கட்டுரைகள்

மாணவர் உலகம்: சப்தமின்றி அழியும் இந்தியாவின் வகுப்பறைகள்

சி.ஆதிகேசவன்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் ஜென்-சி (Gen-Z) தலைமுறையினரிடத்தில் தேசிய உணர்வு விழிப்படைய செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, (அடுத்த) தலைமுறையினர் தயாரிக்கப்படும் முறை குறித்த வேறுபட்ட புள்ளி விவரத் தரவுகள் எண்களின் கதையைச் சொல்லும் தருணத்தில் வந்துள்ளது. இந்திய தேசத்தின் நிதி நிலைமை தரவுகள் குறித்த ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, தேசத்தின் ஒட்டுமொத்த செலவினங்களில் கல்விக்கான பங்கு 2010–11ல் இருந்த 16.6 சதவீதத்திலிருந்து 2025 –26ல் அது 14.5% ஆகக் குறைந்துள்ளது.

இந்தியா அதன் மக்கட்தொகை பயன்களின் ஈவுத் தொகையை அறுவடை செய்து கொண்டிருந்ததாகக் கருதப்பட்ட அதே ஆண்டுகளில், ஒப்பீட்டளவில் இந்தக் குறைப்புத் தோராயமாக 13 சதவீதமாகும். 2017ல் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் எமினன்ஸ் என்ற சிறப்புறு கல்வி நிறுவனங்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது; அத்திட்டம் 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் கல்வி வளாகங்களை முழுமையான தன்னாட்சி சுதந்திரத்துடனும், ஒவ்வொரு பொது கல்வி நிறுவனத்திற்கும் ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன், அவை உலகளாவிய முதல் நிலை 100 பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் ஆசியாவின் உயர்தர இடம் பெறும் நோக்கத்தில் தொடங்கப்படுவதாக உறுதியளித்தது; என்ற போதிலும் ஆசியாவின் முதல் நிலை 50 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இன்னும் ஓர் இந்தியக் கல்வி நிறுவனம் கூட இல்லை.

கள நிலவரச் சித்திரம் இன்னும் மோசமாக உள்ளது: மும்பை அரசு பள்ளி ஒன்றில் 34 ஆசிரியர்களில் 24 பேர் ஒரே நேரத்தில் பூத் மட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பொறுப்பளிக்கப்பட்டு வகுப்புப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; மகாராஷ்டிரத்தில் தேர்தல் பணியை மறுத்த 95 ஆசிரியர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவிடப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மாணவர்கள் மதிப்பெண் வீழ்ச்சி அடைந்ததுடன் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) பணி தொடர்புடையதாக உள்ளது; கொல்கத்தாவில் 12 இணைப்புக் கல்லூரிகளில் மத்திய படைகள் தங்கவைத்த காரணத்தால், கல்லூரித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிர்வாக பழக்கம் பழமையான ஒன்று. கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009 வருவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைக் கால்நடை கணக்கெடுப்புகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு மற்றும் மனு நிரப்பல் பிரச்சாரங்களுக்கு மிக வசதியான அரசு உழைப்பு சக்தி என்று நடத்தினர். பள்ளிகள் மாதக் கணக்கில் மூடப்பட்டன அல்லது ஓர் ஆசிரியரே ஐந்து வகுப்புகளையும் நடத்தினார். இதைக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 27 நிறுத்தியது. அந்தச் சட்டப் பிரிவின் மொழி தெளிவானது: எந்த ஓர் ஆசிரியரும் கல்வி சாராத பணிக்காக நியமிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியது. இந்தப் பிரிவுக்கு மூன்று விதிவிலக்குகள்: 1 பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2. பேரிடர் நிவாரணம் மற்றும் 3. நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் தொடர்பான பணி. இச்சட்டப் பிரிவை வடிவமைத்தவர்கள், இந்த நிகழ்வுகள் அபூர்வமாக நிகழக் கூடியவை என்று கருதினர். தொடர்ந்து பஞ்சாயத்து, மாநகர, சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் நடைபெறும் தேசத்தில், விதிவிலக்குகள் நிரந்தர சட்டமாயின.

