கட்டுரைகள்

ஜனநாயகத்தை மீட்பதற்கான போர்க்களம்!

இரா.முத்தரசன்

நவம்பர் முதல் நாள் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத மக்களின் பேரெழுச்சியை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டு வியந்தது. மாணவர்கள் – இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என பெருங்கூட்டம் கூடி, தேசத் துரோகத்திற்கு எதிரான எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்துள்ளது. நாட்டில் பிரதானக் கட்சிகள் அனைத்தும் எழுப்பிய பேரொலி போர்ப் பரணி பாடியுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், வி.சி.க., த.வெ.க. என அனைத்து அரசியல் கட்சியினரும், தங்கள் தங்கள் கட்சிகளின் கொடியோடு உரக்கக் குரல் எழுப்பி வலம் வந்துள்ளனர்.

கட்சிகளின் தலைவர்கள் திறந்த வேனில் அமர்ந்து வர, டெல்லி மாநகரைக் குலுங்கச் செய்த பெருங்கூட்டம் பெரும் பேரணியாகத் திரண்டது. நாளேடுகளும், தொலைக்காட்சிகளும் மாபெரும் கூட்டம் என தலைப்புச் செய்திகளாக படத்துடன் செய்திகள் வெளியிட்டன. கட்டுக்கடங்காத கூட்டம் – பெருங்கூட்டம் என்ற போதும் – சிறு அசம்பாவிதம் ஏதுமின்றி, அமைதியான முறையில் – அதே நேரத்தில், ஆக்ரோஷமிக்க பேரணி -பொதுக்கூட்டமாக நடந்தேறி உள்ளது. அன்னியர்களின் ஆட்சி நடைபெற்றபோது ‘வெள்ளையனே வெளியேறு’ என ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கிளர்ந்து எழுந்து போர்ப்பரணி பாடியதை நினைவுகூரத் தக்க வகையில் தற்போது நாட்டு மக்கள் சேர்ந்துள்ளனர்.

ஏன் இந்த கிளர்ச்சி – யாருக்கு எதிரான கிளர்ச்சி? எத்தகைய தனி நபர்களுக்கும் எதிரான கிளர்ச்சி இல்லை. ஒட்டுமொத்த தேச நலன் சார்ந்த கிளர்ச்சியாகும். நம் நாட்டு மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் எத்தகைய துன்பங்களையும் சகித்துக் கொள்வார்கள்.

  • விண்முட்ட விலைவாசி உயர்வு,
  • வேலையின்மை பெருக்கம்,
  • பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பழங்குடிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை

என பல்வேறு துன்ப, துயரங்கள் மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றன.

அத்தகைய துன்ப, துயரங்களை எதிர்கொண்டு வரும் மக்கள், அவற்றுக்கு எதிரான கண்டனங்களை அவ்வப்போது வெளிப்படுத்தத்தான் செய்தார்கள் என்றபோதும் – அவை எல்லாவற்றுக்கும் மேலாக, துரோகம் தலைதூக்கி படமெடுத்து ஆடுவதை சகித்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை என எச்சரித்த பேரணி இது.

மக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான போலீசார், துணை இராணுவப் படையினர், துப்பாக்கிகள், தடி, கம்புகள் சகிதமாக டெல்லியில் குவிக்கப்பட்டனர். வழக்கமாக போராட்டங்களும், பேரணிகளும் நடைபெறும் இடமாக – காலம் காலமாக இருந்து வந்த ஜந்தர் மந்தர் பெரும் திடல் மறுக்கப்பட்ட நிலையில், ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற பலத்தைக் கொண்டும், துணை இராணுவப் படை, போலீஸ் படையைக் கொண்டும் தங்களின் ஜனநாயக விரோதச் செயல்கள் அனைத்தையும் மூடி முக்காடிட்டு மறைத்து விடலாம் என்று ஆணவம் பிடித்த பாசிச மோடி அரசாங்கம் கனவு காண்கின்றது.

விடுதலை வேண்டிய மக்களுக்கு எதிராக இங்கிலாந்து நாடாளுமன்றம் செயல்பட்டது. இராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஆள்வதற்கு அனைத்து அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் வெள்ளையர் அரசாங்கம் மேற்கொண்டது.

