
நவம்பர் முதல் தேதியன்று “தமிழ்நாடு நாள் விழா”வை தமிழ்நாடு அரசு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கொண்டாடியிருக்கிறது.
‘தமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இந்த முறை ஞாயிற்றுக் கிழமை வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’ என்று நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
அந்த விழாவில் கவிஞர் ஜீவபாரதி அவர்கள் உள்ளிட்ட ஐந்து எழுத்தாளர்களின் அனைத்துப் படைப்புகளையும் நாட்டுடைமையாக்கி, வெகுமதி வழங்கியுள்ளனர். தமிழ்ச் சான்றோர்கள் பாராட்டப்பட்டுள்ளனர். எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகையை உயர்த்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கான தனிக்கொடி உருவாக்கப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளனர். அது தமிழ்நாட்டின் மரபுகளுக்கு உரிய வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
கல்வி முறையில் தமிழை ஒரு பாடமாக வைக்க கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், பயிற்றுவிக்கும் மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் தமிழே இருக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே கிடக்கிறது.
தமிழ்நாடு அரசு ஆணைகள் கூட இன்றுவரை ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டு, பின்னர் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. தமிழுக்கே முதன்மை இடம் வழங்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாடு காத்திருக்கப் போகிறது?
நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என அஇஅதிமுக அரசு அறிவித்தது. தமிழ்பேசும் நிலத்தை மாநிலமாக்குவதற்கும், அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கும் தியாகங்களைச் செய்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய வகையில், தமிழையும், தமிழ்நாட்டையும் மாற்றியமைக்க இந்த அரசாவது முயற்சித்தால் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.
சொல்லோடு நிற்காமல், செயலில் இறங்கவேண்டும்.
தமிழ்நாடு வரலாறு ஒரு கட்சியின் சொத்தல்ல!

ஜூலை 18-ந்தேதிதான் தமிழ்நாடு நாள் என்றும் நவம்பர் 1 என்று வரலாற்றை மாற்றவேண்டாம் என்றும் த.வெ.க. அரசை தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பெயர் மாற்றத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக்கூடாது. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது” என்கிறது திமுக அறிக்கை.
மேலும் “சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார். தாணுலிங்க நாடார், பொன்னப்பநாடார், அப்துல்ரசாக் என எத்தனையோ தீரர்கள்” எல்லைப்போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகப் பட்டியலிடுகிறது.
ஆனால்-
- மொழிவழி மாநிலங்கள் அமைக்க நேரு அரசு மறுத்ததைக் கடுமையாகச் சாடி, தமிழ்நாடு மட்டுமின்றி, மொழிகளின் அடிப்படையில்தான் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதையோ,
- கன்னியாகுமரி மாவட்டம், திருத்தணி, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை ஆகியவை தமிழ்நாட்டுக்குள் வர வேண்டும் என்ற எல்லைப் போராட்டத்தில் ஜீவா முன்னின்று பங்கேற்றதையோ,
- சட்டப்பேரவையில் முதலில் தமிழில் பேசியவர்கள் ஜீவாவும், பி.ராமமூர்த்தியும்தான் என்பதையோ,
- மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டவர் தமிழராகப் பிறக்காத புபேஷ் குப்தா என்பதையோ,
- கம்யூனிஸ்டுகள் தலைமையேற்ற விவசாயிகள் சங்கத்துக்கு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்று 1947ம் ஆண்டிலும், தொழிற்சங்கத்துக்கு தமிழ்நாடு தொழிற்சங்கக் காங்கிரஸ் என்று 1952ம் ஆண்டிலும் பெயர் சூட்டப்பட்டது என்பதையோ,
- தமிழ்நாடு என பெயர் வைக்கவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் தனது உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் எழுதி வைத்தார் என்பதையோ திமுக குறிப்பிடாது.
ஏனென்றால், அவர்கள் கட்சியைப் பார்க்காமல், தமிழ்நாட்டின் மரபு, நலன்கள் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள் அல்லவா! தமிழ் மொழி, தமிழ்நாட்டின் நலன் என்றால் அது, திமுக மட்டுமே எனும் தோற்றத்தை மட்டுமே நிறுத்த நினைப்பவர்கள்.
தமிழ்நாட்டு எல்லைப் போராட்டத்தில் திமுகவுக்குப் பெரிய பங்கில்லை; பல பத்தாண்டுகளாக, தமிழ்நாடு என நடத்தப்பட்ட போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்களித்தனர் என்பவற்றை அங்கீகரிக்க திமுக மறுப்பதாலேயே, மொழி வழி மாநிலமாக தமிழ்நாடு உருவான தேதியை மாற்றியமைக்க முயல்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ஜனசக்தி நவம்பர் 1ஆம் தேதி தனித்தமிழகம் அமைக்கப்பட்டது தேசிய பெருநாள் என்று கொண்டாடியது. இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஐ தமிழ்நாடு அமைக்கப்பட்ட நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பேராசான் தோழர் ஜீவா பேசினார்.
அந்த மலரில், “மொழி வழி ராஜ்யங்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்தியா வரைபடத்தில் (மேப்), சென்னை மாநிலம் என்று போடாமல் தமிழ்நாடு என்றே குறிக்கப்பட்டுள்ளது.
தியாகி சங்கரலிங்கனாரை அடக்கம் செய்தபின்பு நடத்தப்பட்ட 50 ஆயிரம்பேர் கலந்துகொண்ட கூட்டத்தை “இது தமிழ்நாடு, இதைத் தமிழ்நாடு என்று அழை” என ஜனசக்தி 22.10.1956ல் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
வரலாற்றை யாரும் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தி எழுதிவிட முடியாது. தமிழ்நாடு என்ற பெயரும், மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு உருவான வரலாறும் எந்தவொரு தனிக் கட்சிக்கும் சொந்தமானதல்ல. கம்யூனிஸ்டுகள், தமிழ்த் தேசிய இயக்கத்தினர், எல்லைப் போராட்டத் தியாகிகள், பல்வேறு அரசியல் இயக்கங்கள் எனப் பலரது தியாகங்களும் போராட்டங்களும் இணைந்தே இன்றைய தமிழ்நாடு உருவானது. அந்தப் பங்களிப்புகளை மறைத்துவிட்டு, ஒரு கட்சியின் சாதனையாக மட்டுமே சுருக்குவது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம். அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து, உண்மையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதே இன்றைய தலைமுறையின் கடமை.
ஜூலை 18 என்பது தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட நாளாக இருக்கலாம்; நவம்பர் 1 என்பது மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நாள். இரண்டின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பதுதான் நேர்மையான வரலாற்றுப் பார்வை!
=====
ஜனசக்தி 14.10.1956
புதிய தமிழக தினம் நாடெங்கும் கொண்டாடுக! கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

