கட்டுரைகள்

தோற்ற மயக்கத்திற்கு அப்பால்: தமிழக அரசியலின் ‘கார்ப்பரேட்’ மறுபிறப்பு

அருண் நெடுஞ்செழியன்

இந்திய அரசியல் இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இது கொள்கை வீரர்களின் காலம் என்பதை விட, திரைக்குப் பின்னால் இருந்து காய்களை நகர்த்தும் ‘கார்ப்பரேட் அரசியல் ஆலோசகர்களின்’ காலமாக மாறிவிட்டது.

பிரசாந்த் கிஷோர் (I-PAC), ஜான் ஆரோக்கியசாமி போன்ற உத்தியாளர்கள், அரசியலை ஒரு மக்கள் இயக்கமாகப் பார்க்காமல், ‘சந்தைப்படுத்துதல்’ களமாக மாற்றியுள்ளனர்.

ஒரு மாநிலத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருக்க வேண்டுமா அல்லது லாப நட்டக் கணக்கிடும் நிறுவன ஆலோசகர்களிடம் இருக்க வேண்டுமா என்ற தார்மீகக் கேள்வி எழுகிறது. மக்களின் உணர்வுகளை வெறும் தரவுகளாகப் பார்த்து, அதைத் தன் பிம்ப நலனுக்காகக் கையாள்வது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அத்தகைய ஒரு ‘ஆன்மாவற்ற’ அரசியலின் பின்னணியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

1. பண்பாடு எனும் திரைக்கதை

தமிழக முதல்வர் விஜய், எதிர்கட்சிகளாக இருக்கிற திமுக தலைவர் ஸ்டாலின், அதன் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாழ்த்துப் பெற்றது ஒரு மிகப்பெரிய ‘அரசியல் நாகரிகமாகப்’ பார்க்கப்படுகிறது. இதுவரை அவரை விமர்சித்து வந்த மாற்று முகாம்களைச் சேர்ந்தவர்களே வியந்து பாராட்டும் அளவிற்கு இந்த ‘பண்பாட்டு நகர்வு’ ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தத் ‘தோற்ற மயக்கத்திற்கு’ அப்பால் உள்ள அரசியலை அறிவுஜீவிகள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். விஜய் இன்று வெளிப்படுத்தும் இந்த அதீத முதிர்ச்சியும், பண்பாடும் ஒரு தலைவரின் ‘இயல்பூக்கமான’ வளர்ச்சியா அல்லது ‘திட்டமிடப்பட்ட’ ஒன்றா?

விஜய் ஆட்சிக்கு வர உதவியது முதல், வந்த பின்னர் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு ‘கார்ப்பரேட் கையேட்டின்’ படிதான் நடக்கிறது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராகச் செயல்படுவதை விட, ஒரு திறமையான ‘செயலாக்குபவராக’ (Performer) இருக்கிறார்.

இந்தத் திரைக்கதைக்கு பின்னால் இருந்து காட்சிகளை இயக்கும் ‘சாவியாக’ ஒரு உத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது. ஒரு ‘நிழல் முதலமைச்சராக’ இருந்து, விஜய்யின் ஒவ்வொரு அசைவையும், பேச்சையும், யாரைச் சந்திக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இவர்கள்தான். இது ஒரு தலைவரை உருவாக்குவதல்ல, ஒரு ‘தயாரிப்பை’ சந்தைப்படுத்துவது போன்றது.

2. பிம்பத்தைச் சீரமைக்கும் உத்திகள்

விஜய் போன்ற ஒரு பெரிய நடிகர் அரசியலுக்கு வரும்போது, அவர் மீது விழும் முதல் விமர்சனம் “அனுபவமற்றவர்” அல்லது “அரசியல் பண்பாடு தெரியாதவர்”. இந்த விமர்சனங்களை ஒரே நாளில் துடைத்தெறிய உத்தியாளர்கள் பயன்படுத்திய ஆயுதம் இந்தச் சந்திப்புகள். இது பொதுவெளியில் ஒரு தலைவனின் பிம்பத்தை நிலைநிறுத்தும் ஒரு தற்காப்பு வியூகம். சந்திப்புகள் எப்போது நடக்க வேண்டும், யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது அனைத்தும் மக்களின் ‘மனவோட்டக் கணிப்பின்’ அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை.

திமுக காரர்கள் முதல் சீமானின் தொண்டர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் அமைதிப்படுத்தும் ஒரு துல்லியமான கணக்கீடு இது. இந்தச் சந்திப்புகளுக்கு அடுத்த நாளில், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட அந்தச் செய்தி, ஒரு தலைமை அதிகாரி தனது நிறுவனத்தின் செயல்பாட்டுத் தரத்தை உயர்த்த மேற்கொள்ளும் ‘மின்னல் வேக ஆய்வு’ போன்றது. “பேச்சில் பண்பாடு, செயலில் வேகம்” என்ற ஒரு சமநிலையான ஆளுமையை இது மக்கள் மத்தியில் விதைக்கிறது.