வெள்ளையர் அரசின் கொடுங்கோலுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற முறையில், அன்று வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கால்களைக் கழுவிக் குடித்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் இன்று செயல்படுகின்றது.

நாட்டு மக்களின் மிக உயர்ந்த உரிமையான வாக்களிக்கும் உரிமையை பறித்த கொடுங்கோல் ஆட்சி. சிறிதும் குற்ற உணர்வின்றி கோலோச்சும் கொடுங்கோலர் அரசு. ஹிட்லர் முசோலினிகளை மிஞ்சும் மோடி-அமித்ஷா கூட்டணியின் பெரும் திருட்டாட்சி.

13 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் வாக்குரிமைகளை திருடி, அதன் மூலம் தங்களின் ஆட்சிகளை டெல்லியிலும், மாநிலங்களிலும் அமைத்துக் கொண்ட தேசத்துரோகிகளுக்கு எதிரான போராட்டமே இன்று நாட்டை உலுக்கி கொண்டிருக்கின்றது.

அதானி – அம்பானிகளின் கைக்கூலிகளாக இருந்து கொண்டு, அவர்களின் வாழ்வு மேம்பட ஒட்டுமொத்த தேசத்தையே பல்வேறு வகைகளில் கூச்சநாச்சமின்றி அடகு வைத்துள்ள மோடி வகையறாக்கள்.

நாடாளுமன்ற ஜனநாயக முறையை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்தகைய மக்களுக்கு துரோகம் செய்யக்கூடிய பெரும் பாவச் செயலை செய்துள்ளது மோடியின் பித்தலாட்ட அரசு.

தன்னை பெரும் சாதனையாளன் என்று தனக்குத் தானே மோடி மார்தட்டிக் கொள்கிறார். நாட்டை ஆண்ட அனைத்து பிரதமர்களையும் அவமானப்படுத்தும் விதமாக, மோடியும் அமித்ஷாவும் பேசி புளகாங்கிதம் அடைந்து வருகின்றார்கள்.

தெருவில் வீசி எறியப்பட்ட எச்சில் இலைகள் காய்ந்து, சருகாகி, எதற்கும் பயனற்ற நிலையில் – பெருங்காற்றில் பறந்து உயர்ந்து நிற்கும் கோபுரக் கலசத்தில் சிக்குவது உண்டு. அத்தகைய எச்சில் இலைகள், தாங்கள்தான் கலசத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொள்ளுமாம்! அப்படித்தான் மோடியும்-அமித்ஷாவும் இறுமாப்புடன் பேசி வருகின்றனர்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, திருட்டுத்தனமாக நாட்டின் பிரதமர் ஆனார் என்று பாஜக கும்பல் பெரும் கூச்சல் போடுகின்றது. தாங்கள் வசித்து, வாழ்ந்த பங்களாக்களை எல்லாம் நாட்டிற்கு வழங்கியதோடு, அன்னியர் ஆட்சியை எதிர்த்துப் போராடி 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை, சித்திரவதைகளை அனுபவித்த நேருவைப் பார்த்து, திருட்டுத்தனமாக பிரதமர் ஆனார் என்று பாஜக கூக்குரல் எழுப்புவது எத்தகைய பித்தலாட்டத் தனமானது – பிதற்றல்?

எந்த பொய்யையும் துணிந்து கூறுவதுதான் பாசிசம். அத்தகைய பாசிச வெறிபிடித்து அலைந்து திரியும் கூட்டம்தான் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் கள்ளத்தனமாக அமர்ந்துள்ளது. செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் வேறுபாடு அறியாத பிராணிக்கு ஒப்பானதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக.

மோடி தான் நாட்டின் நிரந்தர பிரதமர் – பாஜகதான் நிரந்தரமாக ஆட்சி புரியும் கட்சி என்கிற அகம்பாவத் திமிருடன் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். தங்களை நிரந்தரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான முறையில் சதித்திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆட்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற மிகக் குறுகிய கேடுகெட்ட கொள்கை உடைய கும்பல் நாள்தோறும் ஜனநாயகம் பேசுகின்றது. ஜனநாயகத்தை ஆழக் குழிதோண்டி புதைத்து விட்டு, அதன் மீது நிரந்தர சிம்மாசனம் அமைத்து அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு செயல்பட்டு வரும் புல்லுருவிக் கூட்டம்தான் காவிக் கூட்டம்.

