அறிக்கைகள்மாநில செயலாளர்

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது.

சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் நிகழ்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டுள்ளார். விழாவில் பங்கேற்று பேசிய ஆர்.என்.ரவி, விடுதலை போராட்ட காலத்திலேயே, நாட்டு மக்கள்  தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி மீது அவதூறு பரப்பும் மலிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.

படித்த பண்டிதர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கூடி, காலனி ஆட்சி அதிகாரத்தில் பங்கும், ஆங்கிலேயர்கள் பார்த்து வந்த அரசு வேலைகளில் ஒதுக்கீடும் கேட்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை மக்கள் தளத்திற்கு மாற்றி, மாபெரும் இயக்கங்களை முன்னெடுக்க வழிகாட்டியவர். பல வடிவங்களில் நடந்து வந்த விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை பாதைக்கு மாற்றி, கோடானு கோடி மக்கள் பங்கேற்கும் பேரியக்கமாக மாற்றுவதில் வெற்றி கண்டவர்.

ஈஸ்வர் அல்லா தேரே நாம், சப்கோ ஷன் மதி தே பகவான் என ஓயாமல் முழங்கி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபு வளர்த்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர். இந்து – முஸ்லிம் ஒற்றுமையை தனது உயிருக்கும் மேலாக கருதி வாழ்ந்து வந்தவர்.

மதவெறிக்கு  குறிப்பாக பெரும்பான்மை மதவெறிக்கு எதிராக சமரசம் காணாமல் போராடியவர், கோட்சே என்ற மத வெறியனின் துப்பாக்கி குண்டுகளை
நெஞ்சில் தாங்கி  அன்னை நாட்டின் மண்ணில் ரத்தம் சிந்தி, உயிர் துறந்தவர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும்  தலைவராக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தியை அவருக்கு எதிராக நிறுத்தும் நாக்பூர் குரு பீடத்தின் பிரித்தாளும் புத்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி விஷமத்தனத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் வினாடியும் பங்கேற்காத, மதவெறி, சனாதனக் கும்பலின் குரலை ஆளுநர் ஆர்.என்.ரவி  எதிரொலித்திருப்பதை நாடு ஒரு போதும் ஏற்காது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சர்ச்சைகளை  உருவாக்கும் முரண்பாடுகளை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ஆர்.என்.ரவியின் மலிவான பேச்சை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button