
வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கல்வி
என்று பழம் புலவர்களால் பாடப்பட்டது. ஆனால் இன்றோ இது களவாடப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய தேர்வு எழுதும் முறையான சிபிஎஸ்இ முறையில், இந்த ஆண்டு 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
தேர்வு முறையில் மாற்றம்
இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் ஒருவருக்கு தனது தேர்வு முடிவில் திருப்தி ஏற்படவில்லை எனில், தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும், இருப்பினும் அதற்கு ஒரு சில நிபந்தனைகளும் உண்டு.
அதேபோல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தத்திலும் இந்த முறை மாற்றம் செய்யப்படுகிறது. டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மாணாக்கர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைத்து, மதிப்பீடு செய்வதை வெளிப்படையாகவும் வேகமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என இந்த மாற்றங்கள் குறித்து ஒன்றிய அரசு சொல்லிக் கொள்கிறது ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை.
தீ விபத்து
கடந்த ஜூன் 1 அன்று, ஒரு அரசு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கல்வி அமைச்சகத்தின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பல செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன. பின்னர், கல்வி அமைச்சகத்தின் அலுவலகங்களில் அல்ல, மாறாக திட்டமிடல் மற்றும் கட்டடக்கலைப் பள்ளியில்தான் தீ விபத்து ஏற்பட்டது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது . ஆனால் அதற்குள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையவழி மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்திருக்குமோ என்று இடதுசாரிகள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களும் சமூக ஊடகங்களும் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியிருந்தன.
பாதிப்புகள்
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுதிய பத்தொன்பது வயது ஹேக்கரான நிசர்கா அதிகாரி, வாரியத்தின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம் போர்ட்டலின் முக்கிய சர்வர்களைத் தன்னால் அணுக முடிந்ததாக மே 22 அன்று கூறினார். பல நேர்காணல்களில், இந்த பாதிப்புகள் குறித்து பிப்ரவரி மாதத்திலேயே அதாவது இது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தளத்தின் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பை வலுப்படுத்தும் அமைப்பான CERT-In-க்கு தான் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் சைபர் பாதுகாப்பு சம்பவங்களுக்கான முதன்மை அரசு நிறுவனம் தனது மின்னஞ்சலை ஏற்றுக்கொண்ட போதிலும், அவற்றில் ஒன்றை தவிர, மற்ற அனைத்தும், சரிசெய்யப்படாமல் இருந்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார் .
‘சிபிஎஸ்இ-யின் திரைவழி மதிப்பிடும் தளத்தில் உள்ள முக்கியப் பாதிப்புகளை அம்பலப்படுத்துதல் அங்கீகாரத் தவிர்ப்பு முதல் முழு கணக்குக் கைப்பற்றல் வரை’ என்ற தலைப்பில் பரவலாகப் பகிரப்பட்ட தனது வலைப்பதிவில், ஒரு குறிப்பிட்ட தேர்வாளராக உள்நுழைவதற்கு, தாக்குபவருக்குத் தேவைப்படுவது, பொதுவெளியில் கிடைக்கக்கூடிய இலக்கின் பயனர் ஐடி மற்றும் பள்ளிக் குறியீடு, மற்றும் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு ஜாவாஸ்கிரிப்ட் கோப்பில் உள்ள முதன்மைக் கடவுச்சொல் ஆகியவை மட்டுமே என்று அதிகாரி குறிப்பிடுகிறார். ஆனால், இது மட்டுமே பாதிப்பு அல்ல என்பது புரிய வருகிறது.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் ஒரே மூலத் தவறிலிருந்துதான் உருவாகின்றன: அதாவது, பயனரின் கணினியில் இயங்கும் நிரலில் இரகசியங்களையும் பாதுகாப்பு முடிவுகளையும் வைப்பதுதான் அந்தத் தவறு,என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மே 31 அன்று, ஆவணங்கள், படங்கள் மற்றும் தரவுகள் போன்ற கோப்புகளுக்கான கிளவுட் சேமிப்பகக் கொள்கலனான அமேசான் வலைச் சேவைகள் (AWS) பக்கெட்டில் சேமிக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைத்தன என்று அதிகாரி X தளத்தில் எழுதியிருந்தார்.
