கட்டுரைகள்

நீதிபதியின் இந்துத்துவக் குரல்!

வ.மணிமாறன்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நவம்பர் 13 அன்று, ‘மகா பெரியவா’ நூல்களை வெளியிட்டுப் பேசினார். அப்போது, “தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பி.சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ நூல்களை வெளியிட்டிருக்கிறது.

அகல்விளக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் பி.சுவாமிநாதன். திரிஷா விஜய் போன்ற பெயரில் வேறு யாரோ எழுதிய புத்தகம் மாதிரி கிடையாது. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட புத்தகமும் கிடையாது. அனுபவத்தை உள்வாங்கி எழுதப்பட்ட புத்தகம் இது.

2024-ஆம் ஆண்டில் அந்த (நூலக முறைகேடு) வழக்கு விசாரணைக்கு வந்த போது, புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த அரசாணை வெளியிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தார்கள். இனிமேல் வெளிப்படையான கொள்கை பின்பற்றப்படும் என்று கூறினார்கள்.

அப்போது என்னுடைய தீர்ப்பில் ஒரு கருத்தை எழுதியிருந்தேன். ”கங்கையில் குளித்தால் பாவங்கள் எல்லாம் போய்விடும்” என்று சொல்வார்கள். ஆனால், அரசாணை வெளியிட்டுவிட்டால் ”உங்களுடைய பாவங்கள் எல்லாம் போய்விடாது. என்னென்ன தவறுகள் நடந்திருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும்.தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்று பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். ஆனால், அவை எதுவும் நடைபெறவில்லை.

இப்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், பெரியார் அறிவுலகம் என்று சொல்கிறார்கள், இல்லையா? அங்குள்ள எல்லா புத்தக அலமாரிகளிலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்தான் இருக்கு..

அந்தப் பாவங்கள் எல்லாம் கழிய வேண்டும் என்றால், சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தொடர்பான நூல்கள் இருக்கின்றன. அத்தனை தொகுதிகளையும் பெரியார் அறிவுலகத்தில் உள்ள எல்லா புத்தக அலமாரிகளிலும் வைத்தால்தான் இந்தப் பாவங்கள் போகும் என்று நான் மனதார நம்புகிறேன்.” என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உரையாற்றினார். இவை அவருடைய பேச்சின் ஒரு பகுதி.

அவருடைய இந்தப் பேச்சு தனிமனிதனின் மத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று மட்டும் பார்க்க முடியாது. இந்திய நீதித்துறையில் இந்துத்துவா அரசியல் எந்தளவுக்கு ஊடுருவி நிலைபெற்றுள்ளது என்பதற்கான மற்றொரு சான்றாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுகள் இருக்கின்றன. இப்படி தொடர்ந்து பேசி வருகிறார். வழக்கு விசாரணையின் போதும் பேசி இருக்கிறார். நீதித்துறை வரலாற்றிலும் இதற்கான தொடர்ச்சி இருக்கிறது.

1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலத்தை, 2019-ல் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், மசூதி இடிப்பு சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

2021-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், பசுவதை தொடர்பான வழக்கில் பசுவைப் பாதுகாப்பது இந்துக்களின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இவை எடுத்துக்காட்டுகள்தான். இந்த அரசியல் போக்கின் தமிழ்நாட்டு வெளிப்பாடுகளில் ஒன்றுதான் நீதிபதி சுவாமிநாதனின் பேச்சு.

இந்துத்துவ மேலாதிக்க அரசியல் தமிழ்நாட்டில் தனது முக்கிய எதிரியாகக் கருதுவது பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை மரபையே. அந்த மரபை “பாவம்” என்று சித்தரித்து, அதற்கு மதப் பரிகாரம் கோருவது, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சியாகும்.

எனவே, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுடைய பேச்சின் அரசியல் உள்ளடக்கத்தை முதலில் புரிந்து கொள்வோம்.

1. பெரியாரின் பகுத்தறிவு மரபு மீதான நேரடித் தாக்குதல் — “மகா பெரியவா தொடர்பான நூல்களின் அத்தனை தொகுதிகளையும் பெரியார் அறிவுலகத்தில் உள்ள எல்லா ரேக்குகளிலும் வைத்தால்தான் பாவங்கள் போகும்” என்று அவர் கூறுவது, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி எதிர்ப்பு ஆகியவற்றை “பாவம்” என்று முத்திரை குத்துவதாகும். அதற்கு மாற்றாக காஞ்சி சங்கராச்சாரியாரின் நூல்களை வைக்க வேண்டும் என வலியுறுத்துவது, மத அடிப்படைவாத கருத்தியலை பொது நிறுவனங்களின் மீது திணிக்கும் முயற்சியாகும்.