நவம்பர் முதல் நாள், தமிழனின் வரலாற்றில் முதன் முதலாக மலரப்போகும் புதிய தமிழ் ராஜ்யத்தை, கம்யூனிஸ்டு கட்சி, உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
மொழிவழி ராஜ்ய அமைப்புக்கு உலைவைக்க முயற்சி செய்த தட்சணப் பிரதேசம் போன்ற எதிர்ப்புக் கோஷங்களை, ஒன்றுபட்ட போராட்டத்தால் முறியடித்து, தமிழ் ராஜ்ய வெற்றி பெற்ற தமிழ் மக்களை கம்யூனிஸ்டு கட்சி மனமார வாழ்த்துகிறது.
பற்பல வீரப்போராட்டங்களின் மூலம் தாயகத்தோடு இணைவதில் வெற்றி பெற்றுள்ள திரு-தமிழக மக்களை, கம்யூனிஸ்டு கட்சி, சகல ஜனநாயக சக்திகளோடு இணைந்து நின்று குறிப்பிட்டுப் பாராட்டுவதுடன், பெருமிதத்தோடு தமிழகத்துள் வரவேற்கிறது.
தமிழகத்தைப்போல் புதிய மொழிவழி அமைப்பைப் பெறுகின்ற ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம்,விசால ஆந்திரம், நூதன வங்கம், போன்ற இதர இந்திய மாகாண மக்களையும் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாகாணக் கமிட்டி வாழ்த்துகிறது.
புதிய தமிழ் ராஜ்ய வெற்றி, மொழி வழி ஜனநாயகத்திற்கு வெற்றியென்றும், தேசீய பாரம்பரியக் கோரிக்கைக்கு வெற்றியென்றும்,இந்திய மக்களின் மகத்தான சாதனையென்றும் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.
இந்த வெற்றிக்கு வழிகாட்டிகளாயிருந்த தமிழக தேசீயத் தலைவர்களை இன்று ஞாபகப்படுத்திக் கொண்டு பாராட்டுவோமாக! இந்த வெற்றிக்கும் தமிழனின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எண்ணற்ற வீரத்தியாகிகளுக்குஇன்று வணக்கம் செலுத்துவோமாக!
=====
ஜனசக்தி 22-10-56,
இது தமிழ்நாடு! இதைத் தமிழ்நாடு என அழை!
50 ஆயிரம் பேர் கூட்டத்தில் சர்வகட்சித் தலைவர்கள் முழக்கம்
சங்கரலிங்க நாடார் பேரில் சென்னையில் சபதம்

“சுதந்திரம் கிடைத்த பிறகு மொழிவழி ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று காந்திஜியும் காங்கிரஸ் மகாசபையும் கொடுத்த அடிப்படை லட்சியத்தை, பெருமுதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இன்றைய காங்கிரஸ் கட்சியும், பண்டித நேருவும் கைவிட்டுவிட்டார்கள்.
அதனால்தான், நாடு முழுவதும் கொந்தளிப்பு! அதனால்தான் எல்லைப் போராட்டங்கள்! அதனால் தான் சங்கரலிங்கனார் போன்ற மிகச்சிறந்த தேசபக்தர்களும் உயிர்விட வேண்டிய நிலைமை! அதனால்தான் பழனி சிறையில் தொண்டர் மாணிக்கத்தின் மறைவு!”
ஜனசக்தி 1.11.1956
காங்கிரஸுக்குக் கண்டனம்
பிரிட்டிஷ் படைப்பான பிரிவினையும், சரித்திரத்தன்மையற்ற செயற்கைப் படைப்பான எல்லைகளும்; இந்திய ஒற்றுமைக்கு அபாயம் விளைக்கும் என்பதைவிட ஆற்றல் அளிக்கும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
சென்னை ராஜ்யத்திற்கு மக்கள் விருப்பப்படி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட ஆட்சியாளர்கள் இதுவரை ஒருப்படவில்லை.
தமிழே, தமிழ் ராஜ்யத்தின் ஆட்சி மொழி என்பது இன்னும் சட்டத்திலும் நடப்பிலும் இடம் பெறவில்லை.
இந்த மக்கள் கோரிக்கைகள் விரைவில் வெற்றி பெறப்போவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்களின் ஜனநாயக சக்தி ஐயந்திரிபுக்கு இடமின்றி வெற்றி பெற்றிருப்பது மெய்.