ShortNoticeஆரோக்கியம்தமிழகம்

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

ஒன்றிய, மாநில அரசுகள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. மாதவிடாய் காலம் என்பது நம்முடைய முன்னோர்கள் அதை ஒரு பெரிய தீட்டாக கருதினார்கள்.

மாதவிடாய் காலகட்டத்தில் பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வீட்டுக்கு வெளியில் படுத்து உறங்குவது, அவர்கள் எதைத் தொட்டாலும் அந்த பொருள் தீட்டுப்பட்டுவிடும் என்ற அடிப்படையில் நல்ல காரியங்கள் என்றால் ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும், சுப நிகழ்ச்சிகள் பங்கு பெற்றாலே பாவம் என்ற அளவில் பெண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். நள்ளிரவு ஒரு மணி ஆனாலும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற பலவித கட்டுப்பாடுகள்.

இப்படி மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். தீட்டு என்பது மூடநம்பிக்கையாக இருந்தாலும் அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற கருத்து ஒளிந்து இருந்தது. அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கைகளால் பெண்கள் பட்ட கஷ்டங்களும், துயரங்களும் சிறிய அளவில் மாறியிருந்தாலும் இப்போதும் பெருமளவில் தொடர்கிறது.

நாம் வாழும் நாட்டில், தமிழகத்தில் பெண்கள் பருவமடைந்த நாள் முதல் மெனோபாஸ் என்கிற நிலையை எட்டும் வரை, மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுபவிக்கிற கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பொதுவாக மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்கள் வரை மாதவிடாய் காலம் தொடர்கிறது.

இத்தகைய காலகட்டங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படுகின்ற பிரச்சனைகளான கை, கால் வலி, வயிறு வலி, இடுப்பு வலி, உடல் முழுவதும் வலி என தாங்க முடியாத வலிகளோடு இந்த நாட்களை பெண்கள் கடக்கிறார்கள். இத்தகைய கொடுமையான வலிகளுடன் குடும்ப வேலைகள் அனைத்தையும் செய்வது, குழந்தைகளைப் பராமரிப்பது, வேலைக்கு செல்வது உள்ளிட்ட பெரும்பாலான கடமைகளையும் சுமக்கின்றனர்.

காவல்துறை, அரசு அலுவலகங்கள், தனியார் துறை வேலை, உடல் உழைப்பு தொழிலாளர்கள் உட்பட வேலைக்குச் செல்லும் பெண்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து வேலை செய்வது மற்றும் பணிச்சுமைகளால் படும் துயரங்கள் ஏராளம்.

இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகளை நெருங்கும் தருணத்தில் கூட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துதான் மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்ற நிலை நீடிக்கிறது.

நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு ஓராண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அரசுப் பணியாளர்கள் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தாது. லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பேறுகால விடுப்பு அளிப்பது இல்லை. அதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியமாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, அரசுத் துறைகளில் மட்டுமல்ல, தனியார் துறை, ஒப்பந்த பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் மாதவிடாய் காலக் கோரிக்கை என்ற பெரும் முழக்கத்தை முன்னெடுத்துப் போராடுவோம்.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அரசு மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது குறித்து உரிய முடிவுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

– கலை அஸ்வினி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button