கட்டுரைகள்

கிராமப்புற வேலை பறிப்பு திட்டம்

த.லெனின்

மத்திய அரசின் புதிய வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் ‘VB-G RAM G’ திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் நிதிப் பங்கு கடுமையாகக் குறைகிறது. முழுமையாக ஒன்றிய அரசால் நிதி ஒதுக்கப்பட்ட பழைய 100 நாள் வேலைத் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

நிதியை இழக்கும் தமிழ்நாடு

₹95,692 கோடி ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பெறவுள்ளது ₹3,923 கோடி மட்டுமே

ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மாநில அரசுக்கு அனுப்பியுள்ள வரைவு முன்மொழிவின்படி, VB-G RAM G திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பெரும் இது இழப்பை சந்திக்கும்.

இத்திட்டம் குறித்த விவரங்களை அறிந்த தமிழக அதிகாரிகள் மதிப்பிடுவதன் படி, 2014 முதல் மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 10% ஆக இருந்த மாநிலத்தின் பங்கு, இந்த புதிய முறைமையின் கீழ் சுமார் 4.1% ஆகக் குறையும். இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு முறை, 16-வது நிதிக் குழு பரிந்துரைத்த அளவுகோல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீழும் நிதி ஒதுக்கீடு

புதிய முறைப்படி, முன்பு மாநிலத்திற்கு கிடைத்த நிதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 10% வரை பெற்றுவந்த தமிழ்நாடு, இனி 4.1% அளவுக்கு மட்டுமே நிதி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முன்பு ரூ. 5,878 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, இனி ரூ. 3,923 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பைச் சந்திக்கும் ஊரகப் பகுதிகள்

புதிய VB-G RAM G சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

  • 16-வது நிதிக் குழுவின் அளவுகோல்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு; இதில் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு), தனிநபர் GSDP (மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி) மற்றும் மக்கள்தொகை சார்ந்த செயல்திறன் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.

புறக்கணிக்கப்படும் தென்னிந்திய மாநிலங்கள்

இந்த புதிய அளவுகோல்கள் தமிழ்நாடு உள்ளிட்ட, தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சதவீதத்தை வெகுவாகக் குறைக்கின்றன.

  • தமிழ்நாடு இதுவரை பெற்று வந்த, 9.97% நிதியிலிருந்து 4.10%-ஆகக் குறைகிறது. உதாரணத்திற்கு 2014-2026 காலகட்டத்தில் இம்மாநிலம் ₹87,639 கோடியைப் பெற்றது, எதிர்காலத்தில் இதன் பங்கு பாதிக்கும் மேலாகக் குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கையானது அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், பாரம்பரியமாக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம் அதிகப் பலன் பெற்று வந்த பல தென் மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கும்.

  • ஆந்திரப் பிரதேசம் (AP): 8.80%-லிருந்து 4.20%-ஆகக் குறைப்பு
  • கேரளா: 3.94%-லிருந்து 2.38%-ஆகக் குறைவு
  • தெலுங்கானா: 3.94%-லிருந்து 2.17%-ஆகக் குறைவு

அதிக மக்கள் தொகை மற்றும் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்களை நோக்கி ஒன்றிய அரசின் இந்த நிதி ஒதுக்கீடுகள் பெருமளவில் மாற்றியமைக்கப்படுகின்றன.

  • உத்தரப் பிரதேசம் (UP): 9.67%-லிருந்து 17.62%-ஆக கிட்டத்தட்ட இருமடங்காக உயர்வு பெறுகிறது, அதாவது 7.95% என்ற மிகப்பெரிய அதிகரிப்பு
  • பீகார்: 6.10%-லிருந்து 9.95%-ஆக உயர்வு
  • மகாராஷ்டிரா: 3.99%-லிருந்து 6.44%-ஆக உயர்வு
  • குஜராத்: 1.49%-லிருந்து 3.76%-ஆக இருமடங்கிற்கும் மேலாக உயர்வு

இம்மாநிலங்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம் அதிகப் பலன் பெறுபவையாக உள்ளன.

பழைய திட்டமே தேவை

வரைவு விதிகள் தற்போதைய வடிவிலேயே செயல்படுத்தப்பட்டால், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க நிதிக் குறைப்பைச் சந்திக்க நேரிடும். தென் மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் 30% முதல் 40% வரை குறைப்பு ஏற்படக்கூடும்.

முன்னர் MGNREGS என்று அழைக்கப்பட்ட திட்டத்திற்குப் பதிலாக, ‘VB-GRAM G’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதில் தேவைக்கேற்ப நிதி வழங்கும் முறைக்கு மாற்றாக நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டுவரவும் மத்திய அரசு எடுத்துள்ள முடிவே இந்த மாற்றங்களுக்கான காரணமாகும்.

வரைவு விதிகளின்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள், தனிநபர் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மற்றும் மக்கள் தொகை சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மே 22 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், 30 நாட்களுக்குள் இது குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் MGNREGS திட்டம் ‘VB-GRAM G’ சட்டத்தால் மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநில வாரியாக முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, வேலைக்கான உண்மையான தேவைக்கேற்ப செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே இந்த மாற்றம் சிதைப்பதாக விவசாய தொழிலாளர் அமைப்புகளும் மாநில அரசுகளும் வாதிடுகின்றனர்.

தேவைக்கேற்ப செயல்படும் இத்திட்டத்தின் அடிப்படைக்கே இந்த மாற்றம் முரணாக அமைகிறது. இது வரும் ஆண்டுகளில் கிராமப்புற தமிழ்நாட்டின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,திருத்தப்பட்ட இந்த முறையின் கீழ், அதிக மக்கள் தொகை மற்றும் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்கள் பயனடையக்கூடும் என்றும், அதே சமயம் மக்கள் தொகை மாற்றத்தை (demographic transition) எட்டிய மற்றும் அதிக பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற மாநிலங்கள் இதனால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

கடந்த திமுக அரசு சட்டமன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது.

இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும், மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்றும் கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இதில் உடன் தலையிட்டு இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதக அம்சங்களை ஒன்றிய அரசுக்கு எடுத்துச் சொல்லவும், கண்டித்திடவும் வேண்டும், உண்மையில் இத்திட்டம் கிராமப்புற வேலை வாய்ப்பை பறிக்கும் திட்டமாக மாறிவிட்டது எனவே இதற்கான சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதும் மாநிலங்களின் உரிமைக்காக குரல் எழுப்புவதும் மிகவும் அவசியம். காலம் உணர்ந்து செயல்படுமா தமிழ்நாடு அரசு?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button