
எதற்காகப் பிறந்தேன்? யாருக்காக வாழ்ந்தேன்? பிறப்பும், வளர்ப்பும் வாழ்வும் யாருக்காக? எனக்காக, என் குடும்பத்திற்காக, வாழ்வெனில் அது வாழ்க்கையா?
ஊருக்காக, வட்டாரத்திற்காக, நாட்டிற்காக, மொழிக்காக வாழ்ந்தேன் என்பது வாழ்க்கையா? ஆதிக்கம் செலுத்துவோர், சுருட்டி, சுருட்டி, சுரண்டிக் கொழிப்போர் நலம் பேணிக் காக்கப்பட துணை போவது வாழ்க்கையா?
செல்வம் சேமித்து, சேமித்து, செல்வ மலையெனக் குவித்த போதும், போதும் என்ற மன நிறைவின்றி, மேலும் சேர்க்க, சுரண்ட வழி என்ன என்று, வழி தேடும் வாழ்க்கையா வேண்டும்?
அடக்கப்பட்டவனையும், ஒடுக்கப் பட்டவனையும், சுரண்டப்படுபவனையும். அவர்களது கரங்களில் பூட்டப்பட்டுள்ள அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிந்திட, அவர்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட, அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் வாழ்வு வேண்டும். மகிழ்ச்சி வேண்டும் என தன்னை அர்ப்பணித்து வாழ்கிற வாழ்க்கை வேண்டுமா?
நீடித்த வாழ்க்கையாக, நிலைத்த, நிலைபெற்ற வாழ்க்கையாக, மரணத்திற்கு பின்னரும், மனித நெஞ்சங்களில் நிலைபெற்று வாழக்கூடிய வாழ்க்கையாக, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பலரும் உள்ளனர்..
விதைத்த விதைகள் எல்லாம் முளைத்து விடுவதில்லை.
நட்ட செடிகள் எல்லாம் வளர்ந்து விடுவதும் இலலை.
வளர்ந்த செடிகள் எல்லாம் மரமாக வளர்ந்து விடவில்லை.
வளர்ந்த மரங்கள் எல்லாம் கிளை பரப்புவதில்லை.
கிளை பரப்பிய மரங்கள் எல்லாம் பூத்துக் குலுங்குவதில்லை.
பூத்த பூக்கள் எல்லாம் பிஞ்சு வைப்பதில்லை.
பிஞ்சுகள் எல்லாம் முற்றி காய்வதில்லை.
காய்த்த எல்லாம் கனியாவதும் இல்லை.
ஒவ்வொரு நொடிப் பொழுதும் உலகில் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளனர்.
இன்று இந்திய திருநாட்டின் மக்கள் தொகை 142 கோடி.
பிறக்கும் குழந்தைகளில் எல்லாம் உயிர் பிழைப்பதில்லை.
உயிருடன் உள்ள குழந்தைகளில் எல்லாம் வளர்ந்து, வாழ்ந்து பெயர் எடுப்பதில்லை.
நீடித்த, நிலைபெற்ற குழந்தைகளை ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி முடித்து விடலாம்.
அவ்வாறு எண்ணி முடிக்கக் கூடிய குழந்தையில் ஒன்று 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இரண்டாம் நாள் பிறந்தது.
தொழிலாளி வர்க்கம் நிறைந்த கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி என்னும் சிற்றூரில், செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்த காளஹஸ்த்தி முதலியார், சுப்புலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை கவர்ச்சியாக மட்டுமல்ல, கம்பீரமான தலைவராக, தலைமை பாங்கான தலைவராக, தன்னிகரற்ற தலைவராக வளர்ந்தது..
அவர்தான் அனைவராலும் பாலன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட கே.பாலதண்டாயுதம்.

உயர்நிலைப்பள்ளி மாணவராக பொதுவாழ்வைத் தொடங்கி, அதன் விளைவாக பல்கலைக்கழக பட்டத்தைத் துறந்து, நேசித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட போதும், இல்லற வாழ்க்கையும் இழந்து, பெற்றோர் ஆதரவை இழந்து, தலைமறைவு வாழ்க்கை, கொடியச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைதான் வாழ்க்கையானது.