கல்விக்கான நிதி குறைப்பு மாநில மட்டத்தில் அளவிடக் கூடியதாக உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த செலவில் கல்விக்கான பங்கு 21 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அசாமில் 22ல் இருந்து 17.8 சதவீதமாக வீழ்ச்சி. அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளைக் கொண்ட உபியில் கல்விக்கான பங்கு 16.1 சதவீதத்திலிருந்து 13.8 சதவீதமாகச் சரிவு. பணவீக்க உயர்வு மற்றும் ஒட்டு மொத்த பட்ஜெட் அளவு காரணமாக நிகர ரூபாய் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம்; ஆனால் மொத்த நிதி ஆதாரத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட சதவீதம் அரசின் முன்னுரிமையைத் தெளிவாகக் காட்டும் குறியீடாகும். அந்தப் பங்கில் இரண்டிலிருந்து ஆறு சதவீதப் புள்ளிகள் குறையும்போது, செலவில் வெட்டு விழுவது சங்கிலியின் கடைசி கண்ணியாக இருக்கும்.

ஜார்கண்டில் பள்ளிகளைச் சுத்தம் செய்வதற்கான துடைப்பங்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கு ஒரு காலத்தில் வழங்கப்பட்ட மிகச் சிறிய அளவிலான ஆண்டு பராமரிப்பு மானியங்கள்கூட தற்போது நிறுத்தப்பட்டு விட்டன என்று பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் (Jean Drèze) பதிவு செய்துள்ளார்.

இந்தச் சீர்குலைவை அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் மூடி மறைக்கின்றன. (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ் –Unified District Information System for Education Plus–) UDISE+ இணையதளம் பள்ளிகளில் கழிவறைகள் எண்ணிக்கை, குடிநீர் வசதி மற்றும் நிரந்தரப் பள்ளி கட்டிடம் முதலியன குறித்த கிட்டத்தட்ட முழுமையான தகவல்களைக் கொண்டது. ஆனால் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு உள்ளிட்ட சுதந்திரக் கள ஆய்வுகள் கண்டறிந்த உண்மைகள் அதிர்ச்சி அளிக்கின்றன: அந்த ஆய்வறிக்கைகள்படி பள்ளிகளில் காகித ஆவணங்களில் கழிவறைகள் உள்ளன ஆனால் பயன்படுத்த முடியாதபடி அடைத்துக் கொண்டுள்ளன; பதிவுகளில் உள்ள கைப்பம்புகள் உடைந்த நிலையில்; ஒழுகும் மேற்கூரைகள் மற்றும் மறைந்து போன விளையாட்டு மைதானங்கள் இவற்றைக் கண்டுபிடித்துள்ளன.

கட்டுமான ஒப்பந்தங்கள் முடிந்த பிறகு எந்தவித திறனுள்ள பராமரிப்பு முறையும் இல்லை. தரம் குறைந்த பணி முடித்து வழங்கிய ஒப்பந்ததாரர்கள் அதன் பின்விளைவுகள் எதையும் சந்திக்கவில்லை –ஆனால் அதே நேரத்தில் இணையதள டிஜிட்டல் புள்ளிவிபர அறிவிப்புக்கள் பசுமையாகக் காட்சி தருகின்றன.

கற்பிக்கும் நேரத்தைக் கணக்கிடும் முறை இந்த திசை திருப்பலை இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மாற்றுகிறது. ஆர்டிஇ சட்டம் ஓர் ஆசிரியருக்கு ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 45 மணி பணி நேரம் தேவை என்றும், (கல்வியாண்டின்) 200 வேலை நாட்களில் –ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேர நேரடி கற்பித்தல் என– குறைந்தபட்சம் 800 மணி நேரம் வகுப்பறை போதனை தேவை என்றும் விதித்துள்ளது. எனவே ஆறு பள்ளி நாட்கள் எனில் 24 மணி நேர வகுப்பறை நேரம் கிடைக்கும்; இதில் ஆறு மணி நேரத்தைத் தயாரிப்புக்கு அனுமதித்த பிறகு சுமார் 15 மணி நேரம் கற்பித்தல் சாராத பிற பணிகளுக்குக் கிடைக்கும். அந்த நேரம் நடைமுறையில் புறக்கணிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள், (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்திய, பள்ளி முதல் உயர்கல்வி வரை மாணவர்களின் கல்வி விவரங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க உதவும் Automated Permanent Academic Account Registry எனப்படும்) APAAR IDs அடையாள எண்களை உருவாக்கவும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், கைகளால் எழுதப்படும் பதிவேடுகளையும் டிஜிட்டல் போர்டர்கள் என இரண்டையும் பராமரிக்கவும், வட்டார அளவிலான ரிசோர்ஸ் மையங்களில் நடக்கும் மதியநேர கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வாட்ஸ்அப் செயலிகளில் வழங்கப்படும் –உடனடி அறிக்கைகளைக் கோரும்– குறிப்பாணைகளுக்கு உடனடியாகப் பதில் அளிக்கவும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதில் பெரும்பான்மையான பணிகள் கற்பித்தலில் செலவிட வேண்டிய அந்த நான்கு மணி நேரத்தில் நிகழ்கிறது. வகுப்புகளில் குழந்தைகள் வெறுமே சும்மா அமர்ந்திருக்கும்போது, அவர்களின் ஆசிரியர்கள் ஊதியமில்லா டேட்டா ஆப்ரேட்டர்களாகச் செயல்படுகிறார்கள்.

