72வது ஆண்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போராடுவோம்!
மு. கண்ணகி

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் 1954 ஜூன் 4ல் தொடங்கப்பட்டது. வரும் ஜூன் 4ல் 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தேசிய நீரோட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் பெண்களின் அரசியல் எழுச்சி மிகப் பெரியதாகவும் இருந்தது. தங்களுடைய உரிமைகளைக் கூறிய ஒன்றாகவும் இருந்தது.
1927-ல் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்தியப் பெண்கள் மாநாடு (AIWC), இந்த அமைப்பு காங்கிரஸ், சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், உழைப்பாளர் கட்சிகளைச் சார்ந்த பெண்களை உள்ளடக்கியப் பெரும் குடையாக இருந்தது. இவ்வமைப்பு பெரும்பாலும் மேல்தட்டு பெண்களை உறுப்பினராக்குவதில் முனைப்பு காட்டியது.
கம்யூனிஸ்ட் பெண்கள், இந்த அமைப்பில் உழைப்பாளி பெண்களான விவசாய தொழிலாளிகள், உழைக்கும் பெண்கள் ஆகியோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதோடு உறுப்பினர் கட்டணத் தொகை ரூ.4 லிருந்து 2 அணாக்களாக குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார்கள். அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, கம்யூனிஸ்ட் பெண்கள் ஏ.ஐ.டபிள்யு.சி.யிலிருந்து விலகி, 1954 ஜூன் 4-ம் தேதி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை உருவாக்கினார்கள். ஆரம்ப காலத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்திற்கான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு என்பது, எப்போதுமே தலையீடற்ற ஒன்றாக இருந்தது. தனியான மகளிர் அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இல்லை. உழைப்பாளர் கட்சியை சேர்ந்த பி.டி. ரணதிவேயும், எஸ்.ஏ.டாங்கேயும் அந்தப் பெண்கள், கிசான் சபா, மாணவர் அமைப்பு போன்று எந்த அணியில் இருந்தார்களோ அந்த அமைப்புகளிலே தொடர்ந்து இருக்கட்டும் என்று வலியுறுத்தினார்கள். இருப்பினும், தோழர்கள் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராஜேஸ்வரராவ் ஆகியோர் ஆதரித்தனர்.
வர்க்க அரசியலை ஏற்கும் பெண்களுக்கான தனி அமைப்பை உருவாக்கும் பணி நம்பூதிரிபாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் பெண்கள் உரிமை, விடுதலை, சமத்துவம், சமூக, அரசியல் பொருளாதார விடுதலை, சட்ட ரீதியான, நியாயமான பல உரிமைகளும், பாலின சமத்துவம், கல்வி, மறுக்கப்பட்ட வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடிய அமைப்பு. பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகவும், தேவதாசி முறை ஒழிப்பு, பெண்சிசுக் கொலை, உடன்கட்டை ஏறும் சதி, வரதட்சணைக் கொடுமை, விதவைகள் கொடுமை, பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை போன்றவற்றில் இருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டங்கள் நிறைவேற்றிய அமைப்பு.
நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தி அவர்களுடன் இணைந்தும் தலைமையேற்றும் ஏராளமான பெண்கள் சட்ட மறுப்பு இயக்கம், கதர் இயக்கம், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், மதுவிலக்கு மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம், தண்டி யாத்திரை, உப்பு சத்தியாக்கிரக இயக்கம் போன்ற ஏராளமான போராட்டங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்று அந்த தளத்திலேயே உயிர் இழந்தவர்கள் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள்.
சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் பெண்களின் நலனுக்கான பல்வேறு சட்டங்கள் உருவான காலகட்டத்தில் மாதர் சம்மேளனத்தின் தலைவர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், செயல்பட்ட ரேணு சக்ரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து மறுப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காட்டப்பட்ட பாகுபாடுகள், மகப்பேறு விடுப்பு, சமகூலி உள்ளிட்டவை இல்லாமை மற்றும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து பெண்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றப்படுவதற்காக வலுவாகப் போராடினார்கள்.
இதன் காரணமாக கணவனைப் பிரிந்து தனியாக வாழும் காலத்திலும் பராமரிப்புத் தொகை பெறுவதற்கான உரிமை, சொத்துரிமை, வரதட்சணை தடுப்புச் சட்டம், பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான உரிமை, மகப்பேறு விடுப்பு, சமகூலி உள்ளிட்ட உரிமைகளை இந்தியப் பெண்கள் பெற்றனர்.
