தமிழக அரசியல் மாற்றம்: தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 3 பொதுப்புத்தியின் கையாளுதல்களும் மாற்று அரசியலும்
அருண் நெடுஞ்செழியன்

மக்களின் எதார்த்த தேவைகளையும், அவர்களின் பொதுப்புத்திக் கட்டமைப்பில் நிலவும் உளவியல் தாக்கங்களையும் நாம் எப்படி முற்போக்கு மாற்று அரசியலுக்கு ஆதரவாகத் திரட்டுவது என்பதே இன்று நம்முன் உள்ள முதன்மையான கேள்வி. இது தமிழ்நாடு மட்டுமல்லாது உலகெங்கிலும் இன்று தத்துவார்த்த ரீதியாக எழுந்துள்ள பெரும் சவாலாகும்.
இதைத்தான் லெனின் தனது புகழ்பெற்ற “என்ன செய்ய வேண்டும்?” (What Is To Be Done?) நூலில் மிக ஆழமாக விவாதித்துள்ளார். மக்களின் அன்றாடப் போராட்டங்களும் அதிருப்தியும் வெறும் ‘இயல்பான உணர்வுநிலை’ (Spontaneous consciousness) மட்டுமே என்றும், அதனை ஒரு முறையான ‘சோசலிச உணர்வு நிலையாக’ உயர்த்தித் திரட்டுவதில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான சமூகப் பாத்திரம் அடங்கியுள்ளது என்றும் லெனின் விளக்கியுள்ளார். எனவே, மக்களின் இந்த எதார்த்த உணர்வை வெறுமனே பழிசொல்லாமல், அதை மாற்று முற்போக்கு அரசியலை நோக்கி வழிநடத்துவதே சமகால அரசியல் சூழல் உணர்த்தும் பாடமாகும்.
மக்களின் இந்த எதார்த்தமான பொதுப்புத்தியை அரசியல் சக்திகள் எவ்வாறு தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்கின்றன என்பதற்கு உலக வரலாற்றில் மிக முக்கியமான உதாரணங்கள் உண்டு. ஆனால், இந்த அரசியல் கையாளுதல்கள் தன்னிச்சையாகக் காற்றில் நிகழ்ந்துவிடுவதில்லை; மக்களின் அன்றாட வாழ்வியலை நசுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கையாளுதல்கள் வேலை செய்வதற்கான முதன்மை அடித்தளமாக அமைகின்றன.
அ) போல்ஷ்விக் புரட்சியும் ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ முழக்கமும்:
1917 ரஷ்யப் புரட்சியின் போது, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி சாமானிய ரஷ்ய மக்களின் அன்றாடப் பொதுப்புத்தியைத் துல்லியமாகப் புரிந்துகொண்டது. இதன் பின்னணியில் ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் அனுபவித்த கடுமையான பசி, பஞ்சம் மற்றும் போர்க்காலப் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை அடித்தளமாக இருந்தன. முதல் உலகப்போரின் பிடியிலும், பசிப் பஞ்சத்திலும் சிக்கியிருந்த ரஷ்யத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பொதுப்புத்தி எளிய மூன்று தேவைகளை மட்டுமே கோரியது: “அமைதி, நிலம் மற்றும் ரொட்டி”. போல்ஷ்விக்குகள் மக்களின் இந்த ஆக எதார்த்தமான பொருளாதாரத் தேவையை வர்க்க உணர்வாகவும், புரட்சிகர சித்தாந்தமாகவும் மாற்றியமைத்தார்கள். மக்களின் அந்தப் பொதுப்புத்தியை மூலதனமாகக் கொண்டுதான், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற முழக்கத்தின் கீழ் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் ஒன்றிணைத்து மாபெரும் சோசலிசப் புரட்சியைச் சாத்தியமாக்கினார்கள்.
