கட்டுரைகள்

ஜனநாயக குடியரசை அழிக்கத் துடிக்கும் மோடி அரசு!

அருண் நெடுஞ்செழியன் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் தொடக்க நாள் முதலே மணிப்பூர் வன்முறை, வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பிரதமர் வாய் திறந்து பேச வேண்டும் என பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களமிறங்கின. எதற்கும் அசைந்து கொடுக்காத பாஜகவை வழிக்கு கொண்டு வருவதன் பொருட்டு, ஆளும்கட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி பேச வைத்தது.

வேறு வழியின்றி வேண்டாவெறுப்பாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, தான் ஆற்றிய இரண்டு மணி நேர உரையில், வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசினார். அதுவும் எள்ளல் தொனியில் நகைச்சுவையாகவும் பொறுப்பற்ற வகையிலும் பேசி, இறுதியில் வழக்கம்போல இறந்துபோன முன்னாள் பிரதமர் நேரு மீது குற்றம்சாட்டிவிட்டு நழுவிச் சென்றுவிட்டார்.

நாட்டின் மிகவும் அவமானகரமான மணிப்பூர் வன்முறைக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே முதன்மைக் காரணம் என குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரதமரை பேச வைப்பதற்கே இவ்வளவு அமளியும் போராட்டமும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீதும் நாடாளுமன்ற மாண்பின் மீதும் பாஜகவிற்கு இருக்கிற “மரியாதையை” இந்த நிகழ்வுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமருக்கு முன்பே உச்சநீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்துவிட்டது; பிறகு எதிர்க்கட்சிக்களின் இடைவிடாத போராட்டங்களின் பலனாக மணிப்பூர் குறித்து பிரதமரை இரண்டு நிமிடம் பேச வைக்க முடிந்தது என்பதை கவனிக்க வேண்டும்.

இவ்வளவு அமளிகளுக்கு இடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் மொத்தம் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் டெல்லி சேவைகள் மசோதாவை தவிர மக்களவையில் நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாக்களும் விவாதமின்றி பாஜகவின் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, நாட்டின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க வகை செய்கிற வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, உயிரியல் பன்மிய (திருத்த) மசோதா 2021 போன்ற முக்கிய மசோதாக்கள் எந்தவித விவாதமும் இன்றி சட்டமாக்கியது தான் பெரும் கொடுமை.

நாட்டில் பற்றி எரிகிற பிரச்சனை குறித்து ஒரு திறந்த விவாதத்திற்குக்கூட வர இயலாத பிரதமரையும், எந்தவித விவாதங்களும் இன்றி மசோதாக்களை சட்டமாக்கத் துடிக்கிற பாஜகவும் பெரும்பான்மை பலத்தின் மூலமாக நாடாளுமன்ற ஜனநாயக இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வருவது எதார்த்த உண்மையாகி விட்டது.

பாஜகவை நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்த முடிந்ததா?

மணிப்பூர் வன்முறை தொடங்கி அரியானா வகுப்புவாத கலவரம் வரை தொடர்கிற பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு நீதிமன்றம் வரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்ற பெரும்பான்மை என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குடியரசு விழுமியங்களையும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக தகர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டின் ஜனநாயக சக்திகள் உணரவேண்டும்.

பாஜக ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதையும், நாடாளுமன்றத்தை அதிகாரமற்ற அவையாக மாற்றுவதிலும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக முனைப்பாக செயல்படுவதை கவனிக்க வேண்டும். உதாரணமாக கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளான செல்லாப்பணம் அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு உத்தரவு போன்ற அறிவிப்புகளை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தது தற்செயலானது அல்ல!

அதுபோல கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியதில்லை என்பதும் தற்செயலானது அல்ல. நாடாளுமன்றத்திற்கு உள்ளே  எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை விவாதிக்க மறுக்கும் போக்கையும்; நாடாளுமன்றத்திற்கு வெளியே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலமாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிற போக்கையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவசர அவசரமாகப் பறித்ததையும் தொகுத்துப் பார்த்தால், ஜனநாயக குடியரசு அமைப்பை பாஜக ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அதனது நாடாளுமன்ற அணுகுறை, எதிர்க்கட்சிகள் மீதான அணுகுமுறை, மதச் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – வன்முறை வெறியாட்டங்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான சட்டப்பூர்வ வன்முறை, மாற்றுக் கட்சிகளை உடைப்பது, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பது, கவிழ்க்க முடியாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக குழப்பங்கள் விளைவிப்பது, புதிய கல்விக் கொள்கை மூலமாக மாநில கல்வி உரிமைகளைப் பறிப்பது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சுயாதீனப் பண்பைப் பறித்து, தனது தேர்தல் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வது போன்ற பாஜகவின் செயல்பாடுகளை இணைத்துப் பார்த்தால், நமக்கொரு சித்திரம் தெளிவாகக் கிடைக்கும்.

