தமிழகம்

2024ல் இந்தியாவை விடுவிப்பதற்காக நாம் உறுதி ஏற்போம் – டி.எம்.மூர்த்தி முழக்கம்

செய்தித்தொகுப்பு: A. P. மணிபாரதி

கோவை: சின்னியம்பாளையம் தியாகிகளின் 77 ஆம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி கூட்டம் கடந்த 8 தேதி கோவையை அடுத்த சின்னியம்பாளையம் தியாகிகள் மேடை வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, தியாகிகள் மேடையில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி. சண்முகம் ஏற்றி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி ஏற்றி வைத்தார்.

கட்சி தோழர்கள் மற்றும் தொழிற்சங்க, வெகுஜன அரங்க நிர்வாகிகள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி. எம். மூர்த்தி பேசும் போது இந்தியாவை விடுவிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். வரும் 2024ல் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை இந்திய தொழிலாளி வர்க்கம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது , ” ராமையன், ரங்கண்ணன், சின்னையன், வெங்கடாசலம் என்ற அந்த நான்கு தியாகிகளும் 77 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் வரை உயிரோடு இருந்தார்கள். அவர்கள் தூக்கு மேடையிலே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட போது, தன்னுடைய உயிரை நினைத்து, குடும்பத்தை நினைத்து எல்லாம் அவர்கள் அழவில்லை. மாறாக, கரம் உயர்த்தி இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டுத் தங்களுடைய மரணத்தைத் தழுவினார்கள்.

உங்களுடைய விருப்பம் என்னவென்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள், நாங்கள் தொழிலாளர்களுக்காகப் போராடினோம்; தொழிலாளர்களுக்காகத் தண்டனை அனுபவிக்கிறோம்; தொழிலாளர்கள் ஒற்றுமை தான் முக்கியமானது. ஆகவே, நாங்கள் செத்துப்போன பின்னர் எங்களைத் தனித்தனியாக புதைக்க வேண்டாம், ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் புதைக்கப்பட்ட அந்த நினைவு மேடைக்கு பக்கத்திலே நின்று பேசுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

எதற்காக அவர்களுக்கு தூக்கு தண்டனை பரிசளிக்கப்பட்டது. முன்னர், பேசிய தோழர்கள் குறிப்பிட்டார்கள், 1946ல் ரங்கவிலாஸ் மில்லில் தொழிலாளர்கள் 12 மணி நேரத்தில் இருந்து 15 மணி நேரம் வரை ஒரு நாள் வேலை செய்ய வேண்டும். ஒரு மாதம் முழுமைக்கும் சேர்ந்து 15 ரூபாய் சம்பளம். பொழுது விடிவதற்கு முன்னால் போய் பொழுது அடைந்த பிறகு வீட்டுக்கு வர வேண்டும். பெண்களுக்கு அங்கே பாலியல் தொந்தரவு, வல்லுறவு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பது அன்றைக்கு ஒரே கட்சி தான். ஒரே தொழிற்சங்க இயக்கம்.

பணியாற்றும் பெண் தோழர்களுக்கு பாலியல் சீண்டல்கள் வரும்போது என் சங்கம், என் சக தோழர், அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற பிறகு, அதை எதிர்த்து நடந்த நிகழ்வில் யார் அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்து கொன்ற கொடியவனோ, எவன் அந்த கேடுகெட்ட செயலைச் செய்தானோ, கூட்டு பலாத்காரம் செய்வதற்கு காரணமான கயவனோ அவன் கொல்லப்பட்டது மிகப்பெரிய குற்றமாக கருதி நம்முடைய நான்கு தோழர்களும் தூக்கிலிடப்பட்டார்கள்.