பாலன் குடும்பத்தில், பாலனுக்கு முன்பாக மூவர் பிறந்தனர். அவர்கள் ஜெகதாம்பாள், சரஸ்வதி, மங்கையர்கரசி மூவரும் பெண்கள். பெற்றோருக்கு கவலை பிறக்கும், குழந்தை ஒவ்வொன்றும் பெண்ணாகவே பிறக்கின்றது, ஆண் மகவும் வேண்டாமா? என்ற ஏக்கம்.
தவமிருந்து பெற்ற குழந்தை தான் நான்காவது பிறந்த ஆண் மகவு பாலன்.
பாலனைத் தொடர்ந்து கண்ணன், ஆறுமுகம், நடராசன் என்று மூன்று தம்பிமார்களும், கடைசியாக விசாலாட்சி என்ற தங்கையும் பிறந்தனர். சகோதர, சகோதரிகள் என எட்டு பேர்
பாலன் தந்தை ஊரில் செல்வாக்கு மிக்கவர். பொள்ளாச்சி சேர்மன் கூட்டுறவு சங்க தலைவர். அர்பன் பேங்க் கௌரவ தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.
சிங்கம் போல் கர்ஜிக்கும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்ட பாலன்.
தமிழகத்தில் அவர் செல்லாத ஊர் இல்லை. சந்திக்காத மக்கள் இல்லை.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பேரும், புகழும் பெற்று விளங்கினார்.
தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்களின் மாநாடுகளில் பங்கேற்றார்.
1918 இல் பிறந்து, 1973 வரை 55 ஆண்டுகள் மட்டுமே நம்மோடு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களோடு வாழ்ந்தார்.
அவரை அறியாத அரசியல் தலைவர்கள் இல்லை, எழுத்தாளர்கள், கவிஞர்கள். திரை நட்சத்திரங்கள், நாடகக் கலைஞர்கள் என அனைவரிடத்திலும் நட்புக் கொண்டார். அவரது நட்பு என்பது அவருக்குரியதாக்காமல், அனைத்தும் கட்சிக்கும், வர்க்க, வெகுஜன அமைப்புகளுக்கும் பயன்படுத்தினார். அனைத்து புகழும் அல்லாவிற்கே என்று இஸ்லாமிய சகோதரர்கள் கூறுவதைக் கேட்டுள்ளோம். அது போன்று தோழர் பாலன் அனைத்தும் நாட்டுக்கும், கட்சிக்கு என்று பிரகடணம் செய்து வாழ்ந்தார்.
நாட்டு மக்களுக்கும், செங்கொடி இயக்க தோழர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
நம்பிக்கை நட்சத்திரம் சென்னையில் இருந்து விமானம் ஏறி டெல்லி சென்றது. 1973 மே 31 அன்று, கோரமான கொடிய விமான விபத்து நடைபெற்றது. அவரோடு மோகன் குமாரமங்கலம், உலக தொழிற்சங்கத் தலைவர் சதீஷ் லுமும்பா உள்ளிட்டோர் தீக்கிரையாகினர். இந்த விபத்தில் மத்திய அமைச்சர் பாலகோவிந்த வர்மா, சிவகாசி எம்.பி ஜெயலட்சுமி உட்பட 17 பேர் உயிர் தப்பினர்
ஆனாலும் பாலன் நம்முடன் வாழ்கின்றார். வாழ்ந்து கொண்டே இருப்பார். நம் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து, நீடித்து, நிலைபெற்று நிற்பார். ஏன்?
விளையும் பயிர் முளையிலே தெரியும் என விவசாயிகள் தம் அனுபவத்தால் கூறுவார்கள்.
ஆம், பாலன் பாலகனாக, உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த போது, விடுமுறை நாட்களை வெற்று நாளாக, வெறும் விளையாட்டு தனமான நாட்களாக கடந்து செல்லாமல், ஆக்கபூர்வமாக “பாலர் சங்கம்” என்று தன் ஊரில் தொடங்கி, சில மாணவ, இளைஞர்களை கொண்டு செயல்படுத்தி, சிறு சிறு கூட்டங்களை நடத்துவது, அக்கூட்டங்களில் சிறந்த அறிஞர்களைக் கொண்டு உரை நிகழ்த்த செய்து, மாணவர், இளைஞர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற பணிகளை மேற்கொண்டார்.