அதாவது தமது சித்தாந்தம், திட்டம் ஆகியவற்றுக்குத் தடையாக தனிநபர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என எது வந்தாலும் பலவந்தமாகவும் சூழ்ச்சிகள் மூலமாகவும் அந்தத் தடைகளை அகற்றி தனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இலக்கில், ஆர்எஸ்எஸ் – பாஜக முன்னேறி வருவது தெளிவாகிறது. தனது திட்டங்களுக்கு குடியரசு அமைப்பு முறை தடையாக இருந்தால் அதையும் தகர்க்க பாஜக தயங்காது.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், ஜனநாயகக்  குடியரசு ஆட்சி வடிவத்தின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமர் அலுவலகத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு தங்களது திட்டங்களுக்கு ஏற்றவாறு ஆட்சி நடத்துகிற பாஜகவின் ஆட்சி முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமை ஆட்சி செய்த ஜூலியஸ் சீசரின் ஆட்சி முறையை நினைவூட்டுகிறது.

ரோமக் குடியரசு மீதான ஜூலியஸ் சீசரின் தாக்குதல் :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க குடியரசு ஆட்சிமுறையும் ரோமக் குடியரசு ஆட்சி முறையும் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு ஆட்சி வடிவத்தின் கரு வடிவாக கொள்ளலாம். ரோமக் குடியரசை எடுத்துக்கொண்டால் “செனட்” என்ற மக்கள் பிரதிநிதிகள் சபையானது நாட்டின் தலைமை ஆட்சியரை கட்டுப்படுத்துகிற அதிகாரம் கொண்டதாக இருந்தது. நாட்டின் அரசியல் சட்டங்களையும் உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் செனட் அமைப்பே மையப் பாத்திரம் வகித்தது. இந்த அமைப்பு முறையானது மாற்றுக் கருத்துக்களை விவாதிக்கிற ஜனநாயக வெளியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அதேநேரத்தில் தனிநபர்களின் கைகளில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரக் குவிப்பையும் தனிநபர்களின் சொந்த திட்டங்களையும்/சித்தாந்தத்தையும் செனட் கட்டுப்படுத்தியது. ரோமக் குடியரசின் இந்த ஜனநாயக ஆட்சி வடிவத்திற்கு தலைமைப் படைத்தளபதி ஜூலியஸ் சீசர் மூலமாக ஆபத்து நேர்ந்தது.

கவுள் நாடுகளின் (இன்றைய ஜெர்மன், இங்கிலாந்து) மீதான படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டு கலவரங்களை வெற்றிகரமாக அடக்கிய பிறகு ஜூலியஸ் சீசரின் செல்வாக்கு ரோமில் வானளவு உயர்ந்தது. ஜூலியஸ் சீசரின் இந்தப் போர் வெற்றிகளும் செல்வாக்கும் சீசரை சர்வவல்லமை கொண்ட சர்வாதிகாரியாக மாற்றியது. ஒரு கட்டத்தில் செனட் அமைப்பின் அதிகாரத்தைப் பறித்து தன்னை சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டார் சீசர். பிறகு, ஒப்புக்கு இருந்த செனட் அமைப்பையும் கலைத்து விட்டு குடியரசு ஆட்சி வடிவத்தை ஒழித்து, ரோமக் குடியரசை ரோம முடியரசாக மாற்றி ரோமப் பேரரசின் நிரந்தர மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடிவெடுத்தார் ஜூலியஸ் சீசர்.

சீசரின் இந்த அதிகார குவிப்பைக் கண்டு அஞ்சிய செனட்டர்கள், சீசரை விட்டுவைத்தால் ரோமக் குடியரசுக்கு ஆபத்து என நினைத்து அவரைப் படுகொலை செய்தார்கள். (ஷேக்ஸ்பியரின் நாடகம், ஜூலியஸ் சீசரின் படுகொலையை காவியமாயாக்கியது தனிக்கதை) எந்தக் குடியரசைக் காக்க வேண்டும் என நினைத்து செனடர்கள் சீசரை படுகொலை செய்தார்களோ, அந்தக் நோக்கத்திற்கு நேர் மாறாக ரோம் மாறியதுதான் வரலாற்று சோகம்.