2. நீதித்துறையின் மதச்சார்பற்ற தன்மையில் சிதைவு — உயர்நீதிமன்ற நீதிபதி “பாவம்” “புண்ணியம்” என்ற மதக் கருத்தாக்கங்களைப் பேசுவது, இந்திய அரசின் “மதச்சார்பற்ற” அரசியலமைப்பு நிறுவனங்கள் என்று கூறப்படுபவை, உண்மையில் இந்துத்துவ வகுப்புவாத அரசியலால் எந்த அளவுக்கு நிரம்பி இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

3. தனிப்பட்ட நம்பிக்கையும் நீதிபதியின் பொதுப் பொறுப்பும் ஒன்றல்ல – இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்கு மத நம்பிக்கை கொள்ளவும், மதத்தைப் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. ஆனால், ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் அவருடைய நிலை மாறுகிறது. அவர் ஒரு மதத்தின் பிரதிநிதி அல்ல; ஒரு குறிப்பிட்ட ஆன்மிகத் தலைவரின் ஆதரவாளர் அல்ல; ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் எதிரி அல்ல; ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூக அமைப்பின் தரப்பினர் அல்ல. அவர் அரசியலமைப்பையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நீதித்துறையின் ஓர் அங்கமாகும். அவர் பொது நிகழ்ச்சியில் பேசும்போது, அந்தப் பேச்சு நீதித்துறையின் நடுநிலை குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

4. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்று வரையறுக்கிறது. அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 25-வது பிரிவு மனச்சாட்சியின் சுதந்திரத்தையும், மதத்தைப் பின்பற்றும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறது. மதச்சார்பின்மை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் இடம்பெறுகிறது என்பது உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடுமாகும். இவற்றின் பொருள் என்ன?

பெரியாரைப் பின்பற்றுபவருக்கும் உரிமை உண்டு; மகா பெரியவாவைப் பின்பற்றுபவருக்கும் உரிமை உண்டு; நாத்திகருக்கும் உரிமை உண்டு; எந்த மதத்தையும் பின்பற்றாதவருக்கும் உரிமை உண்டு; எல்லோருக்கும் ஒரே அரசியலமைப்புதான் பாதுகாப்பு அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் மதச்சார்பின்மையையும், சமத்துவத்தையும் உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, ஒரு நீதிபதி, பொதுவெளியில் குறிப்பிட்ட மதத்தை உயர்த்திப்பிடிப்பதுடன், ஒரு சமூகத்தின் சிந்தனை மரபை ‘பாவம்’ என்றும், அதற்குப் பரிகாரமாக மற்றொரு மரபின் நூல்களை வைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். இது நிறுவனரீதியான அவரது நடுநிலைக்கு எதிரானதாகும்.

தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு சிந்தனை மரபுகள் இருந்து வருகின்றன. அவை தொடர்பான நூல்களைப் படிப்பதற்கும் வெளியிடுவதற்கும் போற்றுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. இவற்றில் எது உயர்ந்தது என்பதைத் தீர்மானிப்பது நீதிபதியின் பணி அல்ல.

நூலகங்களில், நூல்கள் இடம்பெறுவதற்கான அளவுகோல்கள் – அவற்றின் அறிவுத்தரம், இலக்கிய மதிப்பு, வரலாற்று முக்கியத்துவம், நூலகக் கொள்முதல் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இத்தகைய நடைமுறைகள் சட்டத்திற்குப் புறம்பாகவோ, விதிமீறலாகவோ இருந்தால் அவற்றைச் சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து உரிய தீர்ப்பளிப்பதே நீதித்துறையின் கடமை. மாறாக, மத நம்பிக்கையையோ, பாவம், –புண்ணியம் என்ற கருத்தாக்கத்தையோ அதற்கான அளவுகோலாக முன்வைக்க முடியாது.

இந்தப் பிரச்சனையை இந்துத்துவ – சனாதன அரசியல் சாய்வுடன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அணுகியிருப்பது, நீதித்துறையின் நடுநிலைமை மற்றும் அரசியலமைப்பு சார்ந்த நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே அரசியலமைப்பின் மதச்சார்பின்மையையும், சமூகநீதி விழுமியங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button