ஏன் அவ்வாறு கருதப்படுகிறது? அது மிகப்பெரிய குற்றம் அல்ல. இந்திய தண்டனை சட்டம் இன்றும் இருக்கிறது, விடுதலைக்கு முன்னாலும் இருந்தது. அதைத்தான் இன்றும் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்காப்புக்காகவோ அல்லது தவிர்க்க முடியாமலோ அல்லது திட்டமிடாமலோ ஒரு மரணம் நிறைந்து விட்டால் அது கொலை மரணம் அல்ல, மாறாக அது மரணம் சம்பவித்த செயல் என்று சொல்லவேண்டும் என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதை அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை. ஏன் அதை ஏற்கவில்லை? ஏனென்றால் நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் சங்கம் வைத்தார்கள், கோரிக்கை வைத்தார்கள், செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்கள், சுரண்டலில் இருந்து தங்களுடைய சக தோழர்களை விடுவிக்க வேண்டும் என்று போராடினார்கள். எங்கேயாவது எவனாவது சிக்குவானா என்று எதிர்பார்த்தார்கள். இங்கு ரங்கவிலாஸ் தொழிலாளர்கள் சிக்கினார்கள்.

நாம் இங்கும் வழக்கு நடத்தினோம்; உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தினோம். அந்தக் காலத்தில் சுப்ரீம் கோர்ட் இல்லை. லண்டனில் பிரிவியூ கவுன்சில் தான் இருந்தது. அங்கும் வழக்கு நடத்தினோம்.

பிரிட்டனில் மிகச்சிறந்த வழக்கறிஞரை வைத்து நாம் வழக்கை நடத்தினோம். ராபர்ட் கிளைவு இங்கே இருந்து கொள்ளை அடித்து போனான். அவன் மீது இந்தியாவில் கொள்ளை அடித்த வழக்கு அங்கே நடந்தது. அவன் சொன்னான் பிரிட்டன் மண்ணிலிருந்து செய்தால்தான் குற்றம். அதை இந்தியாவில் செய்தால் குற்றமில்லை என்று சொன்னான். நீதிமன்றம் அவனை விடுவித்துவிட்டது.

ஆனால், இந்த வழக்கு 1946 ஆம் ஆண்டு நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவடைகிறது. 1946 ஆண்டு இந்தியா முழுவதும் விடுதலை இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்தது. பம்பாயில் மிகச்சிறந்த கடற்படை புரட்சி நடைபெறுகிறது. கப்பல் படை வீரர்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு நம்முடைய செங்கொடியையும், மூவர்ணக் கொடியையும், பச்சைக் கொடியையும் ஏற்றிவிட்டு, நாங்கள் சுதந்திர இந்தியாவினுடைய கப்பல் படை வீரர்கள், ஆகவே, எங்களை காப்பாற்றுங்கள் என்று சொல்லி காந்தியடிகளிடம் மனு கொடுத்தார்கள். முகமது அலி ஜின்னாவிடமும் மனு கொடுத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமும் மனு கொடுத்தார்கள். ஏனென்றால் அப்போது மூன்று கட்சிகள் மட்டும் தான் இருந்தது.

காந்தி சொன்னார், விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டியது எங்களுடைய வேலை, நீ போய் யாரு காசு கொடுத்து உனக்கு வேலை வழங்குகிறாரோ அவர் சொல்லுகிற வேலையைப் போய் பார் என்று சொன்னார். முகமது அலி ஜின்னா சொன்னார், விடுதலைப் போராட்டத்தை நடத்துவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் வேலைக்குப் போங்கள் என்று சொன்னார்.
எல்லோரும் போகமுடியாவிட்டால் பரவாயில்லை, முஸ்லிம்களாவது வேலைக்கு போங்கள் என்று சொன்னார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் சொன்னது இந்திய நாட்டினுடைய தொழிலாளி வர்க்கம் உங்களோடு துணை நிற்கும், உங்கள் துணையோடு இந்தியாவை நாங்கள் விடிவிப்போம் என்று!

