கட்டுரைகள்

ஐ.பி.எல்: பல்லாயிரங்கோடி வணிகப் பெருங்கடலும், நுகர்வோராக்கப்பட்ட ரசிகர்களும்

அருண் நெடுஞ்செழியன்

“கண்ணியவான் விளையாட்டு” என புகழப்பட்ட கிரிக்கெட், இன்று பன்னாட்டு பெருநிறுவனங்கள் கல்லா கட்டும் வணிகச் சந்தையாக சுருங்கிவிட்டது.

இன்றைய நவீன கிரிக்கெட்டில் தார்மீக விளையாட்டு அறங்கள் மெல்லக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, ‘எப்படியாவது லாபம் சம்பாதிக்க வேண்டும்’ என்ற பெருநிறுவனப் பேராசையே ஆட்டத்தை ஆட்டிப்படைக்கிறது.

ஒரு விளையாட்டு, இன்று வர்த்தகப் பொருளாகவும், கோடிகள் புரளும் பொழுதுபோக்குக் களமாகவும் உருமாறியுள்ள கசப்பான யதார்த்தத்தின் உச்சக்கட்டமே ஐ.பி.எல்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த 2026 ஐ.பி.எல் போட்டிகள் ஒருவழியாக முடிவிற்கு வந்துவிட்டன. இந்த ஆண்டிற்கான விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது.

அதிகாரக் குவிப்பும் பன்னாட்டு ஆதிக்கமும்

கிரிக்கெட் உலகம் இன்று அதிகார மையங்களின் பிடிக்குள் சிக்கியிருப்பதாகப் பல முன்னாள் சர்வதேச வீரர்கள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அசுர பொருளாதார பலத்தால், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இதன் ஆகச்சிறந்த உதாரணம், இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, எவ்வித பெரிய விளையாட்டுப் பின்னணியும் இன்றி, முதலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார். அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால், போட்டிகளைத் தொடர்ந்து அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடத்துவது விளையாட்டு விமர்சகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. விளையாட்டு அமைப்புகள் அரசியல் வாரிசுகளின் ஆதிக்கக் கூடாரமாக மாறியிருப்பது கிரிக்கெட்டின் தார்மீக அறத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பதினைந்து வயதுச் சிறுவனும் வணிகப் பகடைக்காயும்

விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதை விட, ரசிகர்களை ஈர்த்துப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகவே இளம் வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்கு அண்மைக்கால உதாரணம், பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. மிக இளம் வயதிலேயே ராஜஸ்தான் அணியால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்தச் சிறுவன், களத்தில் காட்டிய அதிரடியால் இந்த ஆண்டின் அதிக ஓட்டங்கள் எடுத்தவருக்கான ‘ஆரஞ்சுத் தொப்பி’ விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆனால், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது, இந்த 15 வயது சிறுவனை சர்வதேச கிரிக்கெட் தலைவர் ஜெய் ஷாவுக்கு அருகில் அமர வைத்து, கேமராக்கள் தொடர்ந்து அவர்களைக் காட்சிப்படுத்திய விதம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது ஒரு சிறுவனின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா அல்லது அந்தப் பிஞ்சுப் பருவத்துச் சிறுவனின் புகழைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் இன்னும் அதிகமான நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான பெருநிறுவனத் தந்திரமா என்ற கேள்வி எழுகிறது.

பிரான்சைஸ் கலாச்சாரமும் முன்னாள் வீரர்களின் விமர்சனமும்

கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்கள் பொறுமையாக அமர்ந்து நீண்ட ஆட்டத்தைப் பார்த்த காலம் மெல்ல மாறி, இன்று பிராந்திய அணிகளுக்கு இடையிலான பிரான்சைஸ் போட்டிகள் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிற போக்கு மேலோங்கியுள்ளது. இந்த பிரான்சைஸ் கட்டமைப்பு கிரிக்கெட்டின் ஆன்மாவையே சிதைத்து வருவதாகப் பல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து வாதிடுகின்றனர்.

“இளம் வீரர்கள் நாட்டின் பெருமைக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தப் பணத்திற்காக மட்டுமே ஆடும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் விளையாடும் போட்டியே ஒரு வீரரின் உண்மையான திறமையையும், பொறுமையையும் சோதிக்கும் களம்; அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக, வெறும் இருபது ஓவர்களில் அதிக ஓட்டங்கள் எடுக்கும் வகையில், மட்டையாளர்களுக்குச் சாதகமாக விதிகளை மாற்றி ஆட்டத்தை வெறும் பொழுதுபோக்குச் சரக்காக மாற்றி வருகிறது அதன் நிர்வாகம்.

விளையாட்டா? வெறும் ‘காணொளிச் சரக்கு’ சந்தையா?

