மானியக் கோரிக்கைகள் மீது க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பேச்சு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீதி – சிறைகள் – சட்டம் – எரிசக்தி – சிறப்புத் திட்டங்கள் -அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது 21.8.2026 அன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. உரையாற்றினார். அவை வருமாறு:
“அமைச்சர்கள் முன்மொழிந்திருக்கிற மானியக் கோரிக்கையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருத்துகளை முன்வைக்கிறேன்.
இந்துசமய அறநிலையத்துறை
தமிழ்நாட்டில் இருக்கிற 41,364 திருக்கோயில்கள், திருமடங்கள், சமணக் கோயில்களும், 4,78,000 ஏக்கர் நஞ்செய், புஞ்செய் நிலங்களும் இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பதவியேற்ற 3 மாதங்களில் 10ஆயிரம் ஏக்கர் நஞ்செய், புஞ்செய் ஆக்கிரமிப்பு நிலங்கள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்திருக்கிறது. பெருமையாக இருக்கிறது.
அதில் உள்ள இன்னொரு குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறேன். 1959/34/ஏ-ன் கீழ் நாங்கள் நியாயமான வாடகையைக் கோயில்மனையில் குடியிருப்போருக்கு வசூல் செய்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கோயில் நிலங்களில் பல லட்சம் பேர் குடியிருக்கின்றனர், இந்த ‘34-ஏ’ சட்டப் பிரிவுக்கு எதிராக நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ‘34-ஏ’ என்பது நியாயமான வாடகை அல்ல, அநியாயமான வாடகை. இதுகுறித்து இதே சட்டமன்றப் பேரவையில் பல முறை பேசியிருக்கிறோம்.
முன்பிருந்த அறநிலையத்துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம், அன்றைய முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அன்றைய தலைமைச் செயலாளரின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஒரு முழுமையான விசாரணையை நடத்தியது. இந்த ‘34-ஏ’ என்பது நியாயமான வாடகை இல்லை என்று அந்தக் குழு அரசாங்கத்திற்கு அறிக்கை தந்திருக்கிறது. இவற்றை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து, இனாம் நிலம் சம்பந்தமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இனாம் நிலம் என்பது கோயிலுக்கு சொந்தமான நிலம் அல்ல. கோயிலில் பணியாற்றுபவர்களுக்காக மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள். 1963ல் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இதற்கென சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, யாரெல்லாம் இனாம் நிலத்தை பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு அரசு ரயத்துவாரி பட்டா வழங்கியது. அப்பொழுது பட்டா வாங்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் நிலம் இருக்கிறது. இப்படி ரயத்துவாரி பட்டா பெற்ற நிலங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆட்சேபணை மனுக்களை பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
இந்த அரசு கரூர் மாவட்டத்தில் இனாம் நிலத்தைக் கண்டுபிடித்து, உரிய நபர்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள். இதற்கு மனதாரப் பாராட்டுகிறேன். கரூர் உடன் நின்றுவிடாமல், தமிழ்நாடு முழுவதும் இந்தப் பணியை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் தொகுதியில் கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு ஒரு திருத்தேர் வழங்கப்பட வேண்டும்.

எரிசக்தித்துறை
எரிசக்தித்துறை கொள்கை விளக்கக் குறிப்பையும், வெள்ளை அறிக்கையையும் படித்தேன்.
3 ஆயிரம் கோடி லாபத்தில் இருந்த எரிசக்தித்துறை, இன்றைக்கு 2 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கிறது, அதேநேரத்தில் 64ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.
மின்சாரத் துறையில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் எந்தப் பதிவும் இல்லாமல் அன்றாடக் கூலியாகப் பணியாற்றுகின்றனர். அவர்களை பற்றி வெள்ளை அறிக்கையிலும் எதுவும் சொல்லாமல் அமைச்சர் விட்டுவிட்டார் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்பதையும், டிஎன்பிஎஸ்சி மூலம் 16ஆயிரம் பேரைத் தேர்வு செய்யப்போகிறோம் என்றும் கூறியிருக்கிறீர்கள்.