மார்க்சும் – காந்தியும், லெனினும் – காந்தியும் எனும் தலைப்புகளில் தானும் உரையாற்றி, மற்ற பெரியோர்களையும் உரையாற்ற வைத்துள்ளார். இது சிறு துளியாக தொடங்கி, பெரு வெள்ளமென, பொதுக் கூட்டங்களாக மாற்றியது.
இவரது செயல்பாடு குறித்து மிக முக்கிய தொழில் அதிபரும், சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொள்ளாச்சி மகாலிங்கம், “ பாலனிடம் இளமையில் இருந்த வேகமும், ஆற்றலும், தேசபக்தியும் கடைசிவரை மங்காமல் ஒளி வீசியதை நேரில் கண்டேன். பாலன் செயல் வீரனாக, சிறைப்பறவையாக இருந்தார். அவரது செயலுக்கு குறுக்கே எதுவும் நின்றதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
நாட்டின் இளைஞர்களிடையே பெரும் பேரெழுச்சியை உருவாக்கிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மகத்தான, தேச பக்த மாவீரர்களை, வெள்ளை ஏகாதிபத்திய கொடுங்கோல் ஆட்சி 1931 மார்ச் 23ஆம் நாள் தூக்கிலிட்டு கொன்றது.
அச்செய்தி நாடு முழுவதும் காட்டு தீயென பரவியது. 17 வயதுடைய பாலனை இது கடும் கோபம் கொள்ளச் செய்தது. பகத்சிங்கின் மன உறுதிப்பாடு தன்னிடத்திலும் இருக்க வேண்டுமென, கால்களில் ஆணிச் செருப்பு அணிந்து, ரத்தம் சொட்ட, சொட்ட வெகு தூரம் நடந்து சென்று, சோதனை செய்து வெற்றி கண்ட பாலன் குறித்து, அவருடன் பல்கலைக்கழக சக மாணவராக, கட்சி வாழ்க்கையில் சக தோழனாக பணியாற்றிய, மாசற்ற ப.மாணிக்கம், பாலனுக்கு அவ்வளவு சிறுவயதில் நாட்டுப்பற்றும், தியாக உணர்வும், மன வைராக்கியமும் இருந்தது. அது கடைசிவரை நீடித்தது. என பெருமிதம் பொங்க குறிப்பிடுகின்றார்.
பொள்ளாச்சியில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்த பின்னர், தன் மகன் உயர்கல்வி பெற வேண்டும். படித்து பல்கலைக் கழகப் பட்டம் பெற்று, அரசின் உயர் பொறுப்பிற்கு சென்று பணியாற்றி, கை நிரம்ப ஊதியம் பெற்று, குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டும். ஏனெனில், பாலனுக்கு மூத்தவர்கள் மூவருமே பெண் பிள்ளைகள். நான்காம் குழந்தையாக பிறந்த பாலன் தான் ஆண் பிள்ளை. ஆண் பிள்ளை தானே குடும்ப பொறுப்புகளை ஏற்று, வயோதிக காலத்தில் பெற்றோரை பேணி காக்க வேண்டிய பொறுப்பும், கடமை உள்ளது.
அத்தகைய பொறுப்புக்களையும், கடமைகளையும் என் மகன் நிறைவேற்றுவான் என்கின்ற பெரும் நம்பிக்கையோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படிப்பிற்கு சேர்த்தார்கள்.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே முதலாம் ஆண்டு மாணவரான பாலன். தனது அறிவுக்கூர்மையாலும். நா வன்மையாக பேராசிரியர்களையும், மாணவர் சகாக்களையும் காந்தம் போன்று கவர்ந்தார்.
பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுக்கிடையான பேச்சுப் போட்டியில் ஒரு முறை அல்ல, மூன்று முறை முதல் பேச்சாளராக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்படும். அப்போது அவர்கள் விரும்பினால், அவர்கள் விரும்பும் பரிசு தொகைக்குரிய நூல்களை, பல்கலைக்கழகமே வாங்கிக் கொடுக்கும்.
தோழர் பாலன் தான் வெற்றி பெற்றதற்குரிய ரூபாயை வாங்காமல், அத்தொகைக்குரிய நூல்களை வாங்கி கொடுத்திட வேண்டும் என்பார்.
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், விஞ்ஞானம், இலக்கியம் போன்ற நூல்களையும் பெற்று தான் படிப்பது மட்டுமின்றி, தன் சக மாணவர்களுக்கும் வழங்கி படிக்க செய்வார். இதன் மூலம் மாணவர்களை மார்க்ஸியம், லெனினியம் கற்க செய்தார்.
