அறிக்கைகள்உள்ளூர் செய்திகள்

ஏற்றுமதி தடையிலிருந்து சின்ன வெங்காயத்திறகு விலக்கு அளிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பி.எஸ்.மாசிலாமணி, மாநில பொதுச் செயலாளர்,

ஏற்றுமதி தடையிலிருந்து சின்ன வெங்காயத்திறகு விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிறிய வெங்காயம் தமிழ்நாட்டில் நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தான் பெரும்பகுதி விளைவிக்கப்படுகிறது. மற்ற மானாவாரி மாவட்டங்களில் சில வட்டாரங்களில் பயிரிடப்படுகிறது. இந்திய நாட்டின் தேவையில் பெரும் பகுதி வட மாநிலங்களில் விளையும் பெரிய வெங்காயமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரிய வெங்காயத்தின் உற்பத்தி திறனும், அதனால் நுகர்வோருக்கு விலை குறைவாக கிடைப்பதும் தான் காரணமாகும்.

இந்நிலையில் வெங்காய விளைச்சல் குறைகிறபோது, நுகர்வோர் நலன் கருதி ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறது. தற்போதுகூட ஏற்றுமதி வரியை 16 சதம் உயர்த்தி, வெங்காய ஏற்றுமதியை மட்டுப்படுத்தி உள்ளது. இதனால் பெரிய வெங்காயம் மட்டுமல்ல, சிறிய வெங்காய ஏற்றுமதியும் தடைபடுத்தப்படுகிறது. 

வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டவர்கள் இன்றும் சிறு வெங்காயத்தை விரும்பும் சுவையாளர்களாகவே உள்ளனர். அவர்கள் விரும்பும் சிறிய வெங்காயத்தை அங்கு அனுப்பி வைத்திடவும், அதை விளைவிக்கும் தமிழக விவசாயிகளுக்கு உரிய கட்டுப்படியான விலை தொடர்ந்து கிடைத்திடவும், ஏற்றுமதி கட்டுப்பாட்டில் இருந்து சிறிய வெங்காயத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். 

ஏனெனில் சிறிய வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் சிறு, குறு நடுத்தர விவசாயிகளே ஆவர்.

இதன் உற்பத்தி திறன் குறைவு.. விளைவிக்கும் செலவு கூடுதல், சாகுபடி பரப்பும் குறைவு, சந்தை வாய்ப்பும் குறைவு. இதற்கு மானிய உதவிகளும் இல்லை. இந்திய நுகர்வோரில் 90 சதவீதம் பேரின் உணவுகளில் பெரிய வெங்காயமே  ஆதிக்கம் செலுத்துகிறது. பெரிய வெங்காயத்திற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் உண்டு. 

வெங்காயம் என்று பொதுவாக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் பொழுது சிறிய வெங்காயமும் தடை படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் சிறிய வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய பாதகமாகிறது. இதனால் அந்த விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.                   

எனவே பொதுவாக வெங்காயம் என்ற தலைப்பில், பொதுவான ஏற்றுமதி குறியீட்டு எண் விதித்து ஏற்றுமதிக்கு கட்டுப்பாடோ; தடையோ விதிக்கும பொழுது சின்ன வெங்காய ஏற்றுமதியும் தடைபடுகிறது. இதனால் அதிலிருந்து சிறிய வெங்காயத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு சிறிய வெங்காயத்திற்கு என தனி ஏற்றுமதி குறியீடு எண் வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இதற்கான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button