மாநில செயலாளர்

அண்ணாமலையே பொய் சொல்வதற்கு அளவே இல்லையா? 

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதும் கட்சிக்கடிதம்

திருவாரூரில் எம்.செல்வராசு எம்பி மகள் திருமணத்தை நடத்தி வைத்து, மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றிய உரை முழுவதும் ஜனசக்தியில் இடம்பெற்றுள்ளது. அவர் ஆற்றிய உரை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் செல்லும் இடமெல்லாம் ஊழல் குறித்துப் பேசி வருகின்றார்.  சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு பதில் என்ன? ஊழல் குறித்து பேசுவதற்கு மோடிக்கு அருகதை உண்டா? என்பதே முதல்வரின் கேள்வியாகும்.

உடனே அறிவில் சிறந்தவராக தன்னைத்தானே கருதிக் கொள்ளும் அண்ணாமலையார் பதில் கூற முற்படுகின்றார். அவரது பதில் என்ன?

சிஏஜி அறிக்கை நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகமாகி இருக்கிறது என்று தான் கூறியுள்ளது. ஊழல், முறைகேடு, மோசடி என்று கூறவில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார் அண்ணாமலை. இதற்கு ஆமாம் சாமி போடுகின்றார் தொடை நடுங்கி எடப்பாடி பழனிச்சாமி.

சிஏஜி என்றால் என்ன என்பது குறித்த முழு விவரங்களும் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஒன்றிய, மாநில, யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு – செலவு கணக்குகளை சரிபார்க்கும் அதிகாரத்துடன், இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 5ன் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார அமைப்பு சிஏஜி. இது மோடி அமைத்த அமைப்பு அல்ல, அரசமைப்பு சட்டத்தால் அமைக்கப்பட்ட, சுதந்திரமாக செயல்படக்கூடிய இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பாகும்.

இத்தகைய உயர்ந்த பட்ச அமைப்பு கடந்த ஒன்பது ஆண்டு கால பாசிச பாஜக ஆட்சியின் ஏழு திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்படும். நாடாளுமன்றம் அதனை ஏற்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அது மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஒரு பிரதி சிஏஜிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை தணிக்கை செய்து, அந்த அறிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதாவது, குடியரசுத் தலைவர் கொடுத்திட்ட வரவு செலவு அனுமதி சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனைக் கண்காணித்து அறிக்கை கொடுப்பது சிஏஜியின் பணியாகும்.

அவ்வாறு கொடுக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கை, ஏழு திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

1, பாரத் மாலா திட்டம்

நாடு முழுவதும் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளை இணைக்கும் திட்டம். இதன் முழு முதல் கட்டத்தில் 34,800 கிலோமீட்டர் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த தொகை 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாகும். (கிலோ மீட்டருக்கு ரூ. 15.37 கோடி)

இதில், 26,316 கி.மீ. சாலை அமைக்க 8 லட்சத்து 46 ஆயிரத்து 588 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஒரு கிலோ மீட்டருக்கு 32.17 கோடி ரூபாய் அதிகமான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பின் அனுமதியும் இன்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கு பெயர் ஊழல், முறைகேடு இன்றி வேறென்ன அண்ணாமலையாரே?

ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 16.80 கோடி முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அம்பலப்படுத்தியுள்ளது. இதனை அறிவாளி அண்ணாமலை மறுக்கின்றாரா?

2 துவாரகா விரைவுப்பாதை

அரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தொலைவுக்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அதாவது, 28.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு எட்டு வழிச் சாலை அமைத்திட, கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ. 18 கோடி என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 232 கோடி ரூபாய் வாரி வழங்கப்பட்டதை சிஏஜி அம்பலப்படுத்தியுள்ளது. இதற்குப் பெயர் முறைகேடு, ஊழல் இல்லாமல் வேறு என்ன அண்ணாமலை?

3, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்கின்றது. நாடு முழுவதும் உள்ள இந்தச் சுங்கச்சாவடிகளில், ஐந்து சுங்கச்சாவடிகளை மட்டும் சிஏஜி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இதில் வாகன ஓட்டிகளிடமிருந்து விதிமுறைகளை மீறி ரூ. 136 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐந்து சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ.136 கோடி என்றால், ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் பொதுமக்களிடம்  கொள்ளையடிக்கப்பட்ட தொகை எத்தனை ஆயிரம் கோடி? அண்ணாமலை வாய் திறப்பாரா?

4, ஆயுஷ்மான் பாரத் திட்டம்

ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீடு 2018ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி இவ்வாண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 24.3 கோடி மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 7.5 லட்சம் அட்டைகள் ஒரே அலைபேசி எண்ணை கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த எண் 99 999 99 999 இந்த விவிஐபி யார் சார், அண்ணாமலை பதிலளிப்பாரா?