ஜூலியஸ் சீசரின் ஆட்சிக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போரை கட்டுப்படுத்தி ஆட்சிக்கு வந்த சீசரின் மருமகன் ஆக்டோவியன், அகஸ்டஸ் சீசர் என பெயர் சூட்டிக் கொண்டு தன்னை மன்னனாக  அறிவித்து, ரோமக் குடியரசை ரோமப் பேரரசராக மாற்றினார். ரோமக் குடியரசு ரோம முடியரசாக மாறியது.

குடியரசு மீதான தாக்குதல்கள் :

அண்மையில் மன்னராட்சி கால அரசியல் அதிகார அடையாளமான “செங்கோலை” மிகப்பெரும் ஜனநாயக குடியரசான இந்தியாவின், புதிய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாஜக நிறுவியது. இந்த நிகழ்வு குடியரசு அமைப்புக்கு எதிரான பாஜகவின் சித்தாந்தத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் செயலாகும்.

செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளமாகும். குறிப்பாக ஒற்றை தலைமை, ஒற்றை அதிகார பீடத்தின் குறியீடாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு நேர் எதிரானது. செங்கோல் நிகழ்ச்சி நிரலை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால், நிலப்பிரபுத்துவ கால மன்னராட்சியின் அதிகாரக் குறியீடாகும்.

குடியரசின் அடையாளமான நாடாளுமன்ற அவையில், முடியரசின் அடையாளத்தை பாஜக வைப்பதன் மூலம், தனது நிலைப்பாட்டை உள்ளது உள்ளவாறு நாட்டிற்கு வெளிப்படுத்திவிட்டது. குடியரசு அமைப்பு முறை மீதான தனது ஒவ்வாமையை, நம்பிக்கையின்மையை வெளிப்படையாக அறிவிப்பதாகக் புரிந்து கொள்ளலாம்.

நவீன முதலாளித்துவ சமூகத்தில் குடியரசு அமைப்பு வடிவத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் ஒற்றை மன்னராட்சி முறையான முடியரசுக்கு திரும்பிப் பின்னோக்கிச் செல்வது என்பது முரண்பாடாகத் தெரிந்தாலும், வரலாற்றில் சில துயரமான காலங்களில் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமில் நடைபெற்ற வரலாற்றுத் துயரமானது, 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் மீண்டும் நிகழ்ந்தது. பிரான்சில் ஏற்பட்ட புரட்சியின் போது முதலாளித்துவக் கட்சிகளையும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளையும் ஒடுக்கிவிட்டு, பிரான்சின் மன்னனாக லூயி போனபர்ட் முடிசூட்டிக் கொண்டார். லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமர் என்ற மார்க்சின் புகழ்பெற்ற நூலில் இந்த வரலாற்று சோகத்தை மார்க்ஸ் அற்புதமாக எழுதியிருப்பார். பின்னர் இருபதாம் நூற்றாண்டில் மன்னர் ஆட்சிக்கு சமமான சர்வாதிகாரியாக முசோலினியும் ஹிட்லரும் அதிகாரத்தை தங்கள் கைகளில் குவித்துக் கொண்டனர்.

முடியரசு மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்களின் பொதுவான பண்புகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம். இவர்கள் பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் சபைகளை மதிக்க மாட்டார்கள். மதவெறி, வெறுப்பு அரசியலை பரப்புவார்கள், அதிகாரப் பகிர்வு, விவாதங்கள் போன்ற ஜனநாயக பண்புகளை அறவே வெறுப்பார்கள். மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வழங்கப்பட்ட சட்டமியற்றும் அதிகாரத்தை ஏகபோகமாக கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்கு உகந்த திட்டங்களை / கொள்கைகளை நாட்டின் கொள்கையாக பலவந்தமாக திணிக்க முயல்வார்கள். அதற்குத் தடையாக இருக்கிற ஜனநாயக சக்திகளை அரசியல் எதிரிகளாகப் பாவித்து, அவர்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்வது, கொலை செய்வது போன்ற பாதக செயல்களை சாதாரணமாக செய்வார்கள். வன்முறையை சட்டபூர்வமாக்குவது இவர்களின் முக்கியப் பண்பாகும். வன்முறைக்கு சட்ட முலாம் பூசி விட்டால், அரசுக்கு எதிரான ஜனநாயகவாதிகள் அனைவர் மீதும் தேசத் துரோகிகள், தீவிரவாதிகள் முத்திரை குத்திவிடலாம். உதாரணமாக யூதர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையை நியூரம்பர்க் சட்டங்கள் மூலமாக ஹிட்லர் நிறைவேற்றினான். நாசிகளும் பாசிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களை அரசியல் எதிரிகளாக அறிவித்துப் படுகொலை செய்தும் சிறையில் அடைத்தும் சித்தரவதை செய்தனர்.

