ஆதி திராவிட, பழங்குடி மக்களுக்கான சமூக முன்னேற்றத் திட்டங்கள் எங்கே?
சட்டப்பேரவையில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் – சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 27.8.2026 அன்று நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார். அவை வருமாறு:
வயது வரம்பு நீட்டிக்கப்பட வேண்டும்
“சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் தேர்வை 2026லிருந்து 2027க்கு தள்ளி வைத்துள்ளனர் . 2026ல் தேர்வெழுத காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். 2027ல் வயது வரம்பால் அவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும். எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை நலன் கருதி, வயது வரம்பில் 2 ஆண்டுகளாவது நீட்டிப்புப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பருவ காலப் பணியாளர்களாக 15 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்கள், பணி நிரந்தரமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களோடு கணினி இயக்குபவர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் விபி-ஜி-ராம்-ஜி என்று மாற்றப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தில் கணினி இயக்குபவர்களாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக வந்தவர்கள், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறு குறு நிறுவனங்கள் 3 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் 34 ரூபாயிலிருந்து 174 ரூபாய் மின்சார நிலைக்கட்டணம் என்று அறிவித்தனர். அந்த 174 ரூபாய் நிலைக்கட்டணம் சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. மின்சாரத்துறையில் பீக்ஹவர் கட்டணம் என்றும் உயர்த்தியிருக்கிறாரகள். லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பாக இருக்கின்ற சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு அந்த நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
பணியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் குறைந்த நபர்கள்தான் பணியாற்று கின்றனர். அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
குடிநீர் வழங்கல் துறையில், கிராமப்புறமாக இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும் தரநிர்ணயம் செய்து குடிநீர் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணியை பொதுசுகாதாரத்துறைதான் செய்துகொண்டிருந்தது. அதில் பணியாற்றிக்கொண்டிருந்த 126பேரை பணியிலிருந்து விடுவித்துவிட்டார்கள். அதனால், குடிநீரின் தரத்தைக் கண்டறிகின்ற வல்லுநர்கள் இப்போது பணியில் இல்லை. குடிநீர் தர நிர்ணயம் செய்கிற வேதியியல் ஆய்வக ஆய்வாளர்களை- பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் புறவழிச்சாலை-2க்கான நில எடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்துகொண்டிருக்கிறது. இந்த புறவழிச்சாலை-2 திட்டம் விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
விவசாயத்தைப் போல், தென்னை விவசாயமும் மிகச்சிறப்பாக நடைபெறுகிற பகுதி எங்கள் பகுதி. குறிப்பாக தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்பவானோடை, கற்பகநாதர்குளம், இடும்பாவனம் பகுதிகளில் தென்னை விவசாயம் மிக முக்கியப் பங்காற்றுகின்றது. அதற்கான மதிப்புக் கூட்டுத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். தென்னை உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டும் வகையிலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அடிப்படையில் தொழிற்சாலைகளை உருவாக்கித் தரவேண்டும்.
தனித்துவமான திட்டங்கள் இல்லாதது ஏன்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம், அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, மக்களுடைய பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டிற்காகவும், சுரண்டல்களிலிருந்தும், சாதியச் சுரண்டல்களிலிருந்தும் மக்கள் விடுபட வேண்டும் என்பதுதான். இதனை அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவு குறிப்பிடுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதை 46ஆவது சட்டப்பிரிவு உறுதிப்படுத்துகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையாக உட்கூறு சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நலத்திட்டங்களுக்கு என பொதுவாக நிதி ஒதுக்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் 20 சதவீதமாக உள்ள ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு என 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் சமூக நீதிக்கு மைல்கல்லாக ஒரு சட்டம் நிறைவேற்றித் தந்தார்கள். அதுதான் சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் செயல் மேம்பாட்டு திட்டத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் 2024. இதுவரை திட்டங்களாக இருந்த காரணத்தினால், இதுவரை அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாத காரணத்தாலும், அதை சட்டமாக உருவாக்கி விட்டார்கள். அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கு சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமாக 43 செயலாக்கத்துறைகள் செயல்படுகின்றன. இந்த 43 செயலாக்கத்துறைகளுக்கும் ஆதிராவிடர், பழங்குடியினருக்கான நிதி 25 ஆயிரம் கோடி ரூபாய் பிரித்து அனுப்பப்படுகிறது.
ஆனால், மாநில வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் அப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று, பழங்குடியின மக்களுக்கு என்று ஒரு தனித்துவமான திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சட்டம் இருக்கிறது. நிதி ஒதுக்கீடும் இருக்கிறது. அதைச் செயல்படுத்துவதில் என்ன தேக்கம் இருக்கிறது என்பதை ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை, அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி 25ஆயிரம் கோடியில் என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன? தனித்துவமான திட்டங்கள் எவை? யார்யாருக்கு எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன? எப்படிப்பட்டவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, சமூக முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று எந்த விளக்கமும் இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில்தான் மிகப்பெரிய தேக்கம் இருக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை நீங்கள் பின்பற்ற வேண்டும். அந்த சமூக மக்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
பழங்குடியின மாணவர்களை பொருளாதாரத்தில், கல்வியில் உயர்த்துவதற்காக, அவர்களை நிலப்பரப்புக்கு அழைத்து வந்து, கல்விச் சுற்றுலா, வேலைவாய்ப்பு என்று சிறப்பாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வன உரிமைச் சட்டம் என்ன ஆனது?
