சினிமா

‘மகள் தந்தைக்காற்றிய உதவி..’

எம்.ஆர்.ஆதவன்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் வெளியீட்டில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் லால் சலாம்.

லால் சலாம் என்ற சொல்லுக்கு மொழியில்லை. அதன் உச்சரிப்பே கம்பீரமானது. புரட்சிகர செயல்பாடுகள், புரட்சிகர எண்ணங்கள், புரட்சிகரப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், புரட்சிகர அமைப்பு, அதன் கொடி ஆகியவற்றுக்கு வணக்கம் செலுத்துவதே லால் சலாம்.

லால் சலாம் என்ற முழக்கத்திற்கும்,  இந்த படத்துக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதைக் கடைசியில் பார்க்கலாம்.

இந்தக் கதை 1990 காலகட்டத்தில் நடைபெறுகிறது, தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில், கடலூர் பக்கத்தில் உள்ள ‘முராபாத்’ என்ற கிராமத்தில் இந்து, முஸ்லீம் மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றாக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு கட்சி, வாக்குகளை பெறுவதற்காக அவர்களைப் பிரிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறது. அந்தக் கட்சியின் வண்ணம் உங்களுக்குத் தெரியும் தானே?  பாவம், இயக்குநருக்குத் தெரியவில்லை. படத்தில் அவர்கள் கருப்பு, மஞ்சள், நீல வண்ணக் கொடி பிடித்து வருகிறார்கள்!

அங்கு இரண்டு கிரிக்கெட் குழுக்கள் இருப்பது அவர்களுக்கு வாய்ப்பாகிறது. 3 ஸ்டார் என்ற குழுவில் இந்து விளையாட்டு வீரர், “திரு”(விஷ்ணு விஷால்) இருக்கிறார். மற்றவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள். அவரை அந்தக் குழுவில் இருந்து வெளியேற்றி விடுகிறார்கள். (இந்தியக் கிரிக்கெட் குழுவில் முகமது ஷமி படும் பாட்டை நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்குக் கம்பெனி பொறுப்பல்ல).

வெளியேற்றப்பட்ட திரு, முழுவதும் இந்துக்களைக் கொண்டு எம்சிசி என்ற குழுவை அமைக்கிறார். இந்த இரண்டு டீம்களும் விளையாட்டில் மோதிக் கொள்கின்றன. ஒரே ஊர்காரர்கள் தான். ஆனால் அந்த மேட்ச், இந்தியா பாகிஸ்தான் மேட்சாகப் பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை, ஒரு மதக் கலவரமாக வெடித்து, கிராம மக்கள் பிளவுபடுகிறார்கள். அதனால் நடக்க வேண்டிய தேர்த் திருவிழாவும் நின்று போகிறது.

இதன் பிறகு இந்த கிராமம் இயல்பு நிலைக்குத் திரும்பியதா? அந்தத் தேர் திருவிழா நடந்ததா? அந்த இரண்டு டீம்களும் என்ன ஆயின? என்பதுதான் திரைப்படத்தின் கதை.

மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு கௌரவ வேடம். அப்படிச் சொல்கிறார்களே தவிர, படம் நெடுக அவரைப் பார்க்க முடிகிறது. ஒரு இளம் கிரிக்கெட் வீரரின் தந்தையாகவும், ஒரு துணிக்கடை முதலாளியாகவும் அவர் கதாபாத்திரத்தோடு பொருந்தி நிற்கிறார். பாஷாவுக்கு பின்பு ஒரு முழு நீள முஸ்லிம் பாத்திரம்.

வீட்டுக்குள் தனது மகனின் போட்டோவை பார்த்து கற்பனையாக கிரிக்கெட் விளையாடும் அக்காட்சி, கொஞ்சம் ‘க்ரிஞ்ச்’ ஆக இருந்தாலும், அக்காட்சியை அழகாக நம் மனதில் புகுத்தி விடுகிறார். அதேபோன்று ஆஸ்பத்திரியில் ஒரு அழுகைக் காட்சியில் எல்லா ரஜினி ரசிகர்களையும் அழ வைத்து விட்டார்.

