தமிழகம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 14,15,16,17 ஆகஸ்ட் 2023 - சேலம்

சேலம் காட்டூரில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 3
நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என ஆணவத்தோடு கூறிய ஆளுநருக்கு கண்டனம்.

ஆளுநர் மாளிகையில் கடந்த 12.08.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தொடர்பாக, மாணவி ஒருவரின் தந்தை எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பதில் கடும் கண்டனத்திற்குரியது.

“முடிவெடுக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கமாட்டேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானதாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவு படுத்தும் போக்காகும்.

நீட் குறித்தும் ஆளுநர் தவறான கருத்துக்களை கூறியுள்ளார். மருத்துவக் கல்வி வணிகத்தை நீட் தடுத்துவிட்டது என ஆளுநர் சொல்கிறார். உண்மையில், மருத்துவக் கல்வி வணிகமயமாவதற்கு காரணம் ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் மற்றும் வணிக மயமாக்கல் கொள்கைகள்தான்.

ஆளுநர் கூறியுள்ளது போல், “மருத்துவக் கல்வியில் நடைபெற்ற ரூபாய் 1000 கோடி வணிகத்தை” நீட் தடுத்துவிடவில்லை. மாறாக ஒன்றிய அரசின் கொள்கைகளால், மருத்துவக் கல்வி வணிகம் தற்போது பல ஆயிரம் கோடியாக அதிகரித்துவிட்டது.

நீட்டால் முறைகேடுகள் குறைந்துள்ளது என்ற ஆளுநர் கூறுவதும் உண்மையல்ல. மிகப்பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் மாப்அப் கவுன்சிலிங், ஸ்ட்ரே கவுன்சிலிங்கை ஒன்றிய அரசு அனுமதித்தது. இது தனியார் மருத்துவ நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு உதவுகிறது.
தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துகிறது. அவற்றின் இடங்கள் நிரம்ப வேண்டும் என்பதற்காகவே நீட் கட்ஆப் மதிப்பெண்ணும் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டாக நீட் தேர்வால் தற்கொலைகள் நடைபெறவில்லை என ஆளுநர் கூறுவதும் உண்மையல்ல. நடப்பாண்டில் மட்டுமே, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்ற 20 மாணவர்கள், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“நீட் பயிற்சி மையங்கள் அவசியமில்லை. ஆசிரியர்கள் முறையாக கற்பித்தாலே போதும். பயிற்சி மையங்களில் படிக்க வேண்டும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது” என ஆளுநர் கூறியுள்ளார்.
தனியார் பயிற்சி மையங்களிலோ அல்லது சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளிலோ பயிற்சி பெற்றவர்கள்தான், அதிக மதிப்பெண்ணுடன் நீட்டில் வெற்றி பெற முடிகிறது. மருத்துவக் கல்லூரிகளிலும் அதிக அளவில் சேர முடிகிறது. எனவே, ஆளுநரின் இக்கருத்தும் தவறானதாகும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடே 600 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர உதவியுள்ளது என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால் இந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கும் எதிராகவே ஒன்றிய அரசு இருந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தகுதி மற்றும் திறமைக்கு எதிராக அமைந்துவிடும் என ஒன்றிய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார் என்பதை ஆளுநர் மறந்துவிட்டார் போலும்.

ஏழைகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் உதவியுள்ளது என்ற ஆளுநரின் வாதமும் தவறானது. சிறந்த பயிற்சி மையங்களில் படிக்கும் வசதியுள்ளோருக்கானதாக, மருத்துவக் கல்வியை, நீட் மாற்றிவிட்டதென்பதே உண்மை.

எனவே, வேண்டுமென்றே உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்வைத்து, நீட் விலக்கை அனுமதிக்க முடியாது என ஆளுநர் ஆணவப்போக்கோடு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு மாநில அரசுக்கும், தமிழ்நாட்டு் மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு, காலதாமதமின்றி மேதகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் ஒப்புதல் பெற்றுத் தருமாறு ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4
அவலநிலை ஊதியம் பெறுவோரிடம் தொழில் வரி வசூலிப்பதைக் கைவிடுக!

தமிழ்நாடு அரசின் தொழில் வரி சட்டம் 1998 (Tax on Professional Trades Calling and Employment Act) என்பது, தொழில் நடத்துவோர், வணிகம் செய்வோர், தொழிலில் பணிபுரிவோர் ஆகியோரிடம் வரி வசூலிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் என்றாலும், முழுக்க முழுக்க தொழிலாளரிடமிருந்து மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது.

ஆறு மாதத்தில் ரூ. 21,000 க்கு மேல், -அதாவது மாதம் ரூ. 3500 க்கு மேல்- வருவாய் ஈட்டும் தொழிலாளர்களிடமிருந்து வரி வசூலிக்க இது வகை செய்கிறது. மிக மிகக் குறைந்த ஊதியம் பெறும் கிராம ஊராட்சி, தூய்மைப் பணியாளர், தொகுப்பூதிய, தினக்கூலி தொழிலாளர்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதியம் என்பது அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி வாழ்க்கை நடத்த அவசியமான ஊதியம் ஆகும். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விட, குறைவான தொகையை ஊதியமாக வழங்குவதும், அதிலிருந்தும் வரி வசூல் செய்வதும் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்படக்கூடாது என வரையறுத்துள்ளது. அதாவது மாதம் 18,750 என்பது குறைவான ஊதியம் என்று பொருளாகிறது.

