தமிழகம்

காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம்

டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சுற்றுலா மற்றும் கலை, பண்பாட்டுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசினார். அவை வருமாறு:

நீர் மேலாண்மைத் திட்டம்

புவியியல் ரீதியாக தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறை மாநிலம். நீர் உரிமைக்காக காவிரி, தென்பெண்ணை, பாலாறு, முல்லைப் பெரியாறு என எந்த ஆறாக இருந்தாலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை நம்பியிருக்கிறோம்.

சட்டப்படி நமக்கு வழங்க வேண்டிய நீரைத் தர அண்டை மாநிலங்கள் மறுக்கின்றன. சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டி நம்முடைய நீர் உரிமையைப் பெற வேண்டியிருக்கிறது. ஆகவே, நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை, வடமேற்குப் பருவமழை சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 950 மி.மீ. அளவில் மழை பெய்கிறது. இந்த மழைநீரை 150 டி.எம்.சி. வரை நாம் சேமிக்க முடியும்.

தமிழ்நாட்டில் 25ஆயிரம் குளம், குட்டை, ஏரிகள் உள்ளன. அவை ஆக்கிரமிக்கப்பட்டு தூர் வாராமல் இருக்கின்றன. குளம், குட்டை, ஏரிகளைத் தூர்வாரினால், நாம் 150 டிஎம்சி தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். ஆகவே, அந்த நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் சேகரிப்பு இயக்கம்

மழைநீர் சேகரிப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக நாம் முன்னெடுக்க வேண்டும். அது வீடுகளாக இருந்தாலும், தொழிற்சாலைகளாக இருந்தாலும், அரசுக் கட்டடங்களாக இருந்தாலும் அதற்கான அனுமதி வழங்கும்போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நிறைவேற்றினால்தான் அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்து, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சமூக இயக்கமாக அரசு எடுத்துச்செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக 1,458 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 20 ஆண்டு காலமாக உள்ள இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன். அவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நல்அறிவிப்பை அமைச்சர் வெளியிட வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணேகொள்புதூர் பாசனத் திட்டம் கொண்டுவரப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்ற இந்தத் திட்டத்துக்கு கடந்த கால ஆட்சியிலே 275 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நில எடுப்புக்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படாததால் 39 சதவீதப் பணிகளுடன் இந்தத் திட்டம் தடைபட்டிருக்கிறது.

எனவே, நில எடுப்புக்காக 70 கோடி ரூபாயும், பாசனத் திட்டத்தைத் தொடர கூடுதலாக 150 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி அந்தத்திட்டத்தை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே தொரப்பள்ளி என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நீரேற்றுப் பாசன முறை (லிஃப்ட் இரிகேஷன்) மூலமாக கார்காண்டபள்ளி, பைரமங்கலம், கெலமங்கலம், நாகமங்கலம், உத்தனபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்துக்கு திட்ட அறிக்கைத் தயாரிக்கப்பட்டு, கடந்த 15, 20 ஆண்டுகளாக பணிகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தத் திட்டத்தையும் அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நந்திமலையில் உற்பத்தியாகி வருகின்ற தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா யார்கோல் என்ற இடத்தில் தடுப்பணை கட்டி இருக்கின்றது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு 222 கி.மீ. தூரம் பயணிக்கிறது. ஆந்திராவில் 33 கி.மீ. தூரம் பயணிக்கிறது. அந்த 33 கி.மீ. தூரத்தில் ஏற்கெனவே பாலாற்றில் 20 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 500 மீட்டருக்கொரு தடுப்பணை கட்டப்பட்டு பாலாறு வெறும் பாலைவனமாக மாறியிருக்கிறது.

ஆகவே, 222 கி.மீ. தூரத்தில் குறைந்தபட்சம் 20 கி.மீ. தூரத்துக்கொரு தடுப்பணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய அரசின் இரட்டை வேடம்

காவிரி குறித்து காரசாரமான விவாதங்கள் இந்த அவையில் நடந்தது. காவிரி என்பது தமிழர்களுடைய வாழ்வுரிமை. அந்த வாழ்வுரிமையைக் காப்பதற்காகத்தான் எல்லா அரசியல் கட்சிகளும் காரசாரமான விவாதத்தை நடத்தி இருக்கிறார்கள்.