ஆ) ஹிட்லரின் பாசிச கையாளுதலும் யூத எதிர்ப்புப் பொதுப்புத்தியும்:
இதற்கு நேர்மாறாக, முதலாம் உலகப்போரின் தோல்வி மற்றும் ஜெர்மனியை உலுக்கிய மாபெரும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய பொருளாதாரக் காரணிகளே சாமானிய மக்களின் விரக்திக்குக் காரணமாக இருந்தன. இந்த இருத்தலியல் விரக்தியையும், வேலைவாய்ப்பு இன்மையால் வந்த கோபத்தையும் அடால்ஃப் ஹிட்லர் தனது பாசிச நலனுக்காக அறுவடை செய்தான். ஜெர்மனியர்களின் அன்றாடப் பொதுப்புத்தியை, பரப்புரை எந்திரங்களின் துணையோடு “யூத எதிர்ப்பு நச்சாக” (Anti-Semitic) ஹிட்லர் திட்டமிட்டு மாற்றியமைத்தான். ஜெர்மனியின் அனைத்துப் பொருளாதார அவலங்களுக்கும் யூதர்களே காரணம் என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, மக்களின் பொதுப்புத்தியை நாசிசத்தின் பக்கமாகத் திருப்பினான்.
இ) 1960-களில் திமுக-வின் மொழிப் போராட்டம்
1960-களின் மத்தியில் தமிழகத்தின் சாமானிய மக்களின் பொதுப்புத்தி என்பது மிக எளிய, ஆனால் தீவிரமான தங்களின் மொழி மற்றும் தனித்துவப் பண்பாட்டு அடையாளப் பாதுகாப்பைக் கோரியது. இதன் பின்னணியில், மத்திய காங்கிரஸ் அரசின் இந்தித் திணிப்பால் தங்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகப் பறிபோய்விடும் என்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமான பொருளாதார, வாழ்வாதார அச்சம் அடித்தளமாக இயங்கியது. அதோடு, அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய கடுமையான அரிசிப் பஞ்சம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற அன்றாடப் பொருளாதாரக் கொள்கைகளின் மீதான மக்களின் தீவிர சலிப்பும் இதற்குத் துணை நின்றது. அப்போது களம் புகுந்த அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக, மக்களின் இந்த எதார்த்தமான மொழி சார்ந்த, வாழ்வாதாரப் பொதுப்புத்தியை மிகக் கச்சிதமாகத் தங்களின் ‘திராவிடப் பண்பாட்டுப் பெருமிதம்’ மற்றும் ‘மாநில சுயாட்சி’ என்ற அரசியல் சித்தாந்தமாக மாற்றியமைத்து, 1967-ல் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
ஈ) சமகால இந்திய, உலகளாவிய அரசியல் கையாளுதல்கள்
சமகாலத்தில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியாலும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பாலும் நிகழ்த்தப்படும் பொதுப்புத்தி கையாளுதல்களுக்குப் பின்னாலும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவாக உருவான தீவிரமான பொருளாதாரச் சிக்கல்களே பிரதான காரணியாக இருக்கின்றன:
¿ பாஜகவின் சிறுபான்மை அரசியல் டெம்ப்ளேட்: இந்தியாவில் கடந்த பல தசாப்த காலப் பாரம்பரிய காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் ஆட்சிகளின் கீழ், தாராள மயமாக்கல் கொள்கைகளால் ஏற்பட்ட வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, விலைவாசி உயர்வு மற்றும் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் நெருக்கடிகள் பெரும் அதிருப்தியை உருவாக்கின. இந்தத் தீவிர பொருளாதாரச் சலிப்பை, பாஜக மிகத் துல்லியமாகத் தன்வயப்படுத்தி, அதை மதவாத அரசியல் மற்றும் ‘தேசியவாதப் பெருமிதம்’ என்ற சித்தாந்தக் கட்டுமானமாக மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
¿ டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் டெம்ப்ளேட்: அமெரிக்காவில் கார்ப்பரேட் உலகமயமாக்கலால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் முடங்கி, வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டு, அமெரிக்கர்களின் அன்றாடப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது. இந்த இருத்தலியல் கோபத்தையும் வாழ்வியல் விரக்தியையும் டொனால்ட் டிரம்ப் மிகத் தந்திரமாகக் கையாண்டார். சாமானியர்களின் அந்தப் பொருளாதாரத் துயரத்தைத் தீர்க்கும் உண்மையான காரணிகளை மறைத்து, அதை “குடியேற்றவாசிகளுக்கு எதிரான நச்சுக் கருத்துகளாக” மாற்றி, “அமெரிக்காவை மீண்டும் வல்லமையாக்குவோம்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களின் பொதுப்புத்தியை முழுமையாகத் தன்வயப்படுத்தி மீண்டும் அதிகாரப் பீடத்தைக் கைப்பற்றினார்.
