தமிழகம்

சட்டப்பேரவை மாண்பைக் களங்கப்படுத்திய ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் முழங்குவோம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் இன்று (09.01.2023) உரையாற்றியுள்ளார்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் ஆளுநர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் வாசிக்க கடமைப்பட்டவர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வருவது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையில்தான் இன்று (09.01.2023) ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.

அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு “திராவிட மாடல் ஆட்சி” என்று உரிமை கொண்டாடுவதை நிராகரித்தும் அவமதித்துள்ளார்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாகத் திகழ்வதை ஏற்க மறுத்துள்ள திரு.ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக ஆளுநரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து, கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேராபத்தை எதிர் கொண்டு முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button