கட்டுரைகள்

மதுபான வியாபாரம் தனியாரிடமா? அரசின் பேரழிவுக் கொள்கை என எச்சரிக்கை

நா.பெரியசாமி

தமிழ் சமூக ஊடகங்களில் மதுபான வியாபாரம் குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” பஞ்சமா பாதங்களில்” ஒன்றாக மது கருதப்படுகிறது. ஆனால், மனித சமூக வாழ்வில் ஆரம்ப காலங்களில் தொடங்கி, இந்த நவீன யுகம் வரையிலும் அதனை விலக்கி வைக்க இயலவில்லை.

காலனிய ஆட்சி காலத்தில் கள், சாராயம், அயல் நாட்டு மதுவகைகள் வியாபாரம் அனுமதிக்கப்பட்டு வந்தது. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை செய்து, பரிபூரண மதுவிலக்கு அமலாக்க வேண்டும் என்பது தேச விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. இதன் மீதான அழுத்தம் காரணமாக 1937 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடு விடுதலை பெற்ற பின்னர் 1948 முதல் மதுவிலக்கு கடுமையாக அமலாக்கப்பட்டு வந்தது.

கடந்த 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. கள், சாராய வியாபாரம் அனுமதிக்கப்பட்டது. ஏல முறையில் தனியார் வசம் இருந்து வந்த மது வியாபாரத்தில் கள்ள மதுபான வியாபாரம் அதிகரித்து, மனித மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, கடந்த 1974 ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கு அமலாக்கம் தொடங்கியது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 1981 – ல் மீண்டும் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 1987 -ல் மீண்டும் மதுவிலக்கு அமலாக்கப்பட்டது. இப்படி மதுவிலக்கு கொள்கை மாறி, மாறி தடுமாற்றம் கண்டு வந்ததால், மது வியாபாரம் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று நிற்கிறது.

தமிழ்நாடு அரசு தனது வரவு – செலவு திட்டத்திற்கான நிதியாதாரம் தேடும் போது, மது வியாபாரம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்பட்டது. இந்த வகையில் தனியார் பொறுப்பில் இருந்து வந்த மது வியாபாரத்தில் சமூக ஆதிக்க சக்திகள் கூட்டணி அமைத்து, அரசின் கருவூலத்தில் சேர வேண்டிய நிதியாதாரம், தனியார் கைகளுக்கு சென்று குவிந்து வருவதும், இந்த உற்பத்தி சாரா நிதிக்குவிப்பு சட்ட விரோதச் செயல்களை ஊக்குவிக்கும் சமூகத் தீமையாக வளர்ந்து, அது சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக எழுந்து வருவதும் அரசின் பார்வையில் பட்டது.

இந்தச் சூழலில் தான் 2002-2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதித்து, மதுபான வியாபாரத்தில் நிலவிவரும் “கூட்டுக் களவாணி “ முறையை உடைத்து, அரசின் நிதியாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் சில்லறை மதுபானங்கள் விற்பனையை அரசே மேற்கொள்வது என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2003 நவம்பர் 29 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மதுபான சில்லறை வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 1983 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டப்படி, உருவாக்கப்பட்ட அரசின் நிறுவனமாகும். மூத்த ஆட்சிப் பணி அலுவலர்களை இயக்குநர்களாக கொண்ட நிர்வாகக் குழுவால் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மொத்த கொள்முதல் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த டாஸ்மாக் நிறுவனம் 2003 முதல் சில்லறை விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றது.

சில்லறை மதுபான வியாபாரப் பிரிவில் பணிபுரிய இளைய தலைமுறையினர் தயக்கம் காட்டியது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக சில்லறை மதுபான விற்பனை பிரிவில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஒப்பந்தப்பணி என அறிவிக்கப்பட்டது. அரசின் மதுபான விற்பனை என்பதாலும், வேலையின்மையின் தாக்கம் காரணமாகவும் சுமார் 30 ஆயிரம் இளைஞர்கள் பணியில் சேர்ந்தனர். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், மதுக்கூட உதவியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டாலும், கடைப் பணியாளர்கள் என்ற கூட்டுப் பொறுப்பாக பணிமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையை தொடங்கிய 2002 – 2003 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ 2,828. 09 கோடி வருவாய் கிடைத்தது. அது, தற்போது 2025-26 ஆம் நிதியாண்டில் ரூபாய் 50 ஆயிரம் கோடியை தாண்டி, தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்காக அமைந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 23 ஆண்டுகளில் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், மதுவிலக்கு கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. பரிபூரண மதுவிலக்கு கோரிக்கை மீது போராட்டம் வலிமை பெற்று, வலுவான அரசியல் அழுத்தம் தந்த நிலையிலும் மதுவிலக்கு கொள்கை மாறாமல் அப்படியே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கும், அரசின் கொள்கை வகுப்பில் அழுத்தம் தரும் சக்தியும் கொண்டவர்கள் மதுபான உற்பத்தி ஆலைகள் தொடங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த வகையில் தற்போது 15 மதுபான உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் நாள் தோறும் ஒரு லட்சம் பெட்டிகள் தொடங்கி 8 லட்சம் பெட்டிகள் வரை மதுபானங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தித் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்து வரும் அரசு நிறுவனம், மதுபான உற்பத்தி ஆலைகளை நடத்தும் திறனற்றவையா? என்ற கேள்வி எழுகிறது. உற்பத்தி தொடங்கி, நுகர்வு முனை வரையிலும் மனிதவள நலனையும் உள்ளடக்கிய முறையில், மதுபானத் தொழிலை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தயங்குவது ஏன்? என்பதும் பரிசீலனைக்குரியது.

அரசியல் தளத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மதுபான உற்பத்தி ஆலைகளில் முதலீடு செய்து, பெரு லாபம் பெற்று வருவதை காணும் , அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் மதுபான விற்பனையில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்பில், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப் எல் 2 என்கிற உரிமங்கள் பெறுவதன் மூலம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் 2021 – 2026 காலங்களில் 1300க்கும் மேற்பட்ட மன மகிழ் மன்றங்கள் உரிமம் பெற்றுள்ளன. இதில், ஒருவருக்கு, நாளொன்றுக்கு, எவ்வளவு மதுபானங்கள் வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், 12 உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட, சிறிய மனமகிழ் மன்றம் கூட பெரும் அளவில் மதுபானங்கள் பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் மே 10, 2026 புதிய ஆட்சி அமைத்தது. அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மக்கள் நலன் கருதி, டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வரும் 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். அது முழுமையாக அமலாக்கப்பட்டது. ஆனால், மூடப்பட்ட அரசுக் கடைகள் செயல்பட்ட அதே எல்லைக்குள் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் ஒன்று கூட மூடப்படவில்லை. அரசின் மதுக்கடைகளை மூடி, தனியார் விற்பனைக்கு உதவுவதாக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்தச் சூழலில் தான் 23 ஆண்டுகள் பணித் தொடர்ச்சி கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், நிலையாணை உருவாக்கி, பணி வரன்முறை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராடி வரும் டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டவும், பணிய வைக்கவும் மதுபான விற்பனை தனியார் மயமாகும் என அறிவிக்கிறார்கள். அரசு தனது மூன்றில் ஒரு பங்கு வரி வருவாயை தனியாருக்கு தாரை வார்க்கும் எனில், அது தமிழ்நாட்டின் எதிர் காலத்தை அழித்தொழிக்கும் அரசின் பேரழிவுக் கொள்கையாக அமையும் என்பதே காலத்தின் எச்சரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button