மாதர் சம்மேளனத்தின் ஒப்பற்ற தலைவராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9 முறை உறுப்பினராக இருந்தவர் பெண் போராளி கீதா முகர்ஜி. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் அளிக்குமாறு கீதா முகர்ஜி தலைமையிலான குழுவிடம்தான் ஒன்றிய அரசு பொறுப்பு கொடுத்தது. குறிப்பிட்ட காலத்தில் திறம்பட செயலாற்றி ஒன்றிய அரசுக்கு அவர் அறிக்கை அளித்தார். அமைச்சர் பதவி தேடி வந்த போதும் அதனை வேண்டாம் என மறுத்த கீதா முகர்ஜி, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
அகில இந்தியச் செயலாளர் ஆனி ராஜா தலைமையில் நாடாளுமன்றத்திற்குள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் சேலைகளில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுமாறு ஆனிராஜா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஒரு வார காலத்திற்குள் சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சொல்ல வேண்டும் என நீதிமன்றம் நெருக்கடி கொடுத்தது. இதனால் பிரதமர் மோடி அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி சட்டத்தை நிறைவேற்றினார். அதன் பிறகும் கிடப்பில் போடப்பட்டது.
அந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்ற பெயருடன் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதுவரை நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு 14 சதவீதமே இருந்துள்ள நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை உயர இந்தச் சட்டம் உதவுகிறது.
சட்டப் பிரிவு 330A மக்களவையில் இடஒதுக்கீடு பெறுவதையும், சட்டப் பிரிவு 332A மாநில சட்டமன்றங்களில் இடஒதுக்கீட்டை பெறுவதையும் உறுதி செய்கின்றன. ஆனால், இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட இயலாதபடியான மோசடி ஒன்றை ஒன்றிய மோடி அரசு செய்துள்ளது. இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 334A என்பது இச்சட்டத்தை அமல்படுத்தும் முறை, காலவரம்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றைக் குறித்ததாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் பெண்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் அமலாக்கத்திற்கு வரவில்லை. ஏனெனில், இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் பின்பான தொகுதி மறுவரையறை இரண்டும் நடைபெற்ற பிறகே அமலாக்கத்திற்கு வரும் என்று அரசு கூறியது,
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், காலம் தாழ்த்துவதற்காகவே திட்டமிட்டுச் செய்வதாகவே அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 2024 தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமலாகவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் துவங்கப்படவே இல்லை. அதோடு மாநிலங்களை வஞ்சிக்கும் தொகுதி மறுவரையறையை பல மாநிலங்கள் எதிர்த்துப் போராடி வருகின்றன. இதனால் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகிய நிபந்தனைகளில் இருந்து விலக்கி, ஒன்றிய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஏப்ரல் 2026 முதல் இச்சட்டத்தை அமலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் இந்த ஆண்டு அமைப்பு தினத்தை, பெண்களின் அரசியல் உரிமைக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித நிபந்தனையுமின்றி ஒன்றிய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் மக்கள் இயக்கமாக எடுக்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனுவாக அளிப்பது, ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்களை நடத்துவது என்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. இதனுடன் உழைக்கும் பெண்களின் போராட்ட மரபுகளை மகிழ்வுடன் கொண்டாடவும் மாதர் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
தமிழகத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை, வாழிடங்கள் இன்மை, சாணிப்பால், சவுக்கடி, தீண்டாமைக் கொடுமைகள், எண்ணற்ற கொடுமைகளை எதிர்த்தும், “மானம் காப்போம், பஞ்சம் தீர்ப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நடத்திய போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளது. தடைகளைத் தகர்த்து இடையூறுகளைக் கடந்து பாதிக்கப்பட்ட பெண்களின் இன்னல் நீக்கிட இன்றுவரை எண்ணற்ற கோரிக்கைகளுக்காக ஏராளமாகப் போராடி வரலாறு காணாத சாதனைகளைப் படைத்திட்ட இந்திய மாதர் சம்மேளனத்தின் அமைப்பு தினத்தை ஜூன் 4ல் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’ சட்டத்தை நிறைவேற்றத் தொடர்ந்து முழக்கமிடுவோம்.