நான் நினைத்துப் பார்க்கிறேன். இதே கோவை நகரத்திலிருந்து தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி வளர்த்த பேராசான் என்.கே.கிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணியாற்றினார். தலைமை அலுவலகம் மும்பையில் இருந்தது. அதிலிருந்த மொத்தம் ஒன்பது பேரில் அவர் ஒருவர் மட்டும்தான் வெளியில் இருந்தார். மற்றவர்கள் தலைமறைவாகவும் சிறையிலும் இருந்தார்கள். என். கே. கிருஷ்ணன் தான் பொறுப்பாகவும் இருந்தார். அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகப் போராட்டத்தை வழிநடத்தியவர். இந்தப் பூமியில், கோவை மண்ணில் இருந்து தொழிற்சங்க பணியாற்றியவர் என்.கே. கிருஷ்ணன் அவர்கள்.

இந்தியா முழுமையும் மிகப் பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் நடைபெற்றது. வெள்ளையரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிப்பாய்களிடம், நம்ம நாட்டுக்காக தானே போராடுகிறோம், நீ ஏன் எங்களைத் துப்பாக்கியால் சுடுகிறாய், நீயும் வா போராட்டத்திற்கு என்று சொல்லி இணைத்துக் கொண்டார்கள். இந்தியாவினுடைய தொழிலாளர்களும், படைவீரர்களும், விவசாயிகளும் சேர்ந்து பொங்கி எழுந்தனர்.

அந்த நேரத்தில்தான் லண்டன் ப்ரிவியூ கவுன்சிலுக்கு இந்த வழக்கு சென்றது. நான்கு தோழர்களும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டது, ரங்கவிலாஸ் மில் பிரச்சினைக்காக அல்ல, ராஜி என்ற பெண் தொழிலாளி கொடுமைப்படுத்தியதற்காக எதிர்வினையாற்றியதற்காக அல்ல, தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மட்டுமல்ல, இந்தியாவை விடுவித்தே தீர வேண்டும் என்று இந்திய தொழிலாளி வர்க்கம் கங்கணம் கட்டிக் கொண்டு நின்ற போது, அத்தனைக்கும் சேர்த்து பழிவாங்கப்பட்டவர்கள் தான் இந்த நான்கு பேர்களும்.

தங்களுடைய இன்னுயிரைத் தத்தம் செய்து, நூற்றுக்கணக்கான போராளிகள் இந்திய நாடு முழுமையும் தூக்கு கயிற்றிலே ஏறி, துப்பாக்கி குண்டை நெஞ்சிலே ஏந்தி, லத்தியால் அடிபட்டு செத்து இந்திய சுதந்திரத்தைச் சாத்தியப்படுத்தினர்.

ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காத, இன்னும் சொல்லப்போனால் அந்தப் போராட்டத்தை முடிந்த இடத்தில் எல்லாம் காட்டிக் கொடுத்த, எந்த பிரிட்டிஷ்காரனை விரட்டுவதற்காக இந்தியாவினுடைய தொழிலாளர்களும் விவசாயிகளும் சிவப்பு இயக்கமும் காங்கிரசும் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தோமோ, அந்த பிரிட்டிஷ்காரனுடைய காலடியில் நின்று கொண்டு இருந்த கும்பல், நம்முடைய தியாகத்தினால் விடுதலை அடைந்த இந்த நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்திருக்கிறார்கள்.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ என்று பாரதி பாடினானே, அது போல, விடுதலை அடைந்தபோது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனார்கள். ஒன்றும் மிச்சம் கிடையாது. வறுமை, பட்டினி! வங்கப் பஞ்சம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்கள் சோறு இல்லாமல் செத்து கிடந்த நாடு இது.

இந்தியா விடுதலை அடைந்தபோது சாலை வசதி வேண்டும், மின்சாரம் வேண்டும், ரயில்வே வேண்டும், சாப்பாடு வேண்டும், துணி வேண்டும், எதுவும் இல்லை என்ற நிலை! எந்த முதலாளியும் இதையெல்லாம் செய்வதற்கு முன்வரவில்லை. அன்றைக்கு பெரிய முதலாளிகள் கிடையாது; சின்ன சின்ன முதலாளிகள் தான். சுரங்கங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் எல்லாம் தனியார்களிடம் தான் இருந்தன.