3. சினிமா கவர்ச்சியும் மக்களின் ‘பொதுப்புத்தி’ சிதைவும்

இந்தக் கார்ப்பரேட் உத்திகளுக்கு அடித்தளமாக அமைவது, மக்களின் பொதுப்புத்தியை (Common Sense) மழுங்கடிக்கும் ‘சினிமா கவர்ச்சி’ ஆகும். வெள்ளித்திரையில் கதாநாயகனாகப் பார்த்துப் பழகிய ஒரு பிம்பம், நிஜ வாழ்விலும் தங்களை இரட்சிக்கும் என்ற மக்களின் உளவியல் பலவீனத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன. சினிமா பிம்பத்திற்கும் நிஜ ஆளுமைக்கும் இடையேயான எல்லையை மக்கள் மறந்துவிடும்போது, அங்கே பகுத்தறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, உணர்ச்சிவசப்பட்ட வழிபாட்டு முறை அரசியலாக மாறுகிறது.

வரலாற்றில் இந்தத் “திரை-அரசியல்” நகர்வு ஒன்றும் புதியதல்ல. ஆனால், இன்று அது அல்காரிதம் சார்ந்த சந்தைப்படுத்தலாக மாறியுள்ளது.

  • எம்.ஜி.ஆர் மாதிரியின் மறுபதிப்பு: தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர் திரையில் கட்டமைத்த ‘ஏழைகளின் தோழன்’, ‘நீதி காப்பவன்’ என்ற பிம்பம் மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்தது. அவர் நிஜ அரசியலுக்கு வந்தபோது மக்கள் அவரை ஒரு தலைவனாகப் பார்க்கவில்லை, தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்தனர். விஜய் அரசியலிலும் இதே “எம்.ஜி.ஆர் ஃபார்முலா” கார்ப்பரேட் முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  • சர்வதேசப் பாடங்கள் – ரீகன் முதல் ஜெலென்ஸ்கி வரை: அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஒரு ஹாலிவுட் நடிகர். திரையில் அவர் வெளிப்படுத்திய அமெரிக்கப் பெருமிதம் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றது. மிகச் சிறந்த உதாரணம், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கி . அவர் தொலைக்காட்சியில் ‘மக்களின் அதிபர்’ என்ற தொடரில் சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்து அதிபராவது போல நடித்தார். அந்தத் திரைக் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பில், உக்ரைன் மக்கள் அவரை நிஜ அதிபராகவே தேர்ந்தெடுத்தனர்.

விஜய்யின் அரசியலும் இந்த உலகளாவிய ‘ரீகன்-ஜெலென்ஸ்கி’ கோட்பாட்டின் நீட்சிதான். திரையில் அவர் பேசிய வசனங்களையும், காட்டிய அதிரடிகளையும் நிஜ நிர்வாகத் திறனாக மக்கள் பொதுப்புத்தி நம்பத் தொடங்குவதே கார்ப்பரேட் ஆலோசகர்களின் முதல் வெற்றி.

4. இன்ஸ்டாகிராம் அரசியலும் ‘தோற்ற மயக்க’ ஆபத்தும்

நவீன தொழில்நுட்ப அரசியல், அடிமட்டத் தொண்டர் கட்டமைப்பை தவிர்த்துவிட்டு, சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி இயங்குகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற தளங்கள் மக்களின் சிந்தனை முறையையே மாற்றியமைத்துள்ளன.அதாவது, நிஜத்தை விட நிஜம் போன்ற ஒரு போலி பிம்பம் சக்திவாய்ந்ததாக மாறும் நிலை.

  • கட்சியின் கொள்கைகளை விட 15 நொடி இன்ஸ்டாகிராம் ரீல்களும், பின்னணி இசைகளும், சினிமாத்தனமான ஸ்லோ-மோஷன் காட்சிகளுமே பிரதானமாக இருக்கின்றன. தொண்டர்களின் உணர்வுகளை விட, அல்காரிதம்களின் ‘விருப்பங்கள்’ மற்றும் ‘பகிர்வுகள்’ இங்கே கணக்கிடப்படுகின்றன.
  • தலைவருக்குப் பின்னால் இருக்கும் தரவுகள் நிறைந்த “கட்டுப்பாட்டு அறை” தான் அவரை இயக்கும் “தொலையியக்க கருவி” (Remote Control). கட்சியின் கொள்கை அறிக்கை, மேடைப் பேச்சுகளின் ஒவ்வொரு சொல்லாடல் என அனைத்தும் முன்கூட்டியே எழுதப்படுகின்றன. தலைவன் எப்போது பேச வேண்டும் என்பதை விட, மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்கள் என்பதைத் தரவுகள் மூலம் கணித்து அது உரையாக்கப்படுகிறது.
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அந்த ‘அணுக முடியாத ஆளுமை’த் தன்மையை அப்படியே நகலெடுத்து, ஒரு புதிய பிம்பம் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத கேள்விகளையோ அல்லது தன்னிச்சையான ஊடகச் சந்திப்புகளையோ முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம், இந்த ‘அரசியல் தயாரிப்பில்’ எந்த ஒரு சிறு பிழையும் ஏற்படாமல் பாதுகாக்கும் ஒரு இரும்புத்திரை வியூகம் இது.