ஒப்பந்தத் தொழிலாளராகக்கூட இல்லாமல் அற்றைக் கூலிகளாக களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களில் திறமையானவர்களைக் கண்டறியுங்கள். அவர்களுக்கு எப்படித் தேர்வு வைக்க முடியுமோ, அப்படி தேர்வு வைத்து அந்த 64ஆயிரம் காலிப் பணியிடங்களில் நிரப்புங்கள். அடுத்து, ஐடிஐ படித்த 9,600 பேர் அப்பரண்டிஸ் முடித்திருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மின்சார வாரியம்
கடன்சுமையில் மின்சார வாரியம் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறோம் என்றும் சொல்கிறீர்கள்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துமாறு ஒன்றிய அரசு மின்வாரியத்தையும், தமிழ்நாடு அரசையும் நிர்பந்தம் செய்கிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்த 475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
மாநில அரசு கொடுக்கின்ற மானியம் வெறும் 12 கோடி ரூபாய்.
இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதைத் தனியாருக்குக் கொடுப்பதை விட்டுவிட்டு, ஒப்பந்தப்பணியாக இருந்தாலும் மின்வாரியப் பணியில் அவர்களை நேரடியாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு இந்தப் பணியைக் கொடுப்பீர்களேயானால், அதற்கான செலவு வெறும் 175 கோடி ரூபாய்.
மீதி இருக்கிற 300 கோடி ரூபாய் மின்சார வாரியத்துக்கு லாபமே, கடன் சுமையிலிருந்து குறையும்.
மின்சாரம் கொள்முதல் செய்வதில்தான் பிரச்சினை என்று சொல்கிறீர்கள். சூரிய ஒளி, காற்றாலை மூலம் வாங்குகிற மின்சாரத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. உற்பத்திச் செலவைவிட அதிகமாகிறது என்று சொல்கிறீர்கள்.
மின்சார உற்பத்தியில் 4 சதவீதத்தில் ஒன்றரை சதவீதம்தான் அரசு உற்பத்தி செய்கிறது. ஏன் 4 சதவீதத்தையும் அரசே உற்பத்தி செய்ய நம்மிடம் கட்டமைப்பு இல்லையா? வளம் இல்லையா? மின்சாரத்துறையில் அதற்கானப் பணிகளை நாமே ஏன் செய்யக் கூடாது?
4 லட்சம் பேர் இலவச மின்சாரத்துக்காகப் பதிவுசெய்து விட்டு, எப்பொழுது கிடைக்கும் என ஏங்கி நிற்கிறார்கள். 2 லட்சம் பேர் தட்கல் முறையில் 1500 கோடி ரூபாய் பணமும் கட்டிவிட்டார்கள், எப்பொழுது மின்சாரம் வரும் என்று காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்தார்கள். இந்த அரசு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்திருக்கிறது. இதற்கு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள், மின் கட்டணம் மிக அதிகமாக வருகிறது என்று சொல்கின்றனர். இதை அரசு உன்னிப்பாகக் கவனித்து சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆட்சியிலும் 100, 200, 300 துணை மின்நிலையங்கள் என அறிவிக்கிறீர்கள். நீங்களும் அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், அந்தத் துணை மின்நிலையங்களின் பராமரிப்பை ஏன் தனியாரிடம் கொடுக்கிறீர்கள்? அரசே செய்ய வேண்டியதுதானே?
சட்டத்துறை
சட்டத்துறை அமைச்சரின் கொள்கை விளக்க குறிப்பையும் பார்த்தேன். 1957ல் ஆட்சி ஆட்சி மொழி சட்டம் வந்திருக்கிறது. 1972ல் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வந்த்து. 1982ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழியாக வந்துவிட்டது.
இதே சட்டமன்றத்தில், 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் இந்தி ஆட்சி மொழியாக இருக்கிறது, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் இருக்கிறது. அதேபோன்று தமிழ்மொழியும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக வேண்டும்.
கீழமை நீதிமன்றங்களில் ஈ-ஃபைலிங் முறையைக் கொண்டுவருகிறீர்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதற்கான கட்டமைப்பு இருக்கிறதா?
ஒரு வழக்குரைஞர் ஒரு வழக்காடிக்காக ஈ-ஃபைலிங் முறையில் உடனடியாகப் பதிவு செய்ய முடியுமா? கட்டமைப்பையும் உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கிறோம்.
வழக்குரைஞர் பணி என்பது மிகவும் நெருக்கடியான பணி. தொழில் ரீதியான நெருக்கடிகள் இருக்கின்றன. எனவே, தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.” – இவ்வாறு சட்டப்பேரவையில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. உரையாற்றினார்.