அப்போதுதான் நேரு ஒரு கலப்பு பொருளாதாரம் முறையை உருவாக்கினார். அதில் பொதுத்துறையும் இருக்கும், தனியார் துறையும் இருக்கும். நம்முடைய வரிப்பணத்தில் தான் இந்தியாவில் அத்தனை நெடுஞ்சாலைகளும், ரயில்வே பாதைகளும் போடப்பட்டது. பக்ராநங்கல் அணை உட்பட பல அணைக்கட்டுகள் அந்தப் பணத்தில் இருந்து தான் போடப்பட்டன.

நம்முடைய மூதாதையர்களுடைய உழைப்பு, வனாந்தரங்களில் கூட மின் கம்பிகளை தூக்கிக்கொண்டும் தோளிலே சுமந்து கொண்டும் முள்ளிலும், கல்லிலும் நடந்தார்கள்.மலை முகடுகளுக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். மின்சாரம் வருகிறது என்று சொன்னால், அது சாதாரணமல்ல அன்றைக்கு வண்டிகள் கிடையாது, பாதைகள் கிடையாது. அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் அதைச் செய்து காட்டினார்கள். தொலைபேசி கம்பங்கள் நடுவதற்காக அந்த பணிகளிலே நம்முடைய தொழிலாளி செத்து மடிந்தான். அப்படித்தான் நெடுஞ்சாலைகள் வந்தன, ரயில் பாதைகள் வந்தன, மின்கம்பங்கள் மின் வழித்தடங்கள் வந்தன. அதற்காக கொடுக்கப்பட்ட பணம் எல்லாம் நம்முடைய வரிப்பணம், அதை மேம்படுத்துவதற்காக செலவு செய்வதற்காக கொடுக்கப்பட்ட பணம் எல்லாம் நம்முடைய வரி பணம், எனவே இவை அனைத்தும் நம்முடைய சொத்துக்கள்.

முதலாளிகளே இல்லாதிருந்த நாட்டில் இத்தனைக்கும் காசு கொடுத்த இந்த இந்தியாவினுடைய சாதாரண ஜனங்கள் இன்று எங்கு இருக்கிறார்கள்?

விடுதலை அடைந்தபோது விலாசமே இல்லாமல் இருந்த முதலாளிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அன்றைக்கு முதலாளியே இல்லாமல் இருந்த ஒரு நாடு, இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே நம்பர் ஒன் முதலாளி! உலகத்தினுடைய மூன்றாவது பெரிய முதலாளி எங்கிருந்து வந்திருக்கிறான்? இந்தியாவில் இருந்து வந்திருக்கிறான்! எங்கிருந்து அவருக்கு சொத்து வந்தது? எப்படி அவர் மகா பெரிய பணக்காரர் ஆனார்? மோடி இந்தியா வளர்கிறது என்கிறார். எது வளர்கிறது? தனிநபர் வருமானம் என்று சொன்னால் அது போன்ற அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது.

உதாரணமாக எனக்கு 5,00,000 ரூபாய் சம்பளம், தோழர் சண்முகத்திற்கு 5000 ரூபாய் சம்பளம் இரண்டையும் கூட்டி இரண்டால் வகுத்தால் 2,52,500 ரூபாய் வரும் இதுதான் தனிநபர் வருமானம். இந்த தனிநபர் வருமானம் 5000 ரூபாய் சம்பளம் வாங்குகிற சண்முகத்துக்கும் சம்பளம் இரண்டரை லட்சம் என்று கணக்கு காட்டும்!

உலகத்திலேயே பட்டினி குறியீட்டில் 101 வது இடத்திலே நாம் இருக்கிறோம். நமக்கு கீழே 15 நாடுகள் மட்டும் தான் இருக்கிறது. இலங்கை நம்மை விட நல்ல இடத்திலே இருக்கிறது. பாகிஸ்தான் நமக்கு மேலே இருக்கிறது. நம்மால் உருவாக்கப்பட்ட பங்களாதேஷ் நமக்கு மேலே இருக்கிறது.

பல கோடி பேர் பட்டினி கிடக்க சில நூறு பேர் பெருமுதலாளி(!) என்றால் அது என்ன வளர்ச்சி?