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் விமர்சகருமான ஹர்ஷா போக்லே ஒருமுறை ஆதங்கப்பட்டதை நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் பயணிக்கும் பேருந்துகளுக்குப் பின்னால், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தனி பேருந்தில் ‘ஒளிபடக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக மேலாளர்கள்’ குழுவும் பயணிக்கிறது. சமூக ஊடகங்களில் விருப்பக் குறிகளையும் பகிர்தல்களையும் குவிப்பதற்காக, மைதானத்திற்கு வெளியேயும் வீரர்கள் எப்போதும் கேமராக்களுக்கு முன்னால் நடிக்க வேண்டியுள்ளது. இது வீரர்களை வெறும் ‘வணிகச் சின்னங்களாக’, மனிதர்களைத் தாண்டிய நுகர்வுப் பொருட்களாக மாற்றிவிட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பல்லாயிரங்கோடி புழங்கும் ஐ.பி.எல் வணிகப் பேரரசு

இன்று ஐ.பி.எல் என்பது வெறும் விளையாட்டுப் போட்டி அல்ல; அது பெரும் மூலதனம் புழங்கும் பன்னாட்டு வணிக முதலீட்டுச் சந்தை. இதன் பிரம்மாண்டத்தை அதன் வருவாய் எண்களைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம்:

ஒளிபரப்பு மற்றும் இணையத் திரை வருவாய்: ஐ.பி.எல்-ன் முதுகெலும்பே இதன் இணைய மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள்தான். ஐந்தாண்டு காலத்திற்குச் சுமார் ₹48,390 கோடிக்கு மேல் விற்கப்பட்ட இந்த உரிமம் மூலம், ஒரு போட்டி நடைபெறும் சில மணி நேரங்களில் மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நூறு கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறது.

இணைய வழிப் பார்வையாளர்கள்: முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு இணைய ஒளிபரப்புத் தளங்கள் வழியாக ஒட்டுமொத்தமாக 500 மில்லியனுக்கும் அதிகமான தனித்துவமான பார்வையாளர்கள் இணைய வழியில் போட்டிகளைக் கண்டு களித்துள்ளனர். உலகளவில் ஒரு விளையாட்டு நிகழ்வை இணையத்தில் இத்தனை மில்லியன் மக்கள் பார்ப்பது இதுவே முதன்முறை. மிக முக்கியப் போட்டிகளின் போது ஒரே நேரத்தில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘நேரலையாக’ இணைந்திருந்தனர்.

ஸ்பான்சர் வருவாய்: டாடா குழுமத்தின் முதன்மை ஸ்பான்சர் ஒப்பந்தம் மட்டுமே ஆண்டுக்குச் சுமார் ₹500 கோடி வரை முதலீடு செய்கிறது. இதுதவிர, டிஜிட்டல் பதாகைகள் ,ஆடைகள் என ஆட்டத்தின் ஒவ்வொரு அங்குலமும் விளம்பரப்படுத்தப்பட்டு, ஸ்பான்சர் ஒப்பந்தங்கள் மூலம் மட்டுமே ஒட்டுமொத்தமாக ₹1,000 முதல் ₹1,500 கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

நுழைவுச்சீட்டு விற்பனை வருவாய்: மைதானங்களின் கொள்ளளவைப் பொறுத்து, ஒரு பருவத்தில் நுழைவுச்சீட்டு விற்பனை மற்றும் மைதான விளம்பரங்கள் மூலமாக மட்டுமே சராசரியாக ₹30 முதல் ₹50 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஒட்டுமொத்தப் பருவத்தில் நுழைவுச்சீட்டு மூலம் மட்டும் பல நூறு கோடிகள் புழங்குகின்றன.

சமூக ஊடகங்களும், உளவியலும்

திரை நட்சத்திரங்களின் ரசிகர்களின் சண்டையை விட மோசமான ஒரு வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை தோனி, கோலி, ரோஹித் சர்மா போன்ற தனிநபர்களைச் சுற்றி சமூக ஊடகங்கள் கட்டமைத்துள்ளன. இது அச்சு அசலாக நம் ஊர் திரை உலகில் நடக்கும் ‘தனிநபர் வழிபாடு’ கலாச்சாரத்திற்கு இணையானது.

இதன் கோர முகத்தை அண்மையில் மும்பை அணியில் பார்க்க முடிந்தது. ரோஹித் சர்மா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட போது, சமூக ஊடகங்களில் பாண்டியாவுக்கு எதிராகக் கொட்டப்பட்ட வெறுப்புப் பிரசாரமும், நாய் குறியீடுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தரம் தாழ்ந்த வசைபாடல்களும், விளையாட்டு ரசிகர்களின் உளவியல் எந்தளவுக்கு வக்கிரமாக மாற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஆகச்சிறந்த சான்று. இங்கே ஆட்டமோ, அணியோ முக்கியமல்ல; ‘என் தலைவன்’ மட்டுமே முக்கியம் என்கிற திரைஉலகப் பாணி அடிமை மனநிலையைப் பெருநிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்கின்றன.