நாளுக்கு நாள் பாலன் செல்வாக்கு உயர்வது மட்டுமல்ல, மார்க்சியக் கருத்தும் மேலோங்கி வருவதை கல்லூரி நிர்வாகத்தால் சகித்து கொள்ள முடியவில்லை.
குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரியாரை ஆத்திரம் கொள்ள செய்கின்றது.
ஆத்திரத்தினை வெளிப்படுத்த முடியவில்லை, பாலனை மட்டம் தட்ட வேண்டும். அவரால் பரப்பப்பட்டு செல்வாக்கு பெற்று வரும் மார்க்சியத்தையும் முறியடிக்க வேண்டும் என்று தனக்கு தானே திட்டம் தீட்டுகின்றார்.
அதற்கு அவர் மேற்கொண்ட தந்திரம் கருத்தரங்கம் நடத்துவது. கருத்தரங்கில் தன் சொல் கேட்கும் பேராசிரியர்களை கொண்டு பேச செய்வது என்பதாகும்.
1938-ல் நடந்த மாணவர் போராட்டம்
1936-38 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு ஜன முன்னணி அரசை பாசிஸ்ட்டுகள் கவிழ்த்தார்கள்.
ஜவகர்லால் நேரு ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும், பாசிஸ்ட்களுக்கு எதிராகவும் இயக்கம் கண்டதுடன், அம்மக்களுக்கு உதவ நிதி திரட்டினார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், பாலன் ஏற்பாட்டில் மாணவர்கள் பொது அமைப்பை உருவாக்கி நிதி திரட்டினார்கள்.
திரட்டப்பட்ட நிதியில் ஒரு மாணவர் கையாடல் செய்தது அறிந்து சினம் கொண்ட பாலன் மற்றும் மாணவர்கள் அம்மாணவனை கண்டித்தார்கள்.
இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, துணைவேந்தரின் விசாரணை வரை சென்றது, பாலனையும், இதர மாணவர்களையும் அழைத்து துணைவேந்தர் அவரது பங்களாவில் விசாரணை மேற்கொண்டார். அவரது விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று எழுத வேண்டுமா என்ன?
விசாரணை முடிந்து பாலனும் மற்றும் விசாரணைக்கு உட்பட்ட மாணவர்களும் வெளியே வரும்போது, குற்றவாளியான மாணவன் அங்கு நின்று கொண்டு இருந்தார் இதை பார்த்தவர்களுக்கு கோபம் வராமல் இருக்குமா என்ன?
கோபப்பட்ட பாலனும், ஏனைய மாணவர்களும், கையாடல் செய்தவன் மீது கை வைத்தார்கள். வஞ்சம் தீர்க்க வாய்ப்பு கிடைத்தது துணைவேந்தருக்கு.
பாலன் உட்பட ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்கள் துணைவேந்தரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் வெடித்தது. பெரும் புயலாய் வீசியது.
1938 நடைபெற்ற இப்போராட்டமே தமிழ்நாட்டின் வரலாற்றில் மாணவர்கள நடத்திய முதல் போராட்டமாாகும்.
போராட்டத்தின் எதிரொலியாக 4 மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். ஆனால் பாலன் முற்றாகப் பழிவாங்கப்பட்டார். அவரது பி.எஸ்.சி பட்டப்படிப்பு கனவு கானல் நீர் ஆகியது.
1940 களில் வெள்ளையர் அரசு ஜவஹர்லால் நேருவிற்கு நான்காண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதனை கண்டித்து மாணவர்கள் ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டம் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் நடைபெற்றது. ஒரு நாள் நள்ளிரவு தலையில் மப்ளரை சுற்றிக்கொண்டு மாணவர்களை சந்தித்து உரையாடினார் பாலன். அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, மானவர் அமைப்பை உருவாக்க வழி கூறி விடை பெற்றார்.
இவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேள்வி எழுப்ப, ஒரு மாணவர் இவர் தான் பாலதண்டாயுதம் என கூறினார்.
பேராசிரியர் கல்கி 1940 இல் “விநாயகத்தின் விடுதலை” எனும் தலைப்பிட்டு ஒரு சின்னஞ்சிறு கதை எழுதி இருந்தார்.
