இந்தியா

2023-24 நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்: காணொளி வழி கூட்டத்தைப் புறக்கணிக்க தொழிற்சங்கங்கள் முடிவு

இன்று (28.11.2022) காணொளி வழியாக நடைபெறுவதாக உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது பின்வருமாறு:

28.11.2022 அன்று காலை 11 முதல் மதியம் 12:15 வரை (75 நிமிடங்கள் மட்டுமே) ஆன்லைன் மூலமாக நடைபெறுவதாக உள்ள ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கு நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ராஜீவ் மிஸ்ரா 24.11.2022 அன்று அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத்தில் 12 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க 75 நிமிடங்கள் போதுமானதாக இருக்காது என்பதை 25.11.2022 தேதியிட்ட கடிதத்தின் மூலமாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.

25.11.2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இக்கூட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், அவற்றின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கேலிக்குரியது ஆகும். 28.11.2022 அன்று ஆன்லைன் மூலமாக நடைபெறுவதாக உள்ள இந்தக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை.

ஒன்றிய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரடியாக அழைத்து, கருத்துகளைத் தெரிவிக்க போதுமான நேரம் ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும், இதற்கு மாற்றாக, அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் குறித்த வெளிப்படையான பொது விவாதம் நடத்த வேண்டும் என்பதற்கான தொழிற்சங்கங்களின் அழைப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் குறித்த தங்களின் கருத்துகளை முன்வைத்துப் பேச எவ்வித காலக் கெடுவும் தங்களுக்கு விதிக்கப்படாது என்பதைக் குறிப்பிடுவதோடு, அத்தகையதொரு விவாதத்தில் தங்களின் பங்கேற்பையும் எதிர்நோக்குகிறோம்.

இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button