ஆனால் அதுபோன்று மற்ற கதாபாத்திரங்கள் நம் மனதுக்குள் பதியவில்லை. படத்தின் ஹீரோயின் தான் கௌரவ பாத்திரம் செய்துள்ளார் என்று தோன்றுகிறது. வெறும் மூன்றே சீன்களில் வரும் அவர், பிறகு என்ன ஆனார்? அவரது கதை என்ன? என்றே தெரியவில்லை. திருவின் அம்மாவாக வரும் ஜீவிதா மற்றும் ரஜினியின் மனைவியாக வரும் நிரோஷா ஆகியோரின் கதாபாத்திரங்களும் வாசலுக்கு வெளியிலேயே நிற்கின்றன. கடைசிவரை மனதுக்குள் நுழையவில்லை.

படத்தில் மைக்கேல் என்ற ஒரே ஒரு கிறிஸ்தவர் வருகிறார். அவர் அங்கும், இங்கும் ஓடுகிறார், எங்கும் இருக்கிறார், அவ்வளவேதான். வேறொரு கிறிஸ்தவர், சர்ச், அதெல்லாம் இல்லை. மூன்றாவது மதத்தையும் திரைக்கு கொண்டு வர வேண்டும் அல்லவா!

திரைப்படத்தின் முக்கியமான பிளஸ் பாயிண்ட், பாடல்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். அதிலும் அந்தத் தேர் திருவிழா மற்றும் தேவா பாடும் ‘அன்பாளனே’ ஆகிய இரண்டு பாடல்களும் அற்புதம். மறைந்த பின்னணிப் பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரல்களை, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி, பாடலில் கொண்டு வந்தது அருமையிலும் அருமை. ஆனால் தொய்வாகவே நகரும் படத்திற்கு ஏற்றாற் போல் வரும் பின்னணி இசை இன்னும் சோர்வையே தருகிறது.

ஆங்காங்கே சில நல்ல வசனங்கள் இப்படத்தில் தென்பட்டன.

“மனசுக்கு முடியலன்னா சாமி கிட்ட வா, உடம்புக்கு முடியலன்னா ஆஸ்பத்திரிக்கு போ”, “திருவிழா நடத்துவது சாமிக்காக இல்ல, நமக்காக” என்று பூசாரி வேடத்தில் வரும் செந்தில் பேசுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில், பழம்பெரும் நடிகர் செந்தில் அழகாக நடித்துள்ளார். சிலருக்கு தனது தாத்தாவை கிராமத்தில் பார்த்தது போல் இருக்கிறது என்று அவரோடு பொருந்திக் கொள்கின்றனர்.

இன்னொரு மனதில் நிற்கும் கதாபாத்திரம் தம்பி ராமையா. சாமிக்கு கூலிங் கிளாஸ் எல்லாம் போடக் கூடாது என்று சொல்லும் பொழுது “இது நம்ம சாமி. கூலிங் கிளாஸ் எல்லாம் போடலாம். சாமி ஒன்னும் கோச்சுக்காது” என்ற வசனத்தை பேசும்போது மிக லாவகமாக நடித்துள்ளார.

படத்தில் மைனஸ் நிறைய! காட்சிகளும் திரைக்கதையும் முன்னுக்குப் பின் முரணாகவும் பொருந்தாமலும் உள்ளன. ஃபிளாஷ்பேக்குக்குள் ஃபிளாஷ்பேக் வைத்து, நாம் பார்க்கும் காட்சி எந்த காலத்தில் நடந்தது என்பதே புரியாமல் பெரும்  குழப்பத்தை ஏற்படுத்தி, இதை ஒரு டைம் டிராவல் படமாக மாற்றிவிட்டார் இயக்குநர்.

எல்லா கதாபாத்திரங்களும், அவற்றுக்கான கதைகளும் தொங்கிக் கொண்டே இருக்கின்றன. படத்தின் முதல் பாதி முடியும் வரை, இது என்ன கதை என்று யாருக்குமே புலப்படவில்லை.

படத்தில் முக்கியமான இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன – தொட்டுப் பிடித்து விளையாடுவது போல!

