கட்டுரைகள்

இவர்தான் அந்த யோக்கியரா?

-இரா.முத்தரசன்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காள பெருமக்களின் வாக்குரிமையை பறித்த மகா யோக்கியர் ஞானேஷ்குமார் என்கிற தேர்தல் தலைமை அதிகாரி. மற்ற இருவரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை புறந்தள்ளி தன்னிச்சையாக செயல்பட்ட ஓர் சர்வாதிகாரி.

வலப்பக்கம் நாட்டின் பிரதமர் திருவாளர் நரேந்திர மோடி, இடப்பக்கம் பெருவிழி கொண்ட உள்துறை அமைச்சர் கொலைக் குற்றவாளி வழக்கில் இருந்து தப்பித்த அமித்ஷா மத்தியில் அமர்ந்திருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார்.

“பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே! கருடன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது”

-கவியரசர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல்.

அதிகார பலமிக்க இருவர் அருகருகே அமர்ந்திருக்க ஜனநாயகத்தைச் சீரழிக்க வந்த இவ்விரட்டையர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் அமர்ந்திட, வாக்காளர்கள் உரிமையைப் பாதிக்கும் அடாவடித்தனத்தின் மொத்த உருவமாக செயல்பட்ட ஞானேஷ்குமாருக்கு எதிரான ஜனநாயகம் காப்பதற்கானப் போராட்டம் நாடுமுழுவதும் எட்டுத் திசைகளிலும் தீவிரமடைந்து வருகின்றது.

பெரும் சீற்றமடைந்து வரும் இப்போரில் ஜனநாயக நாட்டமுடைய அனைவரும், அனைத்துக் கட்சிகள் மட்டும் இன்றி, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்களும் – இளைஞர்களும் வெகுண்டெழுந்து வருவது மீண்டும் ஒரு சுதந்திரப் போரை நினைவூட்டுகின்றது.

ஞானேஷ்குமார் என்பவர் தனிப்பட்ட நபர் அல்ல. அவர் வெறும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி – அதிகாரி மட்டுமல்ல. மாறாக, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுள்ளவர்.

வயது வந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாக்குரிமையைப் பதிந்து உரிமையை மதிப்பது.

பதிவான வாக்காளர் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்களிக்க உத்தரவாதம் அளிப்பது. அவர் அளித்த வாக்கைப் பாதுகாப்பது.

இவை உள்ளிட்ட தலையாயக் கடமைகள் தேர்தல் ஆணையத்தின்முன் உள்ள ஆகப்பெரும் கடமைகளாகும்.

நாடு தனக்களித்த பெரும் கடமையை அச்சரம் பிறழாமல் நிறைவேற்ற வேண்டிய அதிகாரி – தான் கடமைத் தவறியது மட்டுமின்றி, வாக்காளரின் உரிமையை, 13 கோடி பேரின் உரிமையைக் கேட்பாரற்றுப் பகிரங்கமாகத் திருடிய பகல் கொள்ளையன்தான் ஞானேஷ் குமார்.

இத்தகைய கொடூரத் திருட்டுத்தனம் திடீரெனத் தோன்றியது அல்ல. பிறவிக்குணம் என்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார் ஒன்றிய அமைச்சகப் பணிகளுக்குச் செல்வதற்கு முன்னதாக, கேரள மாநிலத்தில் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து பணியாற்றியுள்ளார்.

அத்தகையப் பணிகளில் ஒன்றான, கேரள மாநில பொதுப்பணித்துறைச் செயலாளராக இம்மனிதன் பதவி வகித்தக் காலத்தில் நடைபெற்ற பெரும் ஊழல் மட்டுமல்ல – கொலையும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் அங்கமாலி – திருவனந்தபுரம் இடையே ரூபாய் 215 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை பி.ஏ.டி.ஐ. (PATI) எனும் மலேசியா நிறுவனம் மற்றும் பகீரதா பொறியியல் நிறுவனம் ஆகியவைக் கூட்டாக மேற்கொண்டன.

மலேசிய நிறுவனத்தின் திட்டப் பொறியாளர் லீ.சி.பீன் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

அவ்வாறு எழுப்பிய பொறியாளர் மலேசியா திரும்பிய பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தனது நிறுவன இயக்குனருக்கு எழுதியுள்ள இரண்டு கடிதங்களில் ஞானேஷ்குமார் பெயர் தீர்க்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்துதான் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தற்போது இப்பிரச்சனை குறித்து கேரள மாநில ஊழல் கண்காணிப்புப் பிரிவு விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இம்முடிவை கேரள மாநில இடதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞானேஷ்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பிய மலேசிய திட்ட பொறியாளர் லீ.சி.பீன் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் எனின், தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எழுப்பிய இரு உறுப்பினர்களான விவேக் ஜோஷி மற்றும் எஸ்.எஸ்.சாந்துவின் கதி என்னவாகும்?

அவ்விருவரும் ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான, தான்தோன்றித் தனமான, ஏதேச்சதிகாரமான செயல்பாடுகள் குறித்து 10 மாத காலத்தில் மத்திய அமைச்சரவை செயலாளருக்கு 14 முறை கடிதம் எழுதி உள்ளனர்.

ரூபாய் 215 கோடி டெண்டர் பணிகளின் முறைகேட்டை அம்பலப்படுத்திய மலேசிய நாட்டுப் பொறியாளர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் எனில், 13 கோடி வாக்காளர்களின் உரிமையை பறித்த கொடுஞ்செயலை அம்பலப்படுத்திய இரு தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கதி என்னவாகும்? ஏனெனில், ஞானேஷ்குமார் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு.

இந்நாட்டுக் குடிமக்களைப் பார்த்து, கோடிக்கணக்கான வாக்காளப் பெருமக்களைப் பார்த்து சிறிதும் கூச்சநாச்சம் இன்றி சௌக்கியமா? என கேட்கின்றார்.

எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும், அத்தகையப் பொறுப்பை உணர்ந்து மதிப்பளித்து தன் கடமையை நிறைவேற்றத் தவறினால் மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து எவரும் தப்பிட இயலாது.

கேரள மாநிலத்தில் பெரும் ஊழல் முறைகேட்டிற்கும் – முறைகேட்டைத் தட்டிக் கேட்ட பொறியாளர் தற்கொலைக்கும் காரணமான யோக்கியர்தான் – அந்த யோக்கிய சிகாமணிதான் – இன்றைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.

இவர்தான் அந்த யோக்கியர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button