“விநாயகம் என்பவர் ஒரு கௌரவ ஜெயில் விசிட்டர். அவர் ஒரு கனவு காண்கின்றார். கனவில் சத்தியாகிரகத்தில் சிறைக்குப் போய், விடுதலை எப்போது வரும் என்று தவிர்த்து கொண்டிருக்கின்றார். கடைசியில் ஒரு நாள் விடுதலை வருகின்றது, விடுதலை ஆனதும் சிறையில் வாசலிலே அவரை மறுபடியும் பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்கிறார்கள். உடனே அவர் பிராணன் போய் கீழே விழுந்து விடுகிறார். தூக்கத்தில் இருந்து விழித்து எழந்ததும், சிறை விசிட்டர் வேலையை ராஜினமா செய்கின்றார்.”
இக்கதை எழுதிய கல்கி திருச்சி சிறைக்குப் போன புதிதில், அங்கு நண்பர் கிருஷ்ணசாமி பாரதியை சந்தித்தார்.
கல்கியிடம் உங்கள் கதை படித்தேன். அது கற்பனை கதை, வெளியான அதே சமயத்தில் இங்கே அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது, ஆனால் ஒரு வித்தியாசம் என்னவெனில்? உங்கள் கற்பனைக் கதையில் விநாயகம் பிராணன் போய் கீழ விழுந்தான்.
இங்கே நடந்த நிஜ கதையில், கதாநாயகன் சிரித்தபடி தலை நிமிர்ந்து நின்றான் என்று கூறினார்.
கல்கி மிக ஆவல் பொங்க கேட்க, கிருஷ்ணசாமி பாரதி கூறுகின்றார்.
பாலதண்டாயுதம் சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். அப்பெண் சிறைக்கு வந்து பலனை பார்த்துவிட்டு சென்று இருக்கின்றார். பாலன் சிறையில் இருந்து விடுதலையான பின்பு, இல்லற வாழ்க்கை மேற்கொள்வது குறித்து பல்வேறு திட்டங்களை தீட்டி வைத்திருந்தார்.
அவருடன் பழகிய சிறைக்கதிகள் மற்றும் நண்பர்கள் கொஞ்ச நாள் மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
விடுதலை நாள் நெருங்க, நெருங்க அவர் தவித்த தவிப்பையும், பரபரப்பையும் பார்க்க வேண்டுமே? இரவு ஒரு நிமிடம் கூட அவர் கண்ணுறங்கவில்லை.
பொழுது விடிந்தது, சிறைக் கதவு திறந்தது, பாலன் எல்லாரிடமும் விடைபெற்று சென்றார். அவர் முகம் மலர்ந்து இருந்தது. அவரது அன்பு மனைவி சிறைவாசலில் மிகுந்த ஆவலோடு காத்திருந்தார். இருவரும் சந்தித்து பேசுவதற்குள் சில போலீஸ் அதிகாரிகள் வந்தனர். பாலனை தனியே அழைத்துச் சென்று, நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர். அங்கிருந்து போலீஸ் வண்டி பலனை சுமந்தபடி வேலூர் சிறைச் சாலையை நோக்கி சென்றது. அந்த நிலையிலும் பாலன் முகம் மலர்ந்தது, மலர்ந்தபடியே இருந்தது என்பதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது என்று கிருஷ்ணசாமி பாரதி நிஜக் கதையை, கல்கியிடம் சொல்லி முடித்தார்.
1943 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றேன். 25 வயதுடைய இளைஞர் ஒருவர் அரைக்கால் சட்டையும், அரைக் கை சட்டையும் அணிந்தவாறு, அலுவலகத்தில் உள்ள தூசி, ஒட்டடைகளை துடைத்துக்கொண்டு
“அடிமையாய் இருக்கவா உன்னை
ஈன்றாள் அன்னையும்?
உரிமையை பறிகொடுக்கவா உன்னை
ஈன்றாள் அன்னையும்?”
என வழிநடைப் பயண பாடலை பாடிக் கொண்டே., ‘வாறுகோல்’ பிடித்து கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்ததை, அதன் பாங்கைப் பார்த்து அசந்து நின்றேன்.
நான் வந்து நின்றதை கவனித்ததும் திடீரென பாட்டை நிறுத்திவிட்டு, எப்பொழுது வந்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, அவர் பணியை தொடர்ந்தார். அவர் வேறு யாரும் அல்ல, பாலன்தன் என்று நினைவு கூறுபவர் தோழர் ப.மாணிக்கம்.