முடியரசர்கள், சர்வாதிகாரிகள் பொதுவாக அரசையும் ராணுவத்தையும் ஒன்றாக இணைத்துக் கொள்வார்கள். ஆனால் குடியரசு வடிவத்தில் ராணுவத்திற்கு அரசியலில் எந்தவித இடமும் இல்லை.

மேலே குறிப்பிட்ட இந்த பொதுப் பண்புகளை கடந்த பத்தாண்டு கால ஆர்எஸ்எஸ் – மோடி ஆட்சியில் நடைபெற்றுவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடன் பொருத்திப் பார்த்தால் தெளிவாகும்.

இந்தியாவின் எதிர்காலம்:

சமூக வரலாற்றின் வளர்ச்சி கட்டங்களாக நிலப்பிரபுத்துவ ஆட்சி, முதாளித்துவ ஜனநாயகக் குடியரசு ஆட்சி, சோசலிசம் ஆகிய படிநிலைகளை சமூகத்தின் இயக்கவியல் விதியாக மார்க்சியம் சுட்டிக் காட்டுகிறது. வரலாற்றின் வளார்ச்சிக் கட்டங்களில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளின் மாற்றமானது பொருத்தமான ஆட்சி வடிவத்தை தீர்மானிக்கிறது என்பதை மார்க்சியம் விளக்குகிறது. ஆனால் வரலாற்றில் சில சமயம் இந்த முன்னோக்கிய வரலாற்று சக்கரத்தை பின்னோக்கில் இழுக்கின்ற பழமைவாத சக்திகள் அவ்வப்போது தோன்றிவிடுகின்றனர். ஜூலியஸ் சீசர் தொடங்கி நெப்போலியன் போனபார்ட், முசோலினி, ஹிட்லர் போன்றவர்கள் அதிகார வேட்கைக்காக ஜனநாயக குடியரசு விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் இந்த வெற்றி தற்காலிகமாகத்தான் நீடித்தது. இத்தாலியும், ஜெர்மனியும் பிரான்சும் மீண்டும் நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாக மாறியது வரலாறு. ஏனெனில் அதுவே இயக்கவியல் விதியும்கூட.

வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளுக்கு பொருத்தமான உற்பத்தி உறவுக்கு, பொருத்தமற்ற ஒரு ஆட்சி வடிவம் நீடிக்க முடியாது. அவ்வாறு நீடித்தால் அந்த சமூகத்தின் பல்வேறு வர்க்க அடுக்குப் பிரிவினர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சர்வாதிகாரிகளுக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், முடியாட்சி காலத்தில் மக்கள் என்ற அடையாளத்தில் இருந்தவர்கள், குடியரசு காலத்தில் குடிமக்கள் ஆகின்றனர். அதோடு குடிமக்களின் உரிமை என்றும் ஆகியது. முடியாட்சியில் மக்களின் கடமை என்பது குடியரசில் உரிமை என மாறியது. ஜனநாயகப் புரட்சியின் பயனாக விளைந்ததாகும். இந்த முன்னோக்கிய பாய்ச்சலை, பின்னோக்கி இழுப்பது என்பது நேரத்தை கடந்த காலத்திற்கு இழுப்பதற்குச் சமமாகும்.

சர்வாதிகாரிகள் எவ்வளவுதான் ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டாலும் சமூகப் புரட்சிகள் மென்மேலும் வீறுகொண்டு எழும் என்பதே வரலாறு. எனவே, பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெற்றி பெறுவது போலத் தெரிந்தாலும், இந்த வெற்றி தற்காலிகமானதுதான்!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button