காவிரியில் அணை கட்டியே தீருவோம் என்று, கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் – காங்கிரசாக இருக்கட்டும், பாஜகவாக இருக்கட்டும், மதச்சார்பற்ற ஜனதாதளமாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் தேர்தல் அரசியலுக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று சொல்லுகிறார்கள்.

உறுதியோடு சொல்கிறோம், மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட கர்நாடக அரசு எடுத்துவைக்க முடியாது. ஏனென்றால், 2007 நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது.

கடைமடை மாநிலங்களான தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளத்தின் அனுமதி இல்லாமல் முதல் மடை மாநிலமான கர்நாடகா எந்த கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று சொல்லி, இந்தத் தீர்ப்பு 2033வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் தீர்ப்பை 4 மாநிலங்களும் ஏற்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இருக்கும்போது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்கும்போது, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சொல்கிறார், “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரமாட்டோம்” என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால், கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா சொல்கிறார், “மத்திய அரசு மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட அனுமதி கொடுக்கும் திட்டம் எங்களிடத்தில் இருக்கிறது” என்று சொல்கிறார்.

ஆகவே, ஒன்றிய அரசு காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இரு மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பிரச்சினை வந்தால், ஒன்றிய அரசு நடுநிலைமையோடு இருந்து சார்புநிலை இல்லாமல் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் எதிராக செயல்படுகிறது என்பதை இந்த மன்றத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன்.

ராசி மணலில் அணை

காவிரி அன்னை கர்நாடகாவைத் தொடர்ந்து காலெடுத்து வைக்கின்ற தொகுதி என்னுடைய தளி தொகுதி. பிலிகுண்டுவில்தான் நமக்கு வழங்கப்படுகின்ற 177.25 டிஎம்சி தண்ணீரை அளவிடுகிறோம். அந்த பிலிகுண்டு என்னுடைய தொகுதியில் இருக்கிறது. அதற்கு அடுத்துதான் ராசிமணல் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் காலத்திலேயே ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, திட்டம் நிறைவேறி இருக்கிறது. ராசி மணலில் அணை கட்டுவதை கர்நாடக விவசாயிகளும் எதிர்க்கவில்லை.

ஏனென்றால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், மாண்டியா மாவட்டத்தில் இருக்கிற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். ராசி மணலில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு விவசாயிகளுக்கும், கர்நாடகா விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது. ஆகவே ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை நம்முடைய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாமேதை காரல் மார்க்ஸ் கூறினார், “ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உயர்ந்து நிற்கிற கட்டங்களின் அளவீடு அல்ல, ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது கடைக்கோடி கிராமத்தில் இருக்கின்ற ஏழை,எளிய விவசாயி, தொழிலாளி, பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுடைய சமூக பொருளாதார மேம்பாட்டின் அளவீடு” என்று சொன்னார்.

அவ்வாறு இருக்கும்போது, நம்முடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. பணிகளெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் தேங்கிக் கிடக்கின்றன. ஆகவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தலைக் காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிதி தராத ஒன்றிய அரசு

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஃபுளோரைட் அதிகமாக இருப்பதால், ஃபுளோரசிஸ் என்ற நோய் ஏற்பட்டு, பல் சிதைவு, எலும்புச் சிதைவு, மூட்டுவலி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

ஆகவேதான், அந்த இரண்டு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்குவதற்காக 2008ல் திமுக தலைமையிலான அரசு அன்றைக்கு 1928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் பல குடியிருப்புகள் விடுபட்டன, சுமார் 12,622 குடியிருப்புகள் விடுபட்டு விட்டன. இதற்காக 2025ஆம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூன்றாவது கட்டத்துக்காக (Phase-III) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசு ஜல்ஜீவன் திட்டத்தில் அதற்கான தமது பங்கை செலுத்தாத காரணத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்ட மூன்றாவது கட்டப் பணிகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆகவே, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் ஒன்றிய அரசைத் தொடர்புகொண்டு, ஜல்ஜீவன் திட்டத்தில் மூன்றாவது பணிகளுக்காக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட அந்த நிதியை விடுவித்து, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்க இந்த அரசு முன்முயற்சி எடுக்க வேண்டுமென்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்.” – இவ்வாறு டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button