கட்டுரைகள்

மாணவர்கள் போராடக் கூடாதா? யாருடைய நலனுக்காக இந்த அடக்குமுறை?

வ.மணிமாறன்

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள், போராட்டங்கள், கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுப்பது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

“அறியாமல் தெரியாமல் நடந்துவிட்டது”. “சுற்றறிக்கை திரும்பப்பெற்றாகி விட்டது”. “வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார்” என்று அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இவை குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

14.08.2026 தேதியிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் சுற்றறிக்கை வெளியானது. மிக அவசரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், “சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 28.07.2026 அன்று கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் மாணாக்கர்கள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன்படி செயல்பட வேண்டும்” என்று உயர்கல்வித்துறை செயலாளரின் சுற்றறிக்கை உத்தரவிடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் 18.08.2026 அன்று வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரிகளை சேகரித்து அனுப்புமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இதுவும் வெளியாகி சர்ச்சையானது. சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

சட்டப்பேரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதில், “உயர்கல்வித்துறை இயக்குநரகம் உரிமைக்காகப் போராடும் இடதுசாரி மாணவர்களை இனம்கண்டு அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. உரிமைக்காக போராடும் சுதந்திர நாட்டில், இப்படி சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளலாமா?” என்று க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “குஜிலியம்பாறை வட்டாட்சியர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதத்தை எழுதிவிட்டார். எனக்கு தகவல் தெரிவித்தவுடன் அவரை (19.08.2026 அன்றே) பணியிட மாற்றம் செய்துவிட்டோம்” என்று கூறினார்.

இதனையடுத்து விளக்கம் அளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், “மாணவர்களின் போராட்டம் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்லப்பட்டது. மாநில அளவில் சில நேர்வுகளில் நடைபெறும் போராட்டங்களில் ஒழுங்கு அமைதி பராமரிக்க வேண்டியது குறித்த கடிதம், கடந்த 17.8. 2026 அன்று உயர்கல்வித் துறையின் மூலம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் எடுக்கவேண்டிய ஒழுங்கு அமைதி குறித்து 20.08.2026 க்குள் அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழுந்தது.

அனைத்து அரசு கல்லூரிகளின் கல்விச் சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதை முன்னிட்டு அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தவறுதலாக சில வாசகங்கள், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அதை அறிந்த கல்லூரி இயக்குநரகம் உடனடியாக அந்த சுற்றறிக்கையினை திரும்பப் பெற்றது. இந்த அரசுக்கு அனைத்து மாணவர்களின் உரிமையையோ, இளைஞர்களின் உரிமையையோ கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை” என்று கூறினார்.

“தவறுதலாக சில வாசகங்கள் இடம்பெற்றுவிட்டன”. “வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதிவிட்டார்”. என்று இரண்டு அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். உண்மை வெளிவந்துவிட்டது என்பதால், சமாளிப்பதற்காக அவர்கள் கூறியவைதான் இவை.

ஆனால், “கல்வி நிறுவனங்களில் எடுக்கவேண்டிய ஒழுங்கு அமைதி குறித்து 20.08.2026க்குள் அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழுந்தது” என்றும், “அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் கல்விச் சூழல், ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வது” என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது முக்கியமானதாகும். இந்த இரண்டு கருத்துகள் குறித்தும் பார்க்கலாம்.

20.08.2026க்குள் அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை – என்று குறிப்பிடுவது எதனை?

14.08.2026 தேதியிட்ட உயர்கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கையில், “போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தியதன்படி செயல்பட வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, போராட்டங்கள், கிளர்ச்சி களில் மாணவர்கள் பங்கேற்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும், ஈடுபடாமல் தடுக்கவும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தலைமைச் செயலாளர் சாய்குமார் எடுத்த நடவடிக்கைக்கு யார் பொறுப்பு?