நாடு ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்திட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களின் மனுதர்ம ஆட்சியை நிலைநாட்ட தேசபக்தி குறித்துப் பேசி வருகின்றார்கள். தங்களின் தேச துரோக செயல்களை மறைத்து, மக்களின் கண்களில் மண்ணை அள்ளிக் கொட்டும் வஞ்சகக் கூட்டம் தேசத்தின் வளர்ச்சி குறித்து பெருமிதம் பேசி வருகின்றார்கள். நாடு எப்போதும் இல்லாத அளவிற்கு தங்களுடைய ஆட்சியில்தான் வானளாவ உயர்ந்து நிற்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள். என்றுமில்லா அளவிற்கு உலகத்தின் கவுரவம் மிக்க நாடாக இந்தியாவை மோடி உருவாக்கிவிட்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

தேசபக்தி, தேசத்தின் வளர்ச்சி உலகின் உயர்ந்த இடத்தில் இந்தியா என்பன போன்ற கட்டுக்கதைகளை நாள்தோறும் பாஜக பரப்புவதன் நோக்கம் என்ன? உண்மையில் இவர்கள் தேச பக்தர்களா? உண்மையில் இவர்கள் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களா? இதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

பொதுத்துறை நிறுவனங்களை – பாதுகாப்புத் துறை உட்பட பலவற்றையும் அடிமாட்டு விலைக்கு விற்று சாதனை படைத்திட்டவர்தான் தேசபக்தி மிக்க மோடியார் அவர்கள்!

  • நடைபெற்று வரும் போராட்டம் – மக்களின் எழுச்சி மிக்க போராட்டம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம்!
  • நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கானப் போராட்டம்!
  • அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என உறுதி பூண்ட போராட்டம்!
  • வாக்கு திருட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கான போராட்டம்!

இதைக் கொச்சைப்படுத்தும் விதமாக வியாபாரம் பாதித்துவிட்டது, வியாபாரிகள் நட்டமடைந்து விட்டார்கள் என போராட்டத்திற்கு எதிராக வியாபாரிகளை தூண்டிவிடும் செயலில் பித்தலாட்ட பாஜக ஈடுபட்டு வருகின்றது. ஆனால், போராட்டத்தில் வியாபாரப் பெருமக்களும் பங்கேற்றனர்.

தேச விரோத, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அடாவடித்தனமாக செயல்பட்டவர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியான ஞானேஷ்குமாரை பாதுகாத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் மோடி அண்ட் கம்பெனி பகிரங்கமாகவும், ஞானேஷ்குமாருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

தேடப்படும் குற்றவாளியை மறைத்து பாதுகாத்தால் அது பெரும் குற்றம்.

நாட்டின் தலைநகரில் நவம்பர் முதல் நாளில் நடைபெற்ற பெரும் போராட்டம் என்பது நாட்டு நலன் காக்கும் போராட்டமாகும் – ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் – அங்கே பற்றிய நாடு முழுவதும் காட்டுத் தீ என பரவ வேண்டும். ஜனநாயக விரோதிகளைச் சுட்டெரிக்க வேண்டும். இம்மகத்தான போரில் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையோர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

ஆனால், இன்னமும் பாஜகவோடு துணை நிற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஞானேஷ்குமார் செய்தது சரிதான் என்று வக்காலத்து வாங்குவதை கண்டு சிரிப்பதா, அழுவதா அல்லது சிரித்துக் கொண்டே அழுவதா என்றுதான் தெரியவில்லை. எடப்பாடியாருக்கு அறிவுரை கூற வேண்டியது அதிமுக நண்பர்களின் பொறுப்பாகும்.

ஜனநாயகத்தை மீட்பதற்கான போர்க்களத்தில் தயக்கமின்றி, அச்சமின்றி அணி திரள்வீர்! நாட்டையும், ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் ஓர் அணியில் அணிதிரள்வீர் – ஆயத்தமாவீர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button