இது மட்டுமல்ல, சிகிச்சை பெற்றவர்களில் 88,760 பேர் இறந்துவிட்ட நிலையில், இறந்த பின்னரும் சிகிச்சை அளித்ததாக கூறி 2,14,923 அட்டைகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ரமணா திரைப்படம் நினைவுக்கு வருகின்றதா?

செத்தவருக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள அரசு,  உலகத்தில் ஒரே அரசு மோடி அரசு தான் என்பதனை அண்ணாமலை மறுக்கின்றாரா?

5, அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்

கடவுள் ராமர் பெயரால் அடித்த கொள்ளையை அம்பலமாக்கி உள்ளது சிஏஜி. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி, மதச்சார்பின்மை கொள்கையை ஆழக் குழி தோண்டிப் புதைத்திட்ட கூட்டம், ராமரின் பெயரால் மேம்பாட்டுத் திட்டம் என்று கூறி ஒப்பந்ததாரர்களிடம் உத்தரவாதத் தொகை குறைவாக வாங்கப்பட்டது மட்டுமல்ல, அவர்கள் பெற்ற லாபம் 9.73 கோடி ரூபாய்.

அரசுக்கு 8.22 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ராமா, ராமா என்று கூறி கடவுளின் பெயரால் கொள்ளை அடித்த வேடதாரிகள்.

6, பிற திட்டங்கள்

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்ட நிதியிலிருந்து மோடி அரசுக்கு விளம்பரம் செய்திட 2.44 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

7, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்- எச்ஏஎல்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான எஞ்சின் வடிவமைப்புத்திட்டத்தின் குளறுபடிகள், உற்பத்தியில் தாமதம் ஆகியவற்றின் காரணமாக ரூ. 159 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கை கூறுவதை முறைகேடுகள் இன்றி, ஊழல் இன்றி தூய்மை என்று கூற வேண்டுமா அண்ணாமலையாரே?

சிஏஜி அறிக்கைக்குப் பதில் கூற முந்திரிக் கொட்டையாய் அண்ணாமலை முந்திடக் கூடாது. மாறாக நாட்டின் பிரதமர் ஆம், நம் நாட்டின் மாமன்னர் மோடிஜி பதிலளிக்க வேண்டும். பதிலளிப்பாரா? இதற்கும் மவுனம் காப்பாரா?

அண்ணாமலையே பொய் சொல்வதற்கு அளவே இல்லையா?  திமுக ஆட்சிக் காலத்தில் 5 மருத்துவக் கல்லூரிகள் தான் தொடங்கப்பட்டது என்று கூறுவதற்கு வாய் கூசவில்லையா?

நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று அறிவித்தது மட்டுமல்ல, செயல்படுத்தியவரும் கலைஞர் என்பதனை அண்ணாமலை உணர வேண்டும்.

தோழர்களே! அண்ணாமலை மட்டுமல்ல, அவரது கட்சி முழுமைக்குமே நுனி முதல் அடி வரை பொய் சொல்வதையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் நயவஞ்சக கூட்டம் என்பதனை மறந்து விடக்கூடாது.

ஊழலின் மொத்த உருவமாக செயல்படும்..
விலைவாசி உயர்வுக்கு காரணமான
வேலையின்மையை அதிகரித்த
மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற
இந்தியை திணித்து தமிழை இழிவு படுத்துகின்ற
சொந்த லாபத்திற்காக நாட்டை நாசமாக்குகின்ற
பாஜகவை ஆட்சியை விட்டு அகற்ற
செப்டம்பர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கின்ற தொடர் மறியல் போரில் ஆயிரம், ஆயிரமாய், பல்லாயிரமாய் பெரும் படையெனத் திரண்டு போர்க்களம் காண்பீர்!

அமைதி வழியில் நடைபெறும் அறப்போரில் பங்கெடுக்க ஒவ்வொரு தோழரும் செங்கொடி உயர்த்தி, சிங்கமென கர்த்தித்து களம் காண்பீர்!

நடைபெறும் போராட்டம் நாடே திரும்பிப் பார்க்கும் போராட்டமாக அமைந்திட வேண்டும். மறியல் போராட்டத்திற்கான நாட்கள் குறைவு என்பது மட்டுமல்ல, ஒன்றியத்தில் ஆளும் பாசிச ஆட்சியை அகற்றுவதற்கான காலமும் குறைவு என்பதனை கவனத்தில் கொள்க!

திருவிழா கூட்டத் திருடர்களை நாட்டு மக்கள் முன்பு நிறுத்தி, சவுக்கடி கொடுத்திடும் போர்க்களமாக அமையட்டும்!

கோயபல்ஸ்களின் கொட்டம் ஒடுங்கட்டும்!

உயரட்டும் செங்கொடி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button