கட்டுரைகள்

முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்திடுக!

டாக்டர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று   குறைந்திருந்தது. இருந்த போதிலும்,   ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நடக்கவிருந்த, முதுநிலை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு  தள்ளி வைத்தது. அதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை.

ஜனவரி 10 ஆம் தேதியே தேர்வு நடத்தியிருந்தால் 40,000 முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது அலையின் போதே கொரோனா பணியாற்ற நாடெங்கிலும் கிடைத்திருந்திருப்பார்கள். மத்திய அரசு செய்த மாபெரும் தவறின் விளைவால் மாணவர்களும், மருத்துவத்துறையினரும், நோயாளிகளும்  பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அதன்பிறகு, அத்தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு, செப்டம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. ஆயினும், இதுவரை மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மாணவர் சேர்க்கைக்காக 1.75 லட்சம் பேர் கடந்த ஒன்றரை வருடங்களாக காத்திருக்கின்றனர்.

முன்னேறிய வகுப்பிலுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு கால தாமதமாவதால் மாணவர் சேர்க்கையும் காலதாமதமாகிறது. இதற்கு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமுமே காரணம்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், ஏற்கனவே, முதுநிலை மருத்துவம் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடும் பணிச்சுமையால்  உடல் மற்றும் உளரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திடக் கோரி, அகில இந்திய அளவில், முதுநிலை மருத்துவ மாணவர்கள்  போராட்டம் நடத்துகின்றனர்.

சர்ச்சைக்குரிய, சமூக நீதிக்கு எதிரான, முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான 10 % இட ஒதுக்கீடு வழங்குவதை, இறுதித் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்துவிட்டு இம்மாணவர் சேர்க்கையை நடத்தி இருந்தால் இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய போராட்டமும் வெடித்திருக்காது.


மத்திய அரசுக்கான வேண்டுகோள்கள்

இப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும்  (EWS)  இட ஒதுக்கீடு, இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூக நீதிக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்கடுத்தக்கூடிய ஒன்று.  முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை எவ்வளவு? அவர்களில் உள்ள ஏழைகள் எவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. இது பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது.

இப்பொழுது உள்ள EWS இட ஒதுக்கீடுபடி ‘ஏழைகள்’ என்பதற்கான வரையறை மிகவும் தவறாகவும், பாரபட்சமாகவும், நியாயமற்றதாகவும்  உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதிய பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சரியல்ல, அவர்கள் எவ்வாறு ஏழைகளாகமுடியும் என்ற கருத்து உள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்த இடங்களில் உயர் சாதியைச் சார்ந்த, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே  10 % இடஒதுக்கீடு வழங்குவது என்பதும், அதற்கான பொருளாதார வரையறையும், ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றுவரும்  ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக நீதிக்கு எதிராக உள்ளது.
 EWS  பொருளாதார வரையறை அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையறை பாரபட்சமாக உள்ளதால், அது ஏற்புடையது அல்ல.

வறுமைக்கோடு பற்றிய வரையறையில் மத்திய அரசு இரட்டை நிலையை கடைபிடிக்கிறது.  ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தின் மூலம் “பிரதமர் மருத்துவக் காப்பீடு’’  திட்டத்தில், பயன் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு வரம்பு வெறும் ரூபாய் 72 ஆயிரம் தான்.
ஒரு வீட்டில் ஒரு தொலைபேசி இணைப்பு இருந்தால் கூட, அல்லது ஒரு ஆட்டோ  ஓட்டுநர் சொந்தமாக ஒரு ஆட்டோ வைத்திருந்தால் கூட அவர்களுக்கு பிரதமர் காப்பீடு திட்டம் கிடைக்காது. அவர்கள் ஏழைகள் அல்ல. பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  வகுப்பினர்  கல்வி  உதவித்தொகை பெறுவதற்கு கூட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ரூ.8 லட்சம் வரை குடும்ப ஆண்டு வருமானம் உடையோர் கூட இ.வி.எஸ் இட ஒதுக்கீடு பெறலாம் என்பது என்ன நியாயம்?  

5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவரும், 1000 சதுர அடி வீடு வைத்திருப்பவரும், 900 சதுர அடி வீட்டுமனையை நகராட்சி பகுதியில் வைத்திருப்பவரும், 1800 சதுர அடி வீட்டுமனையை நகராட்சி அல்லாத பகுதியிலும் வைத்திருப்பவர்கள் ஏழையா என்ற கேள்வியும் எழுகிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்றால் அதை எஸ்.சி./எஸ்.டி./ஒ.பி.சி. போன்ற எல்லா வகுப்பிலும் உள்ள ஏழைகளுக்கும்  வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், எஸ்.சி./எஸ்.டி./ஒ.பி.சி.  இட இதுக்கீட்டில் வராத பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு என்ற பெயரில், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டிருப்பதும் நியாயம் அல்ல.  

