கட்டுரைகள்

செவிலியர் போராட்டம் ஓயாது!

சுஜாதா

திமுக ஆட்சியில் போராடிய செவிலியர்களிடம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பேசிய ஆதவ் அர்ஜுனா சொன்னார், “நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம், போராட்டத்தில் பங்கேற்றுள்ள உங்கள் மீது சிறு கீறல் ஏர்ப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்” என பேசினார்.

த.வெ.க ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பணி நிரந்தரம் கேட்டு போராடிய செவிலியர்களை அடித்துக் கைது செய்துள்ளது விஜய் அரசு. அம்மாவோடு உடன் இருந்த சின்னக் குழந்தையின் கன்னம் பழுக்க மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். பொதுக் கழிப்பிடத்தை யாரும் பயன்படுத்தாவண்ணம் பூட்டப்பட்டு இருக்கிறது. போராட்டம் நடக்கும் இடத்தில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சொன்ன அமைச்சர்கள் வருவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சர்களும் வரவில்லை, அதிகாரிகளும் வரவில்லை. மாற்றம் தருகிறேன் என்று கூறிய முதலமைச்சரும் வரவில்லை. போராட்டம் தொடர்கிறது.

மருத்துவமனையின் வாசலில் நோயாளியின் உறவினர்கள் பதற்றத்துடன் நிற்கும்போது, நோயாளியின் படுக்கையருகில் நம்பிக்கையுடன் நிற்பவர் செவிலியர். மருத்துவரின் சிகிச்சைத் திட்டத்தைச் செயல்படுத்துவது முதல், நோயாளியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது வரை மருத்துவச் சேவையின் அத்தியாவசியப் பொறுப்புகளைச் செவிலியர்கள் மேற்கொள்கின்றனர். இரவு, பகல் பாராமல், விடுமுறை நாட்களிலும், அவசர நேரங்களிலும் பணியாற்றும் இவர்களின் உழைப்பு மருத்துவத் துறையின் அடித்தளமாக உள்ளது.

ஆனால், மக்களின் உயிரைக் காக்கும் இந்தத் தொழிலாளர்களின் சொந்த வாழ்க்கை இன்னும் பாதுகாப்பற்றதாகவே இருப்பது வேதனைக்குரியதாகும். நிரந்தரப் பணியிடங்கள், உரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு, விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காகவே செவிலியர்கள் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமாகத் தேவைப்படும் பணிகளுக்கே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. பணியின் தன்மை நிரந்தரமானதாக இருக்கும்போது, பணியாளரின் நிலை மட்டும் ஏன் தற்காலிகமாக இருக்க வேண்டும்?

செவிலியர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகளில் பணி நிரந்தரம் முதன்மையானதாக உள்ளது. அதோடு, சம வேலைக்கு சம ஊதியம், உரிய ஊதியம், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகைகளை வழங்குதல், பதவி உயர்வு, பணிப்பாதுகாப்பு, மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம்பெறுகின்றன. இவை ஆடம்பரமான கோரிக்கைகள் அல்ல; பல ஆண்டுகளாக மருத்துவச் சேவையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள்.

செவிலியர்களின் போராட்டம் என்பது தனிப்பட்ட ஊதியப் பிரச்சினை மட்டுமல்ல. அது தமிழகத்தின் பொதுச்சுகாதார அமைப்பின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது. அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லாதபோது, ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. நீண்ட நேரப் பணி, தொடர்ச்சியான இரவுப்பணி, குறைந்த ஓய்வு போன்றவை பணியாளர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதன் தாக்கம் மருத்துவச் சேவையின் தரத்திலும் பிரதிபலிக்கக்கூடும்.

செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும், “பரிசீலிக்கப்படும்”, “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற வார்த்தைகள் பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது அவர்களுக்கு மட்டுமல்ல; அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கும் நன்மை தரும். பணிப் பாதுகாப்புடன் பணியாற்றும் செவிலியர் நோயாளிகளுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்க முடியும்.

எனவே, செவிலியர்களின் போராட்டத்தை வெறும் ஊதியப் பிரச்சினையாக ஆட்சியாளர்கள் பார்க்கக் கூடாது. இது தொழிலாளர் உரிமை, சமூகநீதி, பொதுச்சுகாதாரம் ஆகிய மூன்றுடனும் பின்னிப் பிணைந்த பிரச்சினை.

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தப் பணிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் உரியவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களின் வாழ்க்கையே பாதுகாப்பற்றதாக இருந்தால், அந்த சமூகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும்?

செவிலியர்களின் குரலைக் கேட்போம்.
அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்.
போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்!
மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்போம்!

-கட்டுரையாளர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்
திருவாரூர் மாவட்டச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button