பழங்குடியினரின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் 2006ல் ஒரு சட்டம்-வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் வந்தபோது, அந்தத் துறை அமைச்சர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், “ஆதிவாசிகளின் இன்னல்களெல்லாம் இன்றோடு தீர்ந்துவிடும்” என்று சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசினார்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு வருசநாடு, மேகமலை போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று வன உரிமைச் சட்டம் இருக்கிறது.
அரசாங்கம் வன பாதுகாப்புச் சட்டத்தைப் பேசுகிறது, நீதிமன்றம் வனப் பாதுகாப்புச் சட்டத்தைப் பேசுகிறது. பேச வேண்டிய ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் வன உரிமை பற்றி எதுவுமே பேசாமல் இருக்கிறதே என்று கவலையை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
காடுகளுக்கு உரிமை இருக்கிறது, தாவரங்களுக்கு உரிமை இருக்கிறது, அங்கே இருக்கிற விலங்குகளுக்கு உரிமை இருக்கிறது. நிலத்துக்கு உரிமை இருக்கிறது. பழங்குடி மக்களுக்கு 2006 வன உரிமைச்சட்டத்தின்படி உரிமைகளும் இருக்கிறது. ஆனால், அவர்களும் ஆக்கிரமிப்பாளர்கள்தான் என்று நீதிமன்றத்தில் அதிகாரிகள் சொல்கின்றனர்,
ஆதிவாசிகள், பழங்குடிகள் எந்தச் சொத்தையும், யாருடைய சொத்தையும் அபகரிக்கிறவர்கள் அல்ல. மனித வாழ்வில் நேர்மையான நெறியைக் கடைப்பிடிக்கும் பழங்குடி மக்கள் கள்ளம், கபடம் இல்லாதவர்கள். அவர்களை நீங்கள் வனத்திலிருந்து வெளியேற்றினால், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கே போவார்கள்?
சீராய்வு மனுவை அரசாங்கம் தாக்கல் செய்கிறதோ இல்லையோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம் மேல்முறையிடு செய்ய வேண்டும்.
வன உரிமைச்சட்டத்தின்படி, அரசமைப்புச் சட்டத்தின்படி, அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பதனை நீதிமன்றத்தில் நின்று அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் அந்த சட்டத்துக்கான மகத்துவம். அதுதான் சமூக நீதி. அந்த நீதியைத்தான் நம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு ரத்தசோகை
பழங்குடி மக்கள் வேட்டையாடு கிறவர்கள், புலால் உண்ணுகிறவர்கள், புரதச்சத்து அதிகமாக உண்ணுகிறவர்கள். வேட்டைத் தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கே இருக்கிற எங்கள் பெண் பிள்ளைகள் நல்ல சத்தான உணவு இல்லாமல் ரத்தசோகையுடன் இருக்கிறார்கள். எங்களுடைய குழந்தைகளெல்லாம் சத்தான உணவில்லாமல் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.
பல மாநிலங்களில் அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை ரேசன் கடைகள் மூலம் வழங்கி அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. பழங்குடி மக்களுக்கான உணவு வகையிலும் நீங்கள் உறுதிப்படுத்தித் தர வேண்டும்.
நீண்டகால சிறைவாசிகளுக்கு முன்விடுதலை
சிறுபான்மையின மக்களில் 25ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசி களாக இருக்கிறார்கள். அவர்களில் சிறுபான்மை மக்களும் இருக்கிறார்கள், மற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி நீண்ட காலமாக சிறையில் இருக்கிறவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சட்டப்படியான முன்விடுதலை அல்லது சட்டப்படியான பரோல் – எது சாத்தியமோ அதை அரசமைப்புச் சட்டத்தின் வழியில் நின்று, இந்த அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும்.
பள்ளிவாசல்கள் ஏழ்மையான நிலைகளில்தான் இருக்கின்றன. கிறிஸ்தவ மக்கள் கல்லறைகள் இல்லாமல் இருக்கிறார்கள். சிறுபான்மை முசுலீம் மக்களுக்கு கபர்ஸ்தான் என்கிற அடக்கத்தலம், கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் இல்லாமல் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்ட வசதிகளையெல்லாம் நாம் பின்பற்றி, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்று சில சலுகைகளை வழங்குகிறோம். வக்ஃபு வாரியத்துக்குள் வராதிருக்கிற பள்ளிவாசல்களுக்கு கபர்ஸ்தான் என்கிற அடக்கத்தலம், அதற்கான சுற்றுச்சுவர் மற்றும் பாதையையும், கல்லறைத் தோட்டத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் அரசு கனிவோடு செய்து கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பேசினார்.