கட்டுரைகள்

சுதந்திரப் பிரகடனத்தை செத்த கடிதமாக்கிய அதிபர் டிரம்ப்: பாசிஸ்ட்டுகள் குப்பையில் வீசியெறிப்படுவார்கள்

-வ.மணிமாறன்

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், “நமது நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது” என எச்சரிக்கிறார்.

இதனால் “அமெரிக்க சுதந்திரத்திற்கு மரண அச்சுறுத்தல்… முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், பேர்ல் ஹார்பர் அல்லது 9/11 தாக்குதல் ஆகியவற்றைவிட கம்யூனிசமே மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று அரற்றினார்.

“ஒரு ஜனநாயகத்தில் இத்தகைய கோட்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நீங்கள் கார்ல் மார்க்ஸுக்கு விசுவாசமாக இருக்கலாம் அல்லது அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்கலாம். நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கலாம் அல்லது தேசபக்தராக இருக்கலாம். நீங்கள் இரண்டாகவும் இருக்க முடியாது” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார். “அனைவருக்கும் கேட்கும் வண்ணம் அமெரிக்க குடிமக்கள் கம்யூனிசத்தை விரைவில் வீழ்த்துவார்கள்” என்கிறார் அதிபர் டிரம்ப்.

அதாவது, சோசலிஸ்டுகள் அரசின் எதிரிகள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கால் நூற்றாண்டு காலமாக அமெரிக்கா நடத்திவரும் வெறியாட்டங்களை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்பிவிட டிரம்ப் விரும்புகிறார். அவருடைய இந்தப் பாசிச வசைமொழி இதையே வெளிப்படுத்துகிறது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அமெரிக்க டெமாக்ரேட்டிக் சோசலிஸ்டுகள் – நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி, கோர்டெஸ், ரஷிதா ட்லைப் போன்றவர்கள் – வெற்றி பெற்றுள்ளனர். இப்படி ஒரு சிலர் வெற்றி பெற்றதே பெரும் பில்லியனரும் தொழில் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.

இந்த டெமாக்ரேட்டிக் சோசலிஸ்டுகளுக்கு வாக்களித்த மக்களைத் தான் அதிபர் டிரம்ப் குறிவைக்கிறார். அவர் மட்டுமல்ல, வலதுசாரி ஊடகங்களும் கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவை கைப்பற்றப் போவதாகச் சித்தரிக்கின்றனர்.

டென்வரில் நடந்த ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உள்கட்சித் தேர்தலில் 15 முறை பதவியில் இருந்தவரை ஒரு சோசலிஸ்ட் தோற்கடித்தார். அப்போது கம்யூனிசத்தின் மீது வெறுப்பை டிரம்ப் கக்கினார். நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அதே வெறுப்பு வார்த்தைகளில் பேசினார்.

அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், அமெரிக்க மக்கள் தொகையில் 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு மக்கள் சோசலிசத்தின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சோசலிசத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுவும் டொனால்ட் டிரம்ப்பை அச்சுறுத்துகிறது.

டிரம்பின் இந்தப் பாசிச வசைமொழிக்குப் பதிலளிக்கும் விதமாக, டெமாக்ரேட்டிக் கட்சியின் தலைமை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அவர்கள் குடியரசுக் கட்சியினரின் கம்யூனிச எதிர்ப்பு மனப்பான்மையைப் பகிர்ந்து கொண்டனர். சொல்லப்போனால், முதலாளித்துவ வர்க்கத்தைப் பீடித்திருக்கும் ஆழமான பீதியை பிரதிபலிக்கின்றன.

ஏறக்குறைய 1,000 பில்லியனர்கள் 8.4 டிரில்லியன் டாலர் சொத்துகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அதாவது அமெரிக்க மக்கள்தொகையில் 1 விழுக்காட்டினர், 90 விழுக்காடு மக்களின் சொத்துகளுக்கு சமமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். டொனால்ட் டிரம்ப் இந்த ஒரு விழுக்காடு சுரண்டும் வர்க்கத்திற்காகப் பேசுகிறார்.

இந்த ஒரு விழுக்காடு சுரண்டும் வர்க்கம் இன்றைக்கு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் ஜனநாயக ஆட்சி முறைமையை அகற்றிவிட்டு, பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி தள்ளுகிறது.

இதே நெருக்கடிதான் தொழிலாளர் வர்க்கத்தை, உழைக்கும் மக்களைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுகிறது. இதனைக் கண்டு அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதிபர் டொனால்ட் டிரம்பும் அலறுகின்றனர். கம்யூனிச பூதம் மீண்டும் மக்களைக் கவ்வி விடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதன் வெளிப்பாடுதான் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவு விழாவில் டொனால்ட் டிரம்பின் வெறிப்பேச்சு. இதன் மூலம் சுதந்திரப் பிரகடனத்தில் உள்ள கொள்கைகள் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு செத்த கடிதமாகிவிட்டன என்பதை அறிவிக்கின்றன.

ஒன்றை உறுதியாகச் சொல்வோம், உழைப்பும் உழைப்பாளியும் இருக்கும் வரை, உழைப்புச் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் கம்யூனிஸ்ட்டுகளும் இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, ஜார் போன்ற சர்வாதிகாரிகள், பாசிஸ்ட்டுகள் வருவார்கள். அவர்கள் குப்பைக் கூடைக்கு வீசி எறியப்படுவார்கள். இதுதான் வரலாறு. இதுதான் மனிதகுலம் முன்னேறிச் செல்லும் பாதை. டிரம்ப் போன்ற பாசிஸ்ட்டுகளுக்கும் அதேகதிதான் ஏற்படும். உழைக்கும் வர்க்கம் அதை எழுதும்.

சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிடப்படும் “வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்வது” என்பதற்கான உரிமை, சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய புரட்சிகரப் போராட்டத்தை உழைக்கும் வர்க்கம் முன்னெடுத்துச் சென்று டிரம்புகளுக்கு முடிவு கட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button