இந்தத் தலைமைச் செயலாளர் சாய்குமார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தால் தேடிக் கண்டுபிடித்து நியமிக்கப்பட்டவர். சங் பரிவாரின் கைப்பாவை என்று சொல்லப்படுபவர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தலைமைச் செயலாளர் சாய்குமார் தவிர அத்தனை அதிகாரிகளும் மாற்றப்பட்டு விட்டனர். இவர் பதவிக் காலம் முடிந்து ஓய்வுபெற்ற பின்னரும் பணி நீட்டிப்பு செய்திருப்பது எப்படி? எதற்காக?

அடுத்து, அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் கல்விச்சூழல், ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.

மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது கல்விச்சூழலை, ஒழுங்கு அமைதியை குலைக்கிறது என்ற பார்வை ஜனநாயக அமைப்புக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். அரசியலமைப்புச் சட்டம், மாணவர்கள் மட்டுமல்ல, குடிமக்கள் அனைவருக்கும் அமைதியான முறையில் கருத்துகளை வெளிப்படுத்துவது; போராடுவது அடிப்படை உரிமை என உறுதி செய்துள்ளது.

அதாவது, சட்டப்படியானதாக இருந்தாலும் – கருத்தியல், அமைப்பு, போராட்டம் ஆகியவற்றில் மக்கள் பங்கேற்பதைக் கண்காணிப்பது, அரசு நிர்வாக அமைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் பங்கேற்கவிடாமல் அரசே தடுப்பது என்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிசப் போக்காகும்.

40க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (லேபர் கோட்) சுருக்கி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளும் தொழிற்சங்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. மாணவர் – இளைஞர் அமைப்புகளை முடக்க முனைவதற்கும் அதே நோக்கம்தான் காரணமாகும்.

ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் 17.08.2026 தேதியிட்ட கடிதம் (அ5/1206/2026), வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார இயக்க மேலாளர்கள போராட்டம் தொடர்பானது. அதில், “ஆர்ப்பாட்டம் அல்லது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது கண்டறியப்பட்டால், அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்படும்” என கடிதம் எச்சரித்துள்ளது. ஒப்பந்தப் பணியாளர்களாக இருக்கும் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். அவர்களின் ஒப்பந்தப் பணியும் பறிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இது சங்கம் சேருவது, அரசியல் சட்டம் உத்தரவாதப்படுத்திய உரிமைகளுக்காகப் போராடுவது என்பதையே முடக்குவது பாசிசப் போக்காகும்.

இதே காலத்தில் ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளை ஒழித்து விட்டோம். திமாகி நக்சல்கள் (அதாவது அறிவுசார்ந்த நக்சல் மனப்பான்மை உள்ளவர்கள்) இருந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

நக்சல் மனப்பான்மை என்று பிரதமர் மோடி எதனைக் குறிப்பிடுகிறார்? அநீதிகளை எதிர்ப்பது, உரிமைகளுக்காகப் போராடுவது, கார்ப்பரேட்டுகளுக்காகப் பறிக்கப்படும் வாழ்வியலைக் காத்திடக் குரல் கொடுப்பது போன்றவற்றை நக்சல் மனப்பான்மை என்று அடையாளப்படுத்துகிறார்.

பிரதமர் மோடியின் இந்த உரையில் இடம்பெற்றுள்ள “அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல்” என்ற அரசியல் மொழியை எப்படிக் கடந்து செல்ல முடியும்?

இதற்கும், தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளை அடையாளப்படுத்தி, அவர்கள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்காக காவல்துறை, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதும் ஒரே அரசியல் மொழிதான்.

கார்ப்பரேட் தன்நலக்குழுக்களின் நலனுக்காக அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பறித்து பாசிசத்தைக் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் ஆட்சிக்கு முதலமைச்சர் விஜய்யும் தவெக அரசும் வழிவிட்டிருப்பதால், ஒன்றிய பாஜக அரசின் பாசிச அரசியல் மொழியையே அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர். அதாவது, “அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது; அடக்குமுறையை ஏவி விடுவது” என்ற அரசியல் மொழியை பின்பற்றுகின்றனர். இதைத்தான் தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைகளும் கடிதங்களும் வெளிப்படுத்துகின்றன. இதற்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பதுடன், “அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும்” அடக்குமுறை அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button