இந்த உலகளாவிய வரலாற்று மற்றும் பொருளாதாரப் பின்னணியில் இருந்து சமகாலத் தமிழக அரசியல் திருப்பத்தை நாம் உற்றுநோக்கும்போது, தவெக-வின் கார்ப்பரேட் எந்திரங்கள் இங்குள்ள சாமானியர்களின் வாழ்வியல் அதிருப்தியையும் சலிப்பையும் ஒரு ‘இரட்சகன் பிம்பம்’ நோக்கி மிக லாவகமாகத் திருப்பி, தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்திருப்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரமும் சோசலிச உணர்வு நோக்கிய நகர்வும்
வரலாற்றின் இத்தகைய மாபெரும் ‘பொதுப்புத்தி கையாளுதல்’ திருப்பங்கள் அறிவுஜீவிகளுக்குப் பதற்றத்தைத் தரலாம், ஆனால் அதுவே இறுதி முடிவல்ல. கிராம்சியின் தத்துவப்படி, உழைக்கும் சாமானிய மக்களின் இந்த எதார்த்தமான பொதுப்புத்தியைக் கார்ப்பரேட் பிஆர் (PR) நிறுவனங்களோ அல்லது பாசிச சக்திகளோ தங்களுக்குச் சாதகமாக மழுங்கடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிக முதன்மையான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களின் பொதுப்புத்தியை வடிவமைக்கும் ஒரு மாபெரும் ‘கல்விக்கூடமாக’ இயங்க வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் மற்றும் கோபங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான பொருளாதாரச் சுரண்டலை அவர்களுக்குத் தர்க்கரீதியாகப் புரிய வைக்க வேண்டும்.
அதாவது, முரண்பாடுகள் நிறைந்த சாமானியர்களின் ‘பொதுப்புத்தியை’, ‘சோசலிச உணர்வுநிலையாக மாற்றியமைக்கும் பாலமாக கட்சி செயல்பட வேண்டும்.
அடிமட்டக் களத்திலிருந்து உழைக்கும் வர்க்கத்திற்குள்ளிருந்தே தங்களின் உரிமைகளுக்காகப் பேசும் அறிவுஜீவிகளை’ கட்சி உருவாக்க வேண்டும். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் சமூக இயக்கங்களின் மூலமாக கார்ப்பரேட் பிஆர் பிம்ப அரசியலுக்கு மாற்றான ஒரு வலுவான ‘எதிர்-மேலாதிக்கத்தை’ (Counter-Hegemony) மக்கள் மத்தியில் கட்டமைக்க வேண்டும். இத்தகைய மக்கள் இயக்கப் பங்கேற்பும், அடிமட்ட மக்களின் வர்க்க உணர்வைத் திரட்டும் உண்மையான சித்தாந்த மாற்றம் இல்லாதவரை, கார்ப்பரேட் மூலதன சக்திகள் மக்களின் பொதுப்புத்தியை புதிய பிம்ப அரசியல் சுழற்சிக்குள் முடக்கி வைத்திருக்கும் என்ற கசப்பான எதார்த்தத்தை உணர்ந்து முற்போக்கு சக்திகள் களம் காண வேண்டிய தருணமிது!