அவரவர் தேவைக்கேற்றபடி எல்லாமும் கிடைக்கிற அளவுக்கு பங்கு வைக்கப்பட்டு இருக்கிறதா ? என்றால் இல்லை. நம்முடைய வயிற்றில் அடித்து, அடித்து மிகப் பிரமாண்டமான முதலாளிகள் உருவாகி இருக்கிறார்கள். அதற்கு என்னென்ன கொள்கைகள் வேண்டுமோ அதையெல்லாம் வகுக்கிறார்கள். அவர்கள் வகுக்காத கொள்கை ஒன்றும் மிச்சமில்லை.

ஒன்று – வேலைக்கு உத்தரவாதம், 60 வயசு வரை எனக்கு வேலை இருக்கிறது.

இரண்டாவது – வேலை பார்த்தால் ஏழாம் தேதி அல்லது 10ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் எவ்வளவு என்று பேசி முடிக்க வேண்டும். அந்த சம்பளத்தைத்தான் கொடுக்க வேண்டும். அந்த சம்பளத்தை நீ கொடுக்கவில்லை என்றால் பத்து மடங்கு அபராதம் உன்னிடம் வசூலிக்கலாம். இதுதான் சம்பளத்திற்கான உத்தரவாதம்.

மூன்றாவது – ஓய்வுக்கு பின்னர் வெறும் கையை வீசிக்கொண்டு நான் சென்றால் மீதி இருக்கிற வாழ்க்கை எப்படி கடத்துவது? பிச்சை எடுத்து கஞ்சி குடிக்க வேண்டுமா? எனக்கு கௌரவமான வாழ்க்கை இல்லையா? ஆகவேதான் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தானோ அத்தனை நாட்களுக்கு கிராஜுட்டி, அதிலிருந்து கொஞ்சம் காசை எடுத்து பென்ஷன், மீதி வாழ்க்கையை சாப்பாபாட்டிற்கு கஷ்டப்படாமல் வாழ வேண்டும். உடம்புக்கு முடியவில்லை என்றால் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்லலாம். காசு இல்லாமல் வைத்தியம் பார்க்க முடியாமல் செத்து விடக்கூடாது.

இந்த மூன்றில் இருந்தும் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி எடுத்து விட்டார்கள். தற்போது அவுட்சோர்சிங் முறை கொண்டு வந்திருக்கிறார்கள் அப்படி என்றால் வேலைக்கு வெளியில் இருந்து ஆட்களை வாடகைக்கு எடுப்பது. அன்றன்றைக்கு வேலை பார்த்தால் அது கேஷுவல், ஆனால் 365 நாள் வேலை பார்த்தாலும் வாடகை தொழிலாளிதான் என்கிறான்.

இன்றைக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்து விடுவார்கள். கொடுக்கும்போதே என்றைக்கு வேலை போய்விடும் என்பதை முடிவு செய்துவிட்டு கொடுப்பது அப்பாயின்மென்ட். இதை கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

மோடி அரசாங்கம் சொல்லிவிட்டது எங்கள் கையில் பணம் இல்லை எனவே பென்சனை பற்றி இப்போது பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டது. ஆனால் 80,000 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள நீரவ் மோடிக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். அவனை எண்பதாயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறதா? வா நீ ஒரு 8000 கோடி ரூபாயை கட்டு, பாக்கி எல்லாம் உனக்கு தள்ளுபடி போ… என்று சொல்லிவிட்டு அரசாங்கம் என்ன சொல்லுகிறது. நாங்கள் வசூல் ஆகாத கடனிலிருந்து எட்டு ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டோம் என்று. 72 ஆயிரம் கோடி ரூபாய் போய்விட்டது அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள். ஆனால் 8000 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டோம் என்று சொல்லுகிறார்கள்.

அதே நேரத்தில் தொழிலாளிக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பென்ஷனை 2000 ரூபாயாக உயர்த்தி கொடு என்றால் கொடுக்க மாட்டார்கள். மோசமான ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே நாடு. ஒரே சாதி என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். அதன் நீட்சி என்ன ஒரே அதிபர் அதோட முடித்துக்கொள்.