சிபிஎஸ்இ அதிகாரிகள் தங்களது AWS பக்கெட்டைச் சரியாக உள்ளமைக்கவில்லை. அதனால், இப்போது 2026 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களைக் கொண்ட அவர்களுடைய அனைத்து மீடியாக்களையும் நம்மால் பக்கவாரியாகப் பிரித்து பட்டியலிட முடிகிறது,என்றும், அவரது பதிவில் சில விடைத்தாள்களின் ஸ்கிரீன்ஷாட்களும் இடம்பெற்றிருந்தன.
சித்தார்த் ஷர்மா யார்?
12 ஆம் வகுப்பு மாணவர் என்று கூறப்படும் சித்தார்த் ஷர்மா, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கோஎம்ப்ட் எஜூடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “ஏறக்குறைய ஒவ்வொரு ஆன்மார்க் போர்ட்டலிலும்” உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து X தளத்தில் எழுதினார். ஷர்மாவின் வலைப்பதிவின் தலைப்பு ‘சிபிஎஸ்இ-யின் ஆன்மார்க் போர்ட்டல்களுக்குப் பின்னால் உள்ள பொய்களை அம்பலப்படுத்துதல்’ என்பதாகும்.
ஷர்மா X தளத்தில் மாணவர்களின் தரவுகளின் பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ உங்களிடம் பொய் சொல்கிறது. இயல்புநிலை கடவுச்சொற்கள், URL அடிப்படையிலான RCE-கள் மற்றும் மூல MD5 ஹாஷ்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மில்லியன் கணக்கான மாணவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனாலும் டிஜிட்டல் இந்தியாவின் அலட்சியம் கொடி கட்டி பறந்தது என்பதே உண்மை!
ஒப்பந்தப்புள்ளி செயல்முறை ஊழல்
இதற்கிடையில், 17 வயதான சார்த்தக் சித்தாந்த், ஒன்றிய பொது கொள்முதல் இணையதளத்தில் உள்ள டெண்டர் ஆவணங்களை அவர் ஆய்வு செய்ததில், சிபிஎஸ்இ யில் அடுத்தடுத்து நடந்த மூன்று டெண்டர் சுற்றுகளில் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தேவைகளில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், அதன் விளைவாக கோஎம்ப்ட் எஜூடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதன் ஓஎஸ்எம் (OSM) அமைப்புக்கான சேவை வழங்குநராகும் ஏலத்தை வென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
‘கோயெம்ட் எஜூடெக்கிற்கு சாதகமாக சிபிஎஸ்இ விதிகளை எப்படி மாற்றியமைத்தது ‘ என்ற தலைப்பில், சித்தாந்த் மே 29 அன்று தனது வலைப்பதிவை வெளியிட்டார். அதில், “கோயெம்ட் எஜூடெக்கிற்கு சாதகமாக சிபிஎஸ்இ தனது விதிப்புத்தகத்தை திட்டமிட்டு மாற்றியமைத்துள்ளது” என்று தனது X தளத்தில் எழுதியிருந்தார் .
ஒரு புதிய முன்மொழிவுக் கோரிக்கையில் (RFP), முன்பு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த நிறுவனங்களிடமிருந்து ஏலங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்ற பழைய நிபந்தனை, தற்போது கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களிடமிருந்து ஏலங்களைப் பரிசீலிக்க வேண்டும் என ஏன் மாற்றப்பட்டது?
இந்த விவகாரம் கவனத்திற்கு வந்த பிறகு, சிபிஎஸ்இ கோஎம்ப்ட் எஜூடெக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வாய்ப்பிருந்தாலும், அந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் அத்தகைய நிபந்தனை இல்லாததால், அதனை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிடுகிறது .
அறிக்கை கண்டறிவது
ஆகஸ்ட் 28 அன்று வெளியிடப்பட்ட இந்த டெண்டர், தீர்வு காண்பதற்கான காலக்கெடுவின் அடிப்படையில் தொடர்ச்சியான பல நிதித் தண்டனைகளுக்கு வழிவகை செய்கிறது. இதில், சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் உதவி மையத்திற்கு ஒரு சிக்கலைச் சுட்டிக்காட்டிய பிறகு, அதைச் சரிசெய்வதில் ஏற்படும் ஒவ்வொரு 15 நிமிடத் தாமதத்திற்கும் ரூ. 1 லட்சம் அபராதம், முடக்கப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகைகள் மற்றும் ஒப்பந்த ரத்துகள் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், இதுபோன்ற தவறுகளுக்காக நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
டிசம்பர் 5 அன்று கோயெம்ட் எடு டெக்கிற்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, செப்டம்பர் 20, 2025 அன்று வெளியிடப்பட்ட ஒரு திருத்த அறிக்கையில் இந்த அளவுகோலும் நீக்கப்பட்டது என்பது மாணவர்களின் கல்வியில் எப்படி ஒன்றிய அரசு ஊடுருவி விளையாடுகிறது என்பதை காட்டுகிறது.
மாற்றப்பட்ட விடைத்தாள்
டெல்லியைச் சேர்ந்த மாணவரான வேதாந்த் வஸ்தவா, சிபிஎஸ்இ பதிவேற்றிய இயற்பியல் விடைத்தாள் தன்னுடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தனது கவலைகளை. உண்மைகளை வெளிப்படுத்தியதற்காக ஒரு பிரபல தொகுப்பாளரால் அந்த மாணவர் ஒரு பாகிஸ்தானியர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் வஸ்தவாவின் ட்வீட் அதே பிரச்சினை தொடர்பாக ஏராளமான புகார்கள் வெளிவர வழிவகுத்து, அதனை தேசிய அளவில் கவனத்திற்குக் கொண்டும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களும், அறிவுரைகளும் சமூக ஊடகங்களில் இப்போது நிறைந்துள்ளன. மங்கலான OSM தாள்கள், செயலிழக்கும் இணையதளங்கள், அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் தவறான மதிப்பிடுதல் ஆகியவற்றால், எங்கள் வாரியத் தேர்வு மதிப்பெண்கள் பாழாகிவிட்டன. கல்லூரி சேர்க்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, JOSAA கலந்தாய்வும் தொடங்கவிருப்பதால், எங்களில் லட்சக்கணக்கானோர் ஒரு முழு ஆண்டையும் இழக்க நேரிடலாம், என்று ஒரு மாணவர்கள் குமுற தொடங்கியுள்ளனர்.
அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதாக தேசபக்த வேஷம் போடும் பாஜக சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க இயலாது என்பதை பட்டவர்த்தனமாக இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஏற்கனவே நீட் வினாத்தாள் கசிவு 23 லட்சம் மாணவர்களின் தேர்வு ரத்து செய்ய வைத்தது ஒன்றிய அரசு. அரசு வேலைக்கு நடத்தும் தேர்வு வினாத்தாள்களும் பாஜக – மாநிலங்களில் தொடர்ந்து கசிய வைக்கப்பட்டு ஒரு கள்ளச் சந்தை உருவாக்கி இருக்கிறது. கல்லூரியில் சேருவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (CUET) தேர்விலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அதுவும் மாற்றிவைக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி கல்லாக்கட்டும் வேலையை தான் பாஜகவும் அதன் சங்கப் பரிவாரங்களும் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றன.
எனவே ஒரு சிறந்த வெளிப்படையான தேர்வு முறைமையை உருவாக்குவதற்கு மாணவர்களும் இளம் தலைமுறையினரும் தொடர்ந்து போராட வேண்டும் அதற்கான தேவை முன்ன எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகரித்திருக்கிறது புதிய தீர்ப்புகள் எழுத புற்றீசல் போல் புறப்படுக இளைய தலைமுறையே!