தொழிலை செய்வோர் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதனை கனவு கூட காண முடியாத பரிதாபத்தை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். ஊர் தோறும் இத்தொழில் செய்கின்ற ஒவ்வொருவரும், தனது பிள்ளையாவது படித்து பட்டங்கள் பல பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென கனவு காண்கின்றனர்.

அவர்களது கனவில் வெந்நீரை ஊற்றிக் கலைப்பது தான் மோடியார் மோசடி திட்டம்.

தொழில் செய்வோருக்கு கடன் கொடுக்க வேண்டிய மோடி, மாறாக அவனது 18 வயது பையனுக்கு ஏன் கடன் தர வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மேல் படிப்பிற்கு சென்று  மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக, ஆசிரியராக, பேராசிரியராக, விஞ்ஞானியாக ஆகிவிடக் கூடாது அல்லவா?

உனக்கு லட்சம் கடன். வட்டியில்லா கடன். தொழிலை நியாயமாக செய்துவிட்டால் மீண்டும், மீண்டும் கடன்.

பணத்தைக் காட்டி, ஆசையை மூட்டி, மீண்டும் உன் அப்பன் செய்த தொழிலுக்கு செல்!

குலத்தொழிலை கைவிட்டு கல்லூரிக்குப் போகும் கனவைக் கைவிடு! இதோ பணம்! பணம்!! லட்சமாய் பணம். இருகரம் நீட்டு, புத்தகப் பையை கீழே எறி என்கிற திட்டத்தை எந்தவித கூச்சமும் இன்றி, அச்சமும் இன்றி தனது பிறந்தநாள் பரிசாக அறிவித்துள்ளார் அயோக்கிய சிகாமணி மோடி

மூதறிஞர் என போற்றப்பட்ட ராஜாஜி, சென்னை மாகாண முதல்வராக எப்படி வந்தார் என்பது தனி கதை!

அவர் வெளிப்படையான மனிதர். எதனையும் ஒலித்து, மறைத்து பேசும் பழக்கம் உடையவர் அல்ல!

அவர் ஒரு கல்விக் கொள்கையை அறிவித்தார். அதுதான் பாதி நேரம் பள்ளி, மீதி நேரம் குலத்தொழில்.

இதனை குலக்கல்வி முறை என கூறி நிராகரித்தோம். மக்களின் கொந்தளிப்பை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது கல்விக் கொள்கையும் புதைகுழிக்கு சென்றது.

ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்ட, அருவருக்கத்தக்க கொள்கையைத் தோண்டி எடுத்து, முகம் கழுவி, பவுடர் பூசி, புது சட்டை அணிவித்து, பார்! பார்!! புது பிள்ளையை பார்! பளபளக்கும் பிள்ளையை பார்! என பம்மாத்து காட்டுகிறார் மோடி மஸ்தான் மோடி!

சிலர் இப்படியும் நினைக்கலாம் நமக்கு வரப்போகிற பணத்தை வரை விடாமல் தடுக்கிறார்களோ பாவிகள் என நம் மீது மண்ணை வாரி தூற்றலாம்.

இன்று லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும். ஆனால், உன் எதிர்காலம் விளக்க முடியாத பெரும் இருளை எதிர்கொள்ளும் என்பதனை நினைவிற்கொள்.

வரும் முன் உரைப்பதே மந்திரிக்கு அழகு என்பதனை ஏற்க மறுக்காதே!

சின்ன மீன்களைப் போட்டு, பெரிய மீன் பிடிக்கும் மிக கெட்டிக்காரத்தனமாக தூண்டில் போடும் மோடியின் மோசடி திட்டத்திற்கு பலிகடா ஆகிவிடாதே!

ஆட்டுக்கிடாயின் தலை மீது மக்கள் தண்ணீர் தெளித்து, சந்தனம், குங்கும பொட்டிட்டு. அழகான மாலை கொண்டு அலங்கரித்து அழைத்துச் செல்வது எங்கே?

எங்கே என்பது ஆடுஅறியாது? அது அறிய வேண்டுமென நாம் எதிர்பார்க்கும் கூடாது!

ஆனாலும் நாம்?

மீண்டும் மீண்டும் மனு தர்மம்! மோடியின் ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

தேவை எச்சரிக்கை!
மொழி உணர்வு!!
மீண்டும் சந்திப்போம்!

வணக்கம்

தோழமைமிக்க,

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button