இந்த வழக்கங்கள் ஓர் ஒத்திசைவான அதிகார வலை பின்னலை ஏற்படுத்துகிறது. மாநில நிதித்துறைகளும் அரசியல் தலைமையும் ஐந்து வருட தேர்தல் சுழற்சிகளில் இயங்குகின்றன; கல்வி மீதான முதலீட்டின் பலன் 15 வருடங்களுக்குப் பிறகு மட்டுமே தெரியும். எனவே, (ஐந்து வருடங்களுக்குள் பலன் காண முடியாத கல்வி முதலீட்டுக்கு பதில்) குறைந்த கால பலன்களை வழங்கக்கூடிய திட்டங்களை நோக்கி நிதி ஆதாரங்கள் மடைமாற்றப்படுகின்றன.

மாவட்ட நிர்வாகங்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்ச்சியான பூத் மட்ட அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகள் தேவையாக உள்ளது; அர்ப்பணிப்புள்ள எழுத்தர் பணிக்கான ஆளெடுப்புகள் கூடுதல் செலவாகக் கூடியது; எனவே ஆர்டிஏ சட்டத்தின் பிரிவு 27ல் உள்ள ஓட்டை எந்தவித ஊதியமுமின்றி இலவசமாக இப்பணிக்காக ஆசிரியர்களை அமர்த்தப் பயன்படுத்தப்படுகிறது.

உட்கட்டமைப்பு ஒப்பந்ததாரர்கள் ஒரு முறை கட்டுமானத்திலிருந்து லாபம் ஈட்டும் அதே நேரத்தில், கட்டிடப் பராமரிப்புப் பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளைச் சார்ந்துள்ள குடும்பங்கள், அரசியல் ரீதியான கோரிக்கை குரல் எழுப்ப இயலாதவை. அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் பல மூத்த ஆசிரியர்களும்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் அல்லது சர்வதேசப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்; இதன் மூலம் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களைத் தாங்கள் நிர்வகிக்கும் அமைப்பு முறையின் விளைவுகளில் இருந்து பாதுகாக்கின்றனர். இதன் மனித இழப்பு கறாராக ஏராளம்.

பள்ளிகளில் தீவிரமான கற்பித்தல் மறையும்போது, கீழ்மட்ட நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் தனியார் பள்ளி கட்டணம் அல்லது கோச்சிங் கட்டணங்களுக்குச் செலவு செய்ய வீட்டு பட்ஜெட்டைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அப்படிச் செலவு செய்ய வாய்ப்பு வசதியற்றவர்கள், சான்றிதழ்களோடு அரசு பள்ளிகளை விட்டு வெளியேறினாலும், அடிப்படைத் திறன் ஏதுமின்றி, குறைந்த ஊதியம் பெறும் கேசுவல் தொழிலாளிகள் படை வரிசையில் இணைகிறார்கள். (ஜப்பான் போல முதியவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இல்லாமல்) பெரும்பான்மைக்கும் அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நம் தேசத்தின் மக்கள் தொகை பயனின் ஈவுத் தொகை (demographic dividend) என்பது வெறும் எண்ணிக்கையினால் தானாகவே கிடைத்த பரிசு அல்ல; அது அறிவுசார் திறனை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முதலீட்டின் விளைவாகும்.

தற்போது ஆசியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி முன்னணியில் உள்ள சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களின் இந்த நிலையைப் புதிய அறிவிப்புப் பலகைகளை நிறுவுவதன் மூலம் சாதிக்கவில்லை. அவர்கள் ஆய்வுகளுக்காகச் செலவு செய்தனர், கல்வி நிறுவனத் தன்னாட்சியைப் பாதுகாத்தனர், வகுப்பறைகளை வழக்கமான அன்றாட தங்கு தடையற்ற அரசியல் மற்றும் நிர்வாகத் தலையீட்டில் இருந்து விலக்கி வைத்தனர்.

அந்த நாள் நம் நாட்டில் வரும் நாள் எந்நாளோ?

–நன்றி நியூ ஏஜ் (நவ. 22 –28)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button