இந்த தேசம் ரிஷிகளால் கட்டப்பட்டது என்று ஆர்.என். ரவி சொல்லுகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து மாதம் 20 லட்சம் ரூபாய் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்தியா விடுதலை அடைந்த போது 565 தேசங்களாக இருந்தது. ஒன்றாக சேர்த்தது யார் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்வார்கள் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் தான் கட்டினார் என்று. இந்தியாவில் இருந்த அத்தனை சமஸ்தானங்களும் போராடினார்கள் இந்தியாவுடன் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று. ஹைதராபாத் நிஜாம் ஹைதராபாத் சமஸ்தானத்தை நான் பாகிஸ்தானுடன் இணைக்கப் போகிறேன் என்று சொன்னபோது, முடியாதடா உன்னை இந்தியாவோடு தான் இணைப்போம் என்று சொல்லி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். 4000 கிராமங்களை விடுவித்து, ஆயிரக்கணக்கான தோழர்களை பலி கொடுத்து தியாகம் செய்த இயக்கம்!

இந்திய விடுதலை இயக்கத்தின் தாக்கம் தான் இந்தியாவை ஒன்றாக்கியது.

தமிழன் தமிழனாகத்தான் இருந்தான். தெலுங்கன் தெலுங்கனாகத்தான் இருந்தான். யூனியன் ஆப் ஸ்டேட் என்று கூட வைக்கலாம் என்று அம்பேத்கர் கருத்தை வைத்தார்.

ஆனால் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கொடி என்றால் மாநிலங்கள் இருக்கக் கூடாது. மாநிலம் என்று இருந்தால் தானே நீட் தேர்வு வந்தால் எதிர்க்கிறீர்கள். வேளாண் சட்டம் போட்டால் எதிர்க்கிறீர்கள்.

மாநில அரசாங்கம் எதற்கு ? தமிழ்நாடு என்ற பெயர் சரியில்லை, ஆகவே தமிழ் நாட்டை தமிழகமென்று மாற்றிவிடுவோம் என்று ஆளுநரை சொல்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் குடும்பம் குடும்பமாக சாகிறது, அது தப்பு என்று சொன்னால் மேலே சென்று உட்கார்ந்து கொண்டு சூதாட்ட முதலாளிகளோடு கும்மாளம் அடிகிறார் கவர்னர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1943ல் முதல் தடவையாக அதன் பெயரை பதிவு செய்கிறபோது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்று பதிவு செய்தது.

அதைப் பார்த்து, ஏஐடியூசி 1952 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சங்க காங்கிரஸ் என்று பெயர் வைத்துக் கொண்டது.

தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்க நாடார் செத்தார். அவர் காங்கிரஸ்காரர்தான், அன்று காங்கிரஸ் அரசாங்கம் தான் இருந்தது. சங்கரலிங்க நாடார் சாவதற்கு முன்னால் எழுதி வைத்துவிட்டு செத்துவிட்டார். நான் செத்தால் என்னுடைய உடலை காங்கிரஸ்காரர்களிடம் கொடுக்கக் கூடாது. கம்யூனிஸ்ட்காரர்களிடம் தான் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் என் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு செத்துப் போனார்.

அவருடைய உடலை வாங்கி அடக்கம் செய்தது நம்முடைய மதிப்புக்குரிய தலைவர்கள் கே.டி.கே. தங்கமணி அவர்களும் ஜானகி அம்மாள் அவர்களும் தான்.

தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மசோதா கொடுத்தது தோழர் பி.ராமமூர்த்தி அவர் சிறையில் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தோழர் பூபேஷ் குப்தா என்ன மாதிரியான ஆர்கியூமென்ட் தெரியுமா? அது புத்தகமாக இருக்கிறது. தோழர்கள் வாங்கி படிக்க வேண்டும்.

அவர் தமிழர் அல்ல தமிழ்நாட்டினுடைய பதிற்றுப்பத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் உங்களுக்கு என்ன லாபம் என்று நாடாளுமன்றத்தில் கேட்கிறார்கள், ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று அவர் திருப்பி கேட்டார்.