எந்த பெரும் நம்பிக்கையோடு பெற்றோர்கள், உயர்கல்வி கற்க சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பாலனை அனுப்பி வைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்து போய்விட்டது. அதுவும் இன்றி யாரோ ஒரு பெண்ணை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டார். அதுவும் இன்றி அவன் எங்கோ அலைந்து, திரிந்து கொண்டிருக்கின்றான். குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று எதிர்பார்த்தால் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே அவனுக்கு இங்கே வேலை இல்லை, வீட்டு பக்கம் வரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்ட நிலையில், ஓர் அனாதை போன்று தமிழ்நாட்டை வலம் வந்தார் பாலன்.
“பாலன் படிக்கும்போதே ஒரு பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். மண வாழ்க்கையில், மன ஒற்றுமைக்கு இடமில்லாத நிலை தோன்றியது. அவரது திறமை, அன்பு, வாழ்க்கை முழுவதையும் அவள் தனக்கென கேட்டார். ஆனால் பாலன் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் கம்யூனிஸ்ட் லட்சியத்திற்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டார்.
ஆனால் அவளோ வாழ்க்கை முழுவதையும் தனக்கென கேட்டாள். முரண்பாடு அடிப்படையானது. அவர் இலட்சிய நேசத்தை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். அவளை தன் வழிக்கு மாற்ற சிறையிலிருந்து முற்பட்டார். ஆனால் அவளோ, தான் சுகபோக வாழ்க்கைக்கு அவரைப் பங்காளியாக்கி, தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவும், அவர் மூலமாக தன்னுடைய சுக வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் விரும்பி தன் வழிக்கு அவரை இழுக்க முயன்றாள்.
அவள்தான் இப்போது அங்கே இருக்கிறாள். அவர் முடிவாக அவளிடம் தன் வழிக்கு வர தயாரா என கேட்க போய் உள்ளார்.
இந்த இளைஞனுக்கு அவள் மேல் எல்லையற்ற அன்பு, ஆனால் அவள், இவரின் பெருமையை உணராமல், சுயநலக் கோட்டைக்குள் போட்டு பூட்டி விடப் பார்க்கிறாள், இத்தகைய மனப்போராட்டத்தில் அவர் இருக்கின்றார்” என சொல்லி முடித்தார்.
இளைஞர்களே நீங்கள் எந்தப் பக்கம்?
தனது மனைவியை பார்க்கச் சென்ற பாலனின் வரவை எதிர்பார்த்து, வர வேண்டிய திக்கை பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
பாலன் சென்ற 20 நிமிடங்களில் திரும்பி வந்தார். தலைகுனிந்து, பூமியை பார்த்தவாறு, சாலையில் கிடந்த சல்லிக் கற்களை காலால் தட்டியவாறே வந்தார்.
எங்களை கண்டதும் பாலன் சிரித்தார். அண்ணாச்சி சொன்னார் “அவர் தோற்றுப் போய்விட்டார். இவருடைய உறுதியும், ஆனால் உள்ளத்தை நிரப்பிய அன்பைத் துறந்து விடும் சிரமமும் நடையில் தெரியவில்லையா?”
பாலனது முகத்தில் சோகம் கப்பி இருந்தது. ஆனால் நிராசை இல்லை. தளர் நடை இல்லை. உறுதியான நடை, ஒரே வழியில் செல்ல முடிவு செய்ததன் அடையாளமான நடை.
நாங்கள் இருக்கும் இடம் வந்த பாலன் சொன்னார். “அண்ணாச்சி என்னைத்தான் தன்னோடு வர சொல்கிறாள். என் வழிக்கு வர மறுக்கிறாள். சமரசத்திற்கு இடமில்லை, என் வழியே போகிறேன். என் உள்ளத்தில் உனக்கு இடம் உண்டு. ஆனால் நீ பேராசையால், அங்கு இடம் கொண்டிருக்கும் என் வாழ்வின் பொருளையே விரட்டிவிட்டு, வெறும் உள்ளத்தை கேட்கிறாய். அதை தர இயலாது. என் வழியே போகிறேன். நம் உறவு முடிந்த கதைதான் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்” என்றார்.