தமிழ்நாட்டு அரசியலும் ‘இளம் தலைமுறையினர்’ மீதான ஐ.பி.எல் தாக்குதலும்

சமீபகாலமாக, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஜென் ஜீ எனப்படும் இளம் தலைமுறையினரின் தாக்கம் குறித்தும், அவர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்தும் அரசியல் ஆய்வாளர்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்தத் தலைமுறையினர் எப்படி புதியதொரு அரசியல் அலையை உருவாக்குவார்கள் என்றெல்லாம் கணிக்கப்படுகிறது.

ஆனால், அதே சமூக ஊடகங்களின் துணையோடு, இந்த இளம் தலைமுறையினரின் ‘பொதுப்புத்தியை’ (Commonsense) ஐ.பி.எல் பிரான்சைஸ் நிறுவனங்கள் எந்தளவுக்கு மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து யாரும் வாய்திறப்பதே இல்லை. தமிழ்நாட்டு இளைஞர்களின் சமூகக் கூட்டுணர்வு, பிரான்சைஸ் அணிகளுக்கு இடையேயான போராக (Franchise War) மிக நுட்பமாகத் திசைதிருப்பப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு, வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து விவாதிக்க வேண்டிய இளைஞர்கள், “சென்னை அணியா அல்லது பெங்களூரு அணியா?” என்ற சண்டையில் தங்கள் அறிவையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருநிறுவனங்களின் இத்தகைய திட்டமிட்ட கையாளுதலால், இன்றைய இளம் தலைமுறையினரின் பகுத்தறிவு சிதைக்கப்பட்டு, அவர்கள் சமூக அக்கறையற்ற வெறும் நுகர்வுப் பிராணிகளாக மாற்றப்பட்டு வருவது தமிழகத்தின் சமகால அரசியல் சூழலில் பேசப்படாத ஒரு பெரும் சோகமாகும்.

திரைத்துறையைப் போல் அரசியலாகும் கிரிக்கெட்

தெற்காசிய நாடுகளில் திரைத்துறையும் அரசியலும் எப்படி பிரிக்க முடியாததாக இருந்ததோ, இன்று அந்த இடத்தை கிரிக்கெட் பிடித்துக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் புகழை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் போக்கு அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.உலகக்கோப்பையை வென்று தந்த ஒரே காரணத்திற்காகப் புகழின் உச்சிக்குச் சென்ற இம்ரான்கான், அந்த மக்கள் செல்வாக்கை வைத்தே அந்நாட்டின் பிரதமராகவே உயர்ந்தார்.இந்தியாவிலும் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் போன்றவர்கள் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக மாற்றப்பட்டனர். டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கௌதம் கம்பீர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.அண்மையில் ஓய்வு பெற்ற கேதார் ஜாதவ் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க அமைப்பில் இணைந்துள்ளார். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளராக வலம் வர, அவரது மனைவி ரிவாபா ஜடேஜா அக்கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

விளையாட்டு என்பது சாதி, மத, அரசியல் எல்லைகளைக் கடந்து மனிதர்களை இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்க வேண்டும். ஆனால், திரைத்துறையைப் போலவே கிரிக்கெட்டும் இன்று தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தின் பகடைக்காயாக மாற்றப்பட்டுவிட்டது.

அணி வீரர்களைக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் வாங்குவது, ஊடக வருமானம், ஆதரவாளர் வருமானம், நுழைவுச்சீட்டு மற்றும் இணையச் சந்தா வருமானம் என ஐ.பி.எல் போட்டியைச் சுற்றி ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மூலதனமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த மாபெரும் வணிகச் சக்கரத்தின் மையமாக இருக்கும் சாமானிய மக்கள் வெறும் ‘பார்வையாளர்களாகவும்’, விளம்பரங்களை நுகரும் ‘நுகர்வோர்களாகவும்’ மட்டுமே சுருக்கப்படுகிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சலிப்புகளுக்கு தற்காலிக வடிகாலாக இந்த 4 மணி நேரப் பொழுதுபோக்கு பயன்படுகிறது.

“என் தலைவன் பெருசு, உன் டீம் மட்டம்” என ரசிகர்கள் தங்கள் உணர்வுகளையும், நேரத்தையும் மலிவான சண்டைகளில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சண்டையிடும் ஒவ்வொரு நிமிடமும், பின்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் லாபம் குவிந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button