எனவே, இவை குறித்த பல்வேறு  வழக்குகள் உச்சநீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளன.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உத்தரவு போட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அந்த இட ஒக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக தடைபோட்டது. இறுதித் தீர்ப்புக்குப் பிறகே 2008ல் அது நடைமுறைக்கு வந்ததது.

இவ்வாறு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட சட்டங்கள் வந்த பொழுதெல்லாம், அது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதித்தது.

ஆனால், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையில் அவ்வாறு தடை எதையும் விதிக்கவில்லை. அதற்காக மாணவர் சேர்க்கையையே நாடு முழுவதும் காலதாதம் செய்கிறது.ஒரு கல்வி ஆண்டே இல்லாத நிலை ஏற்பட உள்ளது.

இது உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டில் சமூக நீதி மீது அக்கறை உள்ளோருக்கு  ஐயத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசும் அவரச கதியில் தான் EWS இட ஒதுக்கீட்டை அமல் செய்தது.இதுவும் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம்.

முதுநிலை மருத்துவ மாணவர்களின் போராட்டங்களைக் காரணம் காட்டி,  சமூக நீதிக்கு எதிரான EWS  இட ஒதுக்கீடு  பிரச்சனையில்  அவசர முடிவுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துவிடக்கூடாது. இது இதர பிற்படுத்தப்பட்டோரையும், சமூக நீதியையும் நிரந்தரமாக பாதித்துவிடும். அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் மூலம்  27 % இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கியிருக்க வேண்டும். அதை மத்திய அரசு வழங்காதது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால் இது குறித்து உச்ச நீதிமன்றம் கவலைப்படவில்லை. இதனால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் இழந்துள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில் 52 விழுக்காடாக இருக்கக்கூடிய இதர பிற்படுத்தப்படோருக்கு, கடந்த ஆண்டு வெறும் 3.5 விழுக்காடு  அளவிலேயை மருத்துவப் படிப்பு இடங்கள் , அகில இந்தியத் தொகுப்பில் கிடைத்தன. இது சமூக நீதிக்கு எதிரானது. இந்நிலையில் மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல கட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த வெற்றியாகும்.

எனவே,

· ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே உடனடியாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் வழங்கிட வேண்டும்.

· சர்ச்சைக்குரிய, எந்தவித புள்ளிவிவர ஆதாரமும் அற்ற சமூக நீதிக்கு எதிரான EWS  இட ஒதுக்கீடு வழங்குவதை, இறுதித் தீர்ப்பு வரும் வரை  நிறுத்தி வைக்கவேண்டும்.

·  மாணவர் சேர்க்கைகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். சமூக நீதியை உச்ச நீதிமன்றம் காத்திட வேண்டும். இதன் மூலம் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிச் சுமையும் குறையும், சமூக நீதியும் காக்கப்படும்.

தமிழக அரசுக்கான வேண்டுகோள்

பணிச்சுமையைக் குறைக்கக் கோரி மருத்துவ மாணவர்கள் நடத்தும்  போராட்டத்தால்,அரசு மருத்துவ மனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பணிச்சுமையை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

எனவே,  2021 ஜூலை மாதத்தில் MD,MS படிப்பை  முடித்து தேர்ச்சி பெற்ற முதுநிலை  மருத்துவ மாணவர்களுக்கு, அவர்கள் படித்த துறைகளுக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் தற்காலிகமாக  பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் முதுநிலை மருத்துவம் முடித்த மருத்துவர்களின் சேவைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.  எனவே அவர்களை உடனடியாக மருத்துவக் கல்லூரிகளில் அவரவர் துறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். இது உடனடியாக , இரண்டாம் ஆம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிச்சுமையை  குறைக்க உதவும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ,மருத்துவர்களை கூடுதலாக பணிநியமனம் செய்திட வேண்டும்.

கொரோனாவுக்காக நியமிக்கப்பட்ட  மருத்துவர்களையும் பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, மினி கிளினிக் மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு  கொரோனா தடுப்பூசி வழங்கல் மற்றும்  வெள்ள நிவாரண மருத்துவப் பணிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பயன்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கையை , உரிய அனுமதியை பெற்று தமிழக அரசு, உடனடியாக நடத்திட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் பொழுது , முதல் கட்ட கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை முடிந்த பின் இரண்டாம் கட்ட தமிழக கலந்தாய்வை நடத்த வேண்டும்.

தொடர்புக்கு: 99406 64343

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button