 

5. கரூர் துயரம்: 41 உயிர்களும் ஸ்கிரிப்ட் தோற்ற இடமும்

கரூரில் 41 பேர் உயிரிழந்த அந்தப் பேரிடர், இந்த ‘தீவிரக் கட்டுப்பாட்டு’ மாதிரியின் போதாமையைத் தோலுரித்துக் காட்டியது. அரசியலின் தற்செயல் தன்மைகளை அல்காரிதம் மூலம் கையாள நினைக்கும் இந்த அமைப்பால், மரண ஓலங்களுக்கு மத்தியில் பதிலளிக்க முடியவில்லை. ஒரு நெருக்கடி நேரத்தில் களத்திலேயே தங்கி மக்களை வழிநடத்த வேண்டிய ‘தலைமைப் பண்புக்குப்’ பதிலாக, பாதுகாப்பான இடத்தைத் தேடி அந்த இடத்திலிருந்தே உடனடியாக வெளியேறியது இந்த “வடிவமைக்கப்பட்ட” தலைமையின் முதல் பலவீனம்.

பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க வைக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இது மக்களின் நேரடி ஆத்திரத்திலிருந்து தலைவரின் பிம்பத்தைப் பாதுகாக்கச் செய்யப்பட்ட ஒரு அரசியல்.துயரம் நடந்து 72 மணிநேரம் வரை மௌனமாக இருந்துவிட்டு, பின்னர் வெளியிடப்பட்ட காணொளி அறிக்கை என்பது ஒரு ‘பிராண்ட் சேதக் கட்டுப்பாட்டு’ நடவடிக்கையே தவிர, ஒரு தலைவனின் தார்மீகப் பொறுப்பல்ல. இந்த மனிதாபிமானச் சிக்கலை ஒரு நிறுவனத்தின் வரவு-செலவுத் திட்டத்தைப் போல நிதியுதவி மூலம் சரிசெய்ய முயன்றது, ஒரு தலைவனுக்கும் மக்களுக்குமான அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைச் சிதைத்துவிட்டது.

இந்தத் திட்டமிட்ட கார்ப்பரேட் தயாரிப்பு உத்தி வடிவமைப்பு எல்லாம் சூழல் சரியாக இருக்கிற நேரத்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால், எதிர்பாராமல் ஏதேனும் நடந்தால் உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் இந்தத் தலைமை திணறும். அதன் உண்மையான முகம் வெளிப்பட்டு வெளிறிப்போய், சில நாட்கள் கழித்து வேறொரு புதிய திட்டத்தோடு வந்து சரி செய்ய முயலும். கரூரில் 41 உயிர்கள் போய்க்கொண்டிருந்த போது, இந்த “ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட இயந்திரம்” மௌனமாக இருந்தது. அந்தத் துயரம் ஆலோசகர்களின் கையேட்டில் இல்லாத ஒரு ‘பிளாக் ஸ்வான்’ நிகழ்வு.

6. தார்மீகக் கேள்வி மற்றும் கொள்கை பலவீனம்

இவ்வகையான கார்ப்பரேட் உத்திகள், ஒரு மனிதனின் தனிப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த துயரம் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் துணிவு போன்ற அடிப்படை மாண்புகளைத் திட்டமிட்டே பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. இவை மனித உணர்வுகளின் மீது சவாரி செய்து, எந்தச் சூழலிலும் தனது பிம்ப நலனை மட்டுமே எப்பாடுபட்டாவது நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கமாகக் கொண்டவை.

மிக முக்கியமாக, இது அடிமட்டத்தி லிருந்து அல்லது தலைவரின் ஆழ்ந்த தார்மீகக் கொள்கையிலிருந்து உருவான கட்சியல்ல. மாறாக, சமூக வலைதளங்கள் மற்றும் மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, திராவிடமும் தமிழ் தேசியமும் மிகச் சரியாகக் கலக்கப்பட்டு, ஒரு ‘மின்மிகை இசைப்பட்டியல்’ (Digital Playlist) போல இது உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வாக்காளர்களைக் கவரும் வகையில் எது தேவையோ, அதுவே கொள்கையாக இங்கே உருமாற்றப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button