தமிழகம்

ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய தனியார் நிறுவனமா?

மத்திய தொழிற்சங்கங்கள் கண்டனம்

மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்களான, சஞ்சீவ ரெட்டி (ஐஎன்டியுசி), அமர்ஜித் கவுர் (ஏஐடியுசி), ஹர்பஜன் சிங் (எச்எம்எஸ்), தபன்சென் (சிஐடியு), சங்கர் தாஸ்குப்தா (ஏஐயுடியுசி), சிவசங்கர் (டியுசிசி), மனாலி ஷா (சேவா), ராஜீவ் தீம்ரி (ஏஐசிசிடியு), மு.சண்முகம் (எல்பிஎப்) அசோக் கோஷ் (யுடியுசி) ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:

இந்திய அரசுக்கு சொந்தமான சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்  தொழிற்சாலையிலேயே, தனியார் நிறுவனம் ஒன்று வந்தேபாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதித்து அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இதனை எதிர்த்து போராடும் ஐசிஎப் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளன.

நமது நாட்டில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் மிக முக்கியமான தொழிற்சாலைகளில் ஒன்று சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ஆகும். இந்த நிறுவனம் தயாரித்த, வந்தே பாரத் ரயிலை இப்போது தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யவும், பராமரிக்கவும் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வேலைகளை ஐசிஎஃப் தொழிற்சாலையிலேயே தனியார் நிறுவனம் செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நாடு விடுதலை அடைந்த பிறகு 1955 ஆம் ஆண்டு இந்த ஐசிஎஃப் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்திய ரயில்வேயில் உள்ள மிகப்பெரிய ரயில் பற்றி உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும். இதன் தகுதி, திறன், தரம் ஆகியவை இந்திய அரசில் அனைவராலும் போற்றி புகழப்பட்டதாகும்.

அதிகரித்து வரும் ரயில் பெட்டி தேவைகளை நிறைவு செய்ய, இந்த தொழிற்சாலையை இன்னும் விரிவாக்கி நவீனப்படுத்தி, அதில் பணிபுரிய தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தொழிற்சாலையில் ஏற்கனவே பயிற்சியாளர்களாக பயிற்சி பெற்றவர்கள், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தர வேண்டும்.

அதை விடுத்து இந்த நாட்டின் சொத்தான ஐசிஎப் தொழிற்சாலையை பயன்படுத்தி, அதில் தனியார் நிறுவனம் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யவும், பராமரிக்கவும் அனுமதிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து இருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஐசிஎப் நிறுவனம்தான் வந்தே பாரத் ரயில்களை வடிவமைத்து, இதுவரை 40 ரயில்களைத் தயாரித்திருக்கிறது. அவை இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வெற்றிகரமாக ஓடி மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கின்றன. அரசின் இந்த தீய முடிவை எதிர்த்து ஐசிஎஃப் தொழிலாளர்கள் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர்.

அரசுக்கு சொந்தமான, திறன் பெற்ற தொழிற்சாலையிலேயே தனியாரை கொண்டு ரயில் பெட்டி தயாரிக்க அனுமதிப்பது தேசிய நலன்களுக்கு எதிரானதாகும் என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம்.

தற்போதுள்ள மனித ஆற்றலைக் கொண்டு உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை என்று ஐசிஎப் நிர்வாகம் கூறுகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு கேட்டகிரிகளில் 1400க்கும் மேற்பட்ட பணியிடங்களில், இளமையான திறமை மிக்க தொழிலாளர்களை நியமிப்பதை, ரயில்வே போர்டுதான் அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.

ஒப்பந்தத்தைப் படித்து பார்த்தால், ரயில் பெட்டியை தயாரிக்கும் அந்த தனியார் நிறுவனத்திற்கு, இலவச மின்சாரம், இலவசமாக அழுத்தப்பட்ட காற்று, குடிநீர், ஓய்வு அறைகள், கேண்டீன் வசதி ஆகியவற்றை ஐசிஎப் நிறுவனமே வழங்குவதோடு, ஐசிஎப் ஏற்கனவே தயாரித்த ரயில் பெட்டிகளின் வரைபடங்களையும் டிசைன்களையும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி தரப்பட்டுள்ளது.

ஐசிஎப் நிறுவனத்தின் செலவில், அந்த தனியார் நிறுவனத்துக்கு இவ்வளவு சலுகைகள் அளித்து ரயில்வே போர்டு ஏன் பாதுகாக்கிறது என்பதை எம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. தொழிற் சங்கங்களோடு எவ்வித கலந்துரையாடலும் இல்லாமல் தன்னிச்சையாக நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக ஐசிஎப் தொழிற்சாலை மீது ஏற்படுத்தப்படும் தாக்குதல் குறித்தும், இந்த ரயில் பெட்டிகளை நம்பி இரவும் பகலும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொண்டு, மேற்சொன்ன முடிவை திரும்ப பெற வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்தையும் ரயில்வே போர்டையும் மத்திய தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொள்கின்றன.

இந்த முடிவை எதிர்த்து ஐசிஎப் தொழிற்சங்க கூட்டுக்குழு வாயில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற கண்டன நடவடிக்கைகளைத் துவக்கி உள்ளது. இதில் தலையிடாமல் பிரச்சனை தொடர அனுமதித்தால், தொழிலாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாவார்கள். அது எதிர்காலத்தில் உற்பத்தி திறனையும், தொழில் உறவையும் சீர்குலைத்து விடும்.

எனவே இந்த முடிவை திரும்ப பெறுமாறு மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசை ‌வலியுறுத்துகின்றன. இதனை எதிர்த்து போராடிவரும்  ஐசிஎப் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button