அறிக்கைகள்இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள்

மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறை - போராட்டங்கள் ஓயாது: சிபிஐ

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்புகளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மோடி அரசு பாசிச முறைகளை கையாண்டு வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தேசிய செயலகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய டெல்லியில் 45,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரைக் குவித்தது, தலைநகருக்கு வந்துகொண்டிருந்த ரயில்களின் சேவையை ரத்து செய்தது, இணையச் சேவையை முடக்கியது, 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது ஆகிய நடவடிக்கைகள் டெல்லியை ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றின. டெல்லி காவல்துறையின் துணையுடன், ஆர்எஸ்எஸ் தொடர்புடைய குண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த ஜனநாயக விரோத ஒடுக்குமுறை, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியாவுக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் பட்டியல்களில் நடைபெறும் மோசடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உடந்தை ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒடுக்குவதற்காக, ஜனநாயக ஆட்சி என்ற தோற்றத்தைக்கூட ஒன்றிய பாஜக அரசு கைவிட்டுவிட்டது. தமது எதேச்சதிகார முகத்தை மோடி அரசு வெளிப்படையாகக் காட்டியுள்ளது.

மக்களிடம் தமக்குள்ள செல்வாக்கின் மீது பாஜக முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டது என்பதும், நியாயமற்ற வழிமுறைகளின் மூலமாகவே அது தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது என்பதும் வெளிப்படையாகியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த முயன்ற குடிமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, மிரட்டல், வற்புறுத்தல் ஆகியவற்றை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் பல நாட்களாக முன்னெச்சரிக்கைத் தடுப்புக் காவல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அடக்குமுறைக்குப் பணிய மறுத்து பல்லாயிரம் மாணவர்களும் இளைஞர்களும் டெல்லியில் திரண்டனர். ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டதுடன், அவர்கள் மீது வன்முறையும் ஏவிவிடப்பட்டது.

போராட்ட செய்திகளை சேகரிக்கச் சென்ற பல பத்திரிகையாளர்களையும் டெல்லி காவல்துறை தடுத்து வைத்தது. போராட்டத்தைச் செய்தியாக்குவதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டனர். இது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதும், பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையின் மீதும் நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதலாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்கள் ராமகிருஷ்ண பாண்டா, கே.பிரகாஷ் பாபு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் சுக்ஜிந்தர் மஹேசரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நிஷா சித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், தலைவர் விராஜ் தேவாங் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அவமானகரமான காட்சிகள், ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பைக் கண்டு மோடி அரசு அஞ்சுவதையும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதில் அது உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்துகின்றன.

ஜனநாயக விரோதமான இந்த அடக்குமுறை நடவடிக்கைகளால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுபவர்களின் மன உறுதியை மோடி அரசால் குலைக்க முடியவில்லை. ஜனநாயகத்திற்காகத் தங்களது குரல்களை உயர்த்தி வருபவர்கள் அனைவரையும், குறிப்பாகக் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட போதும் உறுதியுடன் நின்ற மாணவர்களையும் இளைஞர்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

இந்தப் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று, நாடு முழுவதும் பரவும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; தேர்தல் முறையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் ஓயாது. நமது ஒற்றுமை, தார்மீக அடிப்படையில் ஆட்சியில் தொடருவதற்கான உரிமையை ஏற்கெனவே இழந்துவிட்ட ஒன்றிய பாஜக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button