அவரது வாழ்வில் ஒரு சிக்கல், அதில் சொந்த வாழ்க்கை பலவீனமாகவே போராடியது. பொது வாழ்க்கை வலிமையோடும், ஆற்றலுடன் போராடி வெற்றி கண்டது.
இவ்வாறு கூறியவர் சாதாரணமானவர் அல்ல, நம் அனைவருக்கும் பேராசிரியராக விளங்கிய தோழர் நா.வானமாமலை.
ஏற்றுக்கொண்ட லட்சியத்தால் கல்வி போனது, வீடு போனது, உளமாற உள்ளன்போடு நேசித்த காதலும் பறிபோனது, லட்சியவாதி எதனையும் இழப்பான், இலட்சியத்தை தவிர.
தோழர் பாலன் குறித்து எழுதிக் கொண்டே இருக்கலாம். எண்ணில் அடங்கா பக்கங்கள் எழுதி குவிக்கலாம். தோழர் பாலன் மறைந்த போது, நாம் மதிப்பிற்குரிய தலைவர் இரா.நல்லகண்ணு மாஸ்கோவில் இருந்தார்.
அவர் தோழர் பாலனின் சகத் தோழர். நெல்லை சதி வழக்கில் அவருடன், இவரும் தண்டனை பெற்றவர். ஆகவே பாலன் குறித்தும், அவரது பேச்சாற்றல் திறனால், எளிய மக்களையும் தட்டி எழுப்பும் ஆற்றல் மிக்கவர் என்பது குறித்தும், சாமானிய மக்கள் கூட்டங்களில் அவர், அவர்களது மொழியில், அவர்களுக்கு புரியும் படியான சிறு சிறு கதைகளை சொல்லி விளங்க வைப்பதும், கர்ஜனை புரிந்து பேசி, அவர்களிடத்தில் நல்ல புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியும், அடக்குமுறைகளுக்கு, சுரண்டலுக்கு எதிராக மக்கள் திரள் திரண்டு எழுந்து, ஆவேசமாக போராடிட செய்து வெற்றி காண்பதிலும் வல்லவர் பாலன் எனக் குறிப்பிட்டு ஜனசக்திக்கு, மாஸ்கோவில் இருந்தபடியே எழுதி அனுப்பினார்.
ஆர்.என்.கே கூறுவது எவ்வளவு உண்மை என்பதற்கு 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய இருதினங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில 6 வது மாநாடு, திருச்சி வாசகி மஹாலில் நடைபெற்றது.
அப்போது நாடு தழுவிய அரசியல் எழுச்சிமிக்க காலம்.
1969 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக சஞ்சீவிரெட்டியை அறிவித்தது.
அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த வி.வி.கிரி குடியரசு தலைவருக்கு சுயேட்சையாக போட்டியிட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அவரை ஆதரித்து, முதன் முதலாக தனது ஆதரவை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக போன்ற கட்சிகளும் வி.வி.கிரிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாட்டின் பிரதமரான இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முடிவை ஏற்காமல், அவரவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என அறிவித்தார்.
வி.வி.கிரி மகத்தான முறையில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் பிளவை சந்தித்தது. பழைய காங்கிரஸ் என்றும், இந்திரா காங்கிரஸ் என்றும் இரண்டாக பிளவுபட்டது.
பிரதமர் இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமையாக்கியது ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
இந்திராவின் செயல் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் உச்சநீதிமன்றம் தனிநபர் சொத்துரிமையை பறித்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பளித்தது.
இத்தகையச் சூழலில், மாணவர் மாநாடு நடைபெறுகின்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவர் செல்வங்கள் மிகுந்த ஆர்வத்தோடும், எழுச்சியோடும் பங்கு பெற்றனர்.
இம் மாநாட்டில் அன்றைய மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் பா.மாணிக்கம், கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.கல்யாணசுந்தரம், தா.பாண்டியன், கே.டி.ராஜி என அத்துனை தலைவர்களும் பங்கேற்றதுடன், இம்மாட்டின் கதாநாயகனாக விளங்கிய தோழர் பாலனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் மாநாடு நிறைவு பெற்று, திருச்சி தேவர் ஹாலில் பொது மாநாடு நடந்தது. இதில் மாணவர், இளைஞர், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர். தேவர் ஹால் நிரம்பி வழிகின்றது இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. வெளியில் பெருங்கூட்டம், கட்டுக்கடங்கா காளையர் கூட்டம். ஆளால் கட்டுப்பாடான கூட்டம். இவ்வளவு பெரும் கூட்டத்தில், ஒரே ஒரு பேச்சாளர் தான். அவர்தான் தோழர் பாலன்.
