அறிக்கைகள்

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாயிகளின் பயிர்க்கடன் கடன் தள்ளுபடி குறித்து நான்காவது கட்ட பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் 22.10.2026 அன்று பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜீனா, செங்கோட்டையன், வினோத், காந்தி ராஜ், ரமேஷ், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை செயலாளர் சித்திக், பேரிடர் துறை செயலாளர் அமுதா, கூட்டுறவுத்துறை தலைமை பதிவாளர் மற்றும் செயலாளர் பங்கு கொண்டார்கள்.

தேர்தல் கால வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்திட வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். நிதி நெருக்கடியை திரும்ப திரும்ப அமைச்சர்கள் கூறினார்கள். முடிவாக, சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்குமே ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி செய்வது என அமைச்சர்கள் முதல்வரின் முடிவாக அறிவித்தனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் 4 தடவை கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், ஒதுக்கீடு செய்த தொகை 6024 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தமாக 2025 -26 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கடன் பெற்றிருக்கிற விவசாயிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி செய்வது, எஞ்சிய தொகையை விவசாயிகள் செலுத்துவது என்று முடிவானது.

இதனால் இதுவரை 6024 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் ரூபாய் 2228 கோடி சேர்த்து ரூபாய் 8312 கோடி நிதி ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.
இன்றைய நிலையில் அரசின் நிதிநிலை மற்றும் வேறு பல வருவாய் முதலீட்டு திட்டங்களுக்கான நிதி நெருக்கடி காரணமாக சங்க நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்பதை நீக்கி, நிபந்தனைகளையும் தளர்த்தி விவசாயிகள் என்ற முறையில் விவசாயிகள் அனைவருக்கும் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் இதுவரை புதிய கடன் பெறுவதற்காக விவசாயிகள் செலுத்தி இருக்கிற கடன் தொகையையும் தள்ளுபடியில் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டது. முதல்வரை கலந்து பேசி அதையும் இந்த திட்டத்தில் சேர்க்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதை வரவேற்கிறது.

இக்கோரிக்கைகளை வென்றிட ஐந்து முறை இரு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாநில, மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. முதலாவதாக ஆர்ப்பாட்டங்கள் 22.06.2026 அன்று சென்னை கூட்டுறவு தலைமை பதிவாளர் அலுவலகம் முன் முழக்கப் போராட்டம், 20.07.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட வட்டாரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்,, 04.08. 2026 அன்று சென்னையில் காத்திருப்பு போராட்டம், 21.10.2026. தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள், 215 மையங்களில் சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் பங்கு கொண்டதில் 15,000 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல விவசாய சங்கங்களும் போராடிய நிலையில் போராட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதற்கான 5 கட்ட போராட்டங்களிலும் பங்கேற்று, அமைச்சர்கள், விவசாயிகளுக்கான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு மற்றும் தீர்வு காணும் இக்கூட்டம் வரை அனைத்திலும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.மாரிமுத்து அவர்கள் பங்கு கொண்டு உதவியதை அனைத்து சங்க நிர்வாகிகள் பாராட்டி நன்றி கூறினர்.

பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, மாநிலத் துணைத் தலைவர் கே.உலகநாதன் முன்.எம்.எல்.ஏ., மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி.ரவீந்திரன், பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் மற்றும் பிற சங்கங்களின் சார்பில் 40 பேர் அளவில் பங்கு கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button