ஓரிரு வசனங்களைத் தவிர்த்து, மற்ற வசனங்களும் ஊளை வாசனையடிக்கும் அளவுக்கு அரதப் பழசு. “உன் இரத்தமும் சிவப்பு, என் இரத்தமும் சிவப்பு. இதுல எங்க இருக்கு மதம்“ என்று கேட்கும் பொழுது, “யப்பா, இன்னுமாப்பா இந்த வசனங்களை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று ‘அண்டரண்ட பக்ஷிகள்’ பேசிக் கொள்கின்றன.

கருத்துக்கள் அனைத்தும் ஒரு போதனையாக வைக்கப்பட்டுள்ளன. கதைக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று தனித்து விட்டது போல் இருக்கிறது.

இப்படம் பேசும் அரசியல், இந்தத் தலைமுறைக்கு மிகவும் அவசியமானது. ஆனால் இதை முந்தைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறையின் காலத்தைய படங்களைப் போல காட்சிப்படுத்தியிருப்பது கொடுமை.

ஆங்காங்கே கொஞ்சம் சங்கி வாடையும் அடிக்கிறது. படத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் பணக்காரர்கள். இந்துக்கள் ஏழைகள். முஸ்லிம்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இந்துப் பிளேயரை டீமிலிருந்து துரத்தினார்கள் என்று கூறுவதாகட்டும், இது ஒரு முஸ்லிம் வீடு, இங்க இந்து சம்பிரதாயம் எல்லாம் பண்ணக் கூடாது என்று ஒரு முஸ்லிம் சொல்வதாக இருக்கட்டும்- கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை, அப்படியே மதம் மாற்றி உல்டா செய்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே நடக்கும் மதச் சண்டை பற்றிப் பேசுகிறது. முஸ்லிம்களைக் காட்டும் வகையில், பிறையும் நட்சத்திரமும் போட்ட பச்சைக்கொடி ஆங்காங்கே கண்ணில் தென்படுகிறது. ஆனால் இந்துத்துவ வாதிகளை அடையாளம் காட்ட, ஒரு இடத்தில் கூட காவிக் கொடி பறக்காதது தற்செயலாக நடந்திருக்க முடியுமா?

ஒரு காட்சியில், மும்பையில் மதக் கலவரத்தை தூண்டும் ஒரு நபரைக் காண்பிக்கிறார்கள். அவன் கருப்புச் சட்டை அணிந்து, தோளில் சிவப்புத் துண்டு போட்டிருக்கிறான். போகிற போக்கில் ஒரு வன்ம வெடி.

இறுதியாக படம் சொல்ல வரும் கருத்து, முஸ்லிம்கள் அனைவரும் கெட்டவர்கள். ஆனால் அதில் ஒரு சில நல்லவர்களும் உண்டு. அதற்கு மாற்றாக, இந்துக்கள் அனைவரும் நல்லவர்கள். அதில் ஒரு சில தப்பான ஆட்களும் உண்டு!  அதே நேரத்தில் இதனை ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரளா ஸ்டோரி’ மாதிரி இல்லாமல் இலைமறை காய்மறையாகச் சொல்லுகிறார்கள்.

இப்போது பெயர்க் காரணத்தைத் தேடலாம். வெண்திரையில் ஓடியதைப் பார்த்ததோடு மட்டுமல்ல, பலமுறை மனத்திரையிலும் ஓட்டிப் பார்த்தேன். எதற்காகத்தான் லால் சலாம் என்றார்கள்? இதனை எழுதும் இந்த நிமிடம் வரை எந்த காரணமும் தென்படவில்லை. யாரேனும் கண்டுபிடித்துச் சொன்னால் பரிசு கூடக் கொடுக்கலாம்.

‘மகள் தந்தைக்காற்றும் உதவி மட்டுமல்ல, தந்தை மகளுக்கு ஆற்றிய உதவியும் கூட!

கட்டுரையாளர்:
எம்.ஆர்.ஆதவன்
தகவல்தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறார்.
கவின்கலைக் கல்லூரியின் சிற்பி விருது பெற்றுள்ளார்.
திரைப்பட விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொடர்புக்கு: 9840244625

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button