எப்படிப்பட்ட போராட்டங்களை இந்த தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக நாம் சந்தித்திருக்கிறோம். சர்வசாதாரணமாக வந்து இவருக்கு பிடிக்கவில்லையாம்! பெயரை மாற்றிவிட வேண்டும் என்று பேசுகிறார்.

மாற்று கருத்து வந்தால் மரண தண்டனை கொடுப்பேன் என்பதுதான் பாசிசம்.

நான் சொல்வதெல்லாம் நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் நீ வாயை மூடிக்கொண்டு இருந்தாலும் கூட நீ எனக்கு எதிரானவன் தான், அந்த பாசிஸ்ட் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் சுற்றி சுற்றி மாநில உரிமைகளை அழிக்கிறார்கள். மாநில மொழியை அழிக்கிறார்கள். பண்பாட்டை அழிக்கிறார்கள்.

பழைய சனாதன கருத்துக்களில் இருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம். இவ்வளவுக்கும் பிறகும் காதல் திருமணங்களும் நம்ம ஊரில் அதிகரித்துள்ளது. பெண்கள் என்றாலே போகப் பொருள் என்ற பார்வை படிப்படியாக தமிழ் மண்ணில் மாறி வருவது. நவம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் நம்முடைய பெண்கள் எல்லாம் நடனமாடி கொண்டு வந்தார்கள். மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த சமூகம் அவர்கள் மீது எதையெல்லாம் செய்யக்கூடாது என்று திணித்ததோ அதை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள்.

இந்த சமூகமும் அங்கீகரிக்கிறது கடந்த தலைமுறை இது எல்லாம் செய்திருக்க முடியாது. இந்த தலைமுறை செய்கிறது சந்தோஷமாக இருக்கிறது. மறுபடியும் கட்டுப்பாடுத்தனத்தை திணிப்பதிலே இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்றால் சனாதனம் இருக்க வேண்டும். மொடக்குறிச்சி பிஜேபி எம்எல்ஏ சொல்லுகிறார் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததால் தான் நாடு மோசமாகிவிட்டது என்று. அவரும் பெண்தான்.

அண்ணாமலையுடனே ஒட்டிக் கொண்டிருக்கிற நாராயணன் திருப்பதி சொல்லுகிறார், இந்தியாவில் கணவன் இறந்து போனால் பெண்கள் உடனடியாக தீ குளிக்க வேண்டும்.

பெண்கள் தீ குளிக்காததால் தான் தேசம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லுகிறார். எல்லாவற்றிலும் சனாதனத்தை பரப்புவதிலும் மூடத்தனத்தை பரப்புவதிலும் பழமை வாதத்தை பரப்புவதிலும் சாதியாகவும் மதமாகவும் சண்டை போட்டுக் கொண்டே இரு! ஆனால் இன்னொரு பக்கம் நான் வாரி வாரி கொடுப்பேன் நீ கண்டுகொள்ளாமல் இரு என்று சொல்லுவது நயவஞ்சகத்தனமானது அல்லவா?

சின்னையன், ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம் இந்த தியாகிகளின் நினைவு மேடையில் இருந்து நாம் இந்தியாவை விடுவிப்பதற்கு இந்த நேரத்திலே உறுதியேற்போம் என்று சொல்லி நிறைவு செய்கிறேன் வணக்கம்!”.

—————————————————————————————————

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் ராமசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி சண்முகம், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி ஆர் நடராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி சிவசாமி தமிழ்நாடு கே எம் செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மௌனசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி யூ கே சிவஞானம் சி ஐ டி யு மாவட்ட தலைவர் கே மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே சுரேஷ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தியாகிகளின் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டார்கள் பிளஸ் டூ தேர்வில் சின்னியம்பாளையம் அரசு பள்ளியில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த கீர்த்தனா, தீப நந்தினி, ஆகாஷ் ஆகியோருக்கும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த தேவகி, நேகா, மகிழன் ஆகியோருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button