எனவே ரூ. 18,750க்கு அதிகமாக மாத ஊதிய பெறுவோரிடமிருந்து மட்டுமே வரி வசூலிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை பொருத்தமாகத் திருத்துமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5
முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்திடுக! ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்காதீர்!

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, அசையக்கூட முடியாத நெரிசலில் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 199 கி.மீ. வரையில் பயணம் செய்பவர்கள், பயணம் துவங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டு எடுத்திருந்ததால் அது செல்லாது என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பதிவிலும்கூட, ரயில் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க, கட்டணம் அதிகரிக்கும் வகையில் சில ரயில்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்குக்கும் மேலாக அந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசரமாக பயணிக்க வேண்டியவர்கள், முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணத்தோடு தட்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ப்ரீமியம் தட்கல் என்ற முறை அமலாக்கப்பட்டு கூடுதல் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதோடு, பயண நேரம் நெருங்க நெருங்க இன்னும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு பயணச்சீட்டை ரத்து செய்யும்போது, முன்பு ரயில் புறப்பட்டு சென்ற பிறகும் கூட 50 சதவீத கட்டணம் திரும்ப கிடைக்கும் முறை இருந்தது. இப்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்தை விடக் குறைவாக இருந்தால் கட்டணம் திரும்பத் தரப்படாது என்ற முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கு முன் ரத்து செய்தாலும் 25% கட்டணம் மட்டுமே திரும்பத் தரப்படுகிறது. அதற்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவது அநியாயமானதாகும்.

மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. திரும்ப வழங்கப்படவில்லை. வயது முதிர்ந்த பயணிகளின் கட்டணச் சலுகை மறுக்கப்பட்டதன் காரணமாக, சென்ற ஆண்டில் ரூ. 1500 கோடி ரயில்வேக்கு கூடுதல் வருவாய் என அரசு தெரிவித்திருப்பது முரண்நகையாகும்.

பயணச் சீட்டின் மூலம் வருவாய் பெறுவது மட்டுமல்லாமல், சாதாரண மக்களிடம் இருந்து வெவ்வேறு வடிவங்களில் ரயில்வே பணத்தை உறிஞ்சுகிற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றால் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஒவ்வொரு ரயிலிலும் நான்கு முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், டிக்கெட் எடுத்த மூன்று மணி நேரத்துக்குள் பயணம் செய்ய வேண்டும் என்ற முறையை கைவிட வேண்டும் என்றும், குளிர்சாதன பெட்டிகளை கூட்டுவதற்காக சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், மூத்த குடி மக்களுக்கு கட்டண சலுகையையும், குழந்தைகளுக்கான அரை கட்டணத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே துறையையும், ஒன்றிய அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு –
மே தின பூங்காவில் சிலை அமைத்திடுக!

சாமானிய மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், வேட்கைகளையும், துணிவையும், வாழ்வின் அழகையும் தன் வாழ்நாள் முழுக்க பாடி வந்த கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு, 2023 செப்டம்பர் 21 அன்று தொடங்குகிறது.

உழைப்பாளர்களின் உரிமை திருநாளான மே தினத்தைப் பற்றி தமிழில் தமிழில் முதலில் பாடியவர் கவிஞர் தமிழ்ஒளி அவர்கள்தான்.

அவரது நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடவும், அவரை சிறப்பிக்கும் வகையில், சென்னை, மே தினப் பூங்காவில் அவருக்கு சிலை அமைக்கவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7
மாவட்ட, ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்களுக்கும் மாத ஊதியம் வழங்கிடுக!

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தேவைகளிலும் பெரும் பங்காற்றுவது உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் தமிழ்நாடு ஆட்சி அமைந்த பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குவதைப் போல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்தது வரவேற்கத்தக்கதாகும்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், மாமன்றம் நகராட்சி ஊராட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாதம் ஊதியம் வழங்குவதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகியோரும் உள்ளாட்சி பணி புரியும் மக்கள் பிரதிநிதிகளே ஆவர். அவர்களுக்கும் மாத ஊதியம் வழங்கிட தமிழ்நாடு அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது

தீர்மானம் 8
கொண்டலாம்பட்டி – சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் கட்டுக!

சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸ் முதல் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியாகச் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் வழியாக சராசரியாக நிமிடத்திற்கு 90 வாகனங்கள் செல்கின்றன. நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. மரண விபத்துக்கள் நேர்கின்றன. எனவே கொண்டலாம்பட்டி – சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வரை மேம்பாலம் அமைப்பது இன்றியமையாததாகும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்ததோடு, இயக்கங்களையும் நடத்தி இருக்கிறது. இதன் அவசர அவசியம் கருதி, மேற்கண்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் சீலநாயக்கன்பட்டி பைபாஸிலிருந்து எருமாபாளையம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை விரிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9
மாமாங்கத்தில் மேம்பாலக் கட்டுமானத்தைத் தொடங்குக!

பெங்களூரில் இருந்து கோவை வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் மாநகர எல்லையில் மாமாங்கம் அருகே மேம்பாலம் அமைக்க சென்ற ஆட்சிக் காலத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து மேல்நடவடிக்கை இல்லை.

மாமாங்கம் சிக்னல் அருகேயும், இந்தப் பகுதியிலும் உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே மாமாங்கம் பகுதியில் உரிய வகையில் மேம்பாலம் அமைக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button