தோழர் பாலதண்டாயுதம் பேசுவார் என அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில், கரவொலி விண்ணை பிளக்கின்றது. கம்பீரமாக மேடை முன் தோன்றினார். சிங்கம் சிலிர்த்து நிற்பது போல் நின்றார். உரையை தொடங்கினார். அவர் பேசவில்லை கர்ஜித்தார்.
குறிப்பாக மன்னர் மானிய ஒழிப்புக்கு எதிராக, வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அநீதியானது என்பதை விளக்குவதை நோக்கமாக கொண்டு, திரண்டுள்ள மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், அதே நேரத்தில் மிக ஆக்ரோஷமாக கர்ஜிக்க தொடங்கினார்.
சொத்து தனி மனித உரிமை, அதில் கை வைக்கக் கூடாது என்று கூறுகின்ற உச்சநீதிமன்றமே!
நான் ஒன்னே முக்கால் ரூபாய் கொடுத்து, ஒரு கத்தி வாங்கினேன். இது என் பணத்தில் வாங்கப்பட்டது. கத்தி எனது சொத்து. இதனை நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன். ஏனெனில் இது எனது சொத்து. ஆகவே எனக்கு பிடிக்காதவனை, என் சொத்தான கத்தியால் குத்தி கொள்வேன்.
காசு கொடுத்து தீப்பெட்டி வாங்கினேன். இது எனது சொத்து, எனது சொத்தை கொண்டு, எனக்கு பிடிக்காதவன் வீட்டை தீயிட்டு கொடுத்துவேன். உன் சட்டம் அனுமதிக்குமா? என கேள்வி கேட்டு கர்ஜித்தார்.
கர்ஜனை கேட்ட இளம் பட்டாளம் எழுந்து நின்று, சிங்கம் பாலதண்டாயுதம் வாழ்க! என மீண்டும், மீண்டும் உரக்க முழக்கமிட்டது. முழக்கம் அடங்க பல நிமிடங்கள் கடந்தன.
மறுநாள் நடைபெற்ற பேரணியும், நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாலன் ஆற்றிய உரையும் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாது.
அத்தகைய எழுச்சியை, பேரெழுச்சியை அதற்கு பின்னர் காணத் துடிக்கின்றேன்.
ஆற்றல்மிகு மாணவர் செல்வங்களே! ஓடும் பாம்பை மிதிக்கும் அஞ்சா நெஞ்சுறுதி கொண்ட இளம் சிங்கங்களே!
நீங்கள் யார் பக்கம்? பல சத்தங்கள் கேட்கின்றது. நான்தான் ஆட்சி, நான்தான் ஆட்சி, அதிகார ஆசைக் கொண்ட சத்தம் கேட்கின்றது. கேட்டுக் கொண்டே இருக்கின்றது. எந்த கொள்கையும் வேண்டாம், எந்த அமைப்பும் வேண்டாம், நான்தான் முதலமைச்சர் என்கிற சத்தம் காதை பிளக்கின்றது. போராட வேண்டாம், தியாகம் செய்ய வேண்டாம், ரத்தம் சிந்த வேண்டாம், சிறைச் செல்ல வேண்டாம், வா என் பின்னால், வா உனக்கு எம்எல்ஏ பதவி காத்திருக்கின்றது. மந்திரி பதவி காத்திருக்கிறது. காலம் தாழ்த்தாமல் ஓடி வா, என் பின்னால் வா,வா என்ற சத்தம் ஒலிக்கின்றது.
நீ எந்த பக்கம்? யார் பக்கம்? யார் பக்கம் சென்றால் மாற்றம் காண முடியும்?
மாற்றம், மாற்றம் எது? மாற்றம், மாற்றத்திற்குரிய பொருள் புரிய வேண்டாமா?
தனக்கென வாழாத் தெரிந்த தலைவர்கள் வேண்டுமா?
தனக்கென வாழத, வாழ விரும்பாத மாமனிதன் பாலதாண்டாயுதம் வேண்டுமா?
யார